From Wikipedia, the free encyclopedia
சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் என்பது, சிந்துவெளி நாகரிக அழிபாடுகளிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான முத்திரை குத்துவதற்கான அச்சுக்களிலும், அவற்றின்மூலம் முத்திரை குத்தப்பட்ட பல களிமண் வில்லைகளிலும் காணப்படுகின்ற வரிவடிவங்கள் ஆகும். இவை அக்காலத்தில் சிந்துவெளி மக்களால் பேசப்பட்ட மொழிக்கான வரிவடிவங்களாகக் கருதப்படுகின்றன. கிடைத்த சான்றுகளின்படி இவ்வரிவடிவங்கள் கி.மு 2,500 அளவில் பயன்பாட்டில் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. சுமார் 450 வெவ்வேறான குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ் வரிவடிவங்கள் இன்னும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படவில்லை. 1920ல் இவ் வரிவடிவங்கள் வெளிக்கொணரப்பட்ட பின்னர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள அறிஞர்கள் பலர் இவ்வரிவடிவங்களை வாசித்தறிய முயன்றுவருகின்றார்கள். எனினும் 1960 களுக்கு முன்னர் இவ்வாராய்ச்சி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது.
சிந்துவெளி வரிவடிவம் | |
---|---|
எழுத்து முறை வகை | வாசித்து அறியப்படாதது
வெண்கலக் கால எழுத்து |
காலக்கட்டம் | கி.மு 3500–1900 [1][2][3] |
திசை | Right-to-left, boustrophedon |
மொழிகள் | அறியப்படவில்லை (பார்க்க அரப்பா மொழி) |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Inds (610), Indus (Harappan) |
குறியீடுகளின் தொடக்ககால எடுத்துக்காட்டுக்கள் தொடக்ககால அரப்பா, சிந்துவெளி நாகரிகச் சூழலில் கிடைக்கின்றன. இவை கி.மு 35 நூற்றாண்டுகளுக்கு முந்தியவையாக இருக்கலாம்.[4][5] கி.மு 2600 முதல் கி.மு 1900க்கு இடைப்பட்ட முதிர் அரப்பாக் காலத்தில் தட்டையான சதுரவடிவ முத்திரைகளிலும் கருவிகள், அணிகள், மட்பாண்டங்கள் போன்ற பிற பொருட்களிலும், இவ்வாறான குறியீடுகளின் தொடர்கள் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் வெட்டுதல், செதுக்குதல், பூசுதல், அழுத்திப் பதித்தல் போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்திக் குறித்த பொருட்களில் பொறிக்கப்பட்டுள்ளன. குறியீடுகள் பொறிக்கப்பட்ட பொருட்களும், மாவுக்கல், எலும்பு, ஓடுகள், சுடுமண், மணற்கல், செப்பு, வெள்ளி, பொன் போன்ற பல வகைகளாகக் காணப்படுகின்றன.[6]
கி.மு 1900க்குப் பின்னர், அதாவது முதிர் அரப்பாக் காலத்தின் கடைசிக் கட்டத்துக்குப் பின்னர், குறியீடுகளின் முறைப்படியான பயன்பாடு முடிவுற்றதாகக் காணப்படுகிறது. சில அரப்பாக் குறியீடுகள், கி.மு 1100 (இந்திய இரும்புக் காலத்தின் தொடக்கம்) வரை காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குசராத்தில் உள்ள வெட் துவாரகைக்கு அருகில் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூன்றுதலை விலங்குடன் கூடிய பிற்காலச் சிந்துவெளி முத்திரைகளை வெளிப்படுத்தியுள்ளன. பிந்திய அரப்பாக் குறியீடுகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், மினுக்கமுள்ள சிவப்புப்பாண்டக் கிண்ணங்கள், தட்டுகள், கால் பொருத்திய கிண்ணம், துளைகள் உள்ள சாடிகள் போன்ற கி.மு 16 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஏராளமான மட்பாண்டப் பொருட்கள் துவாரகை, ரங்பூர், பிரபாசு ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. வெப்பவொளிர்வுக் காலக்கணிப்பு வெட் துவாரகையின் மட்பாண்டங்கள் கி.மு 1528ஐச் சேர்ந்தவையாகக் காட்டுகின்றன. இது, அரப்பாக் குறியீடுகள் கி.மு 1500 வரையாவது பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றாகக் கொள்ளப்படுகிறது.[7]
கிடைக்ககூடிய சான்றுகளின்படி இவ்வரிவடிவத்தின் தன்மைகள் குறித்துச் சில தகவல்கள் தெரியவந்துள்ளன.
ஒரு புறத்தில் பல ஆய்வாளர்கள் சிந்துவெளிக் குறியீடுகளை வாசித்தறிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கும்போது, மைக்கேல் விட்செல், இசுட்டீவ் ஃபாமர் ஆகியோர் இக்குறியீடுகள் மொழிகளுக்கானவை அல்ல என்றும் இவை குடும்பங்கள், இனக்குழுக்கள், கடவுள்கள், மதக் கருத்துருக்கள் போன்றவற்றுக்கான குறியீடுகளே என்றும் ஒரு எடுகோளை முன்வைத்தனர்.[8] 2004 ஆம் ஆண்டில் தாம் எழுதிய கட்டுரையொன்றில், ஃபாமர், இசுப்புரோட், விட்செல் ஆகியோர் இக்குறியீடுகள் மொழிக்கானவை அல்ல என்ற தமது கருத்தை நிறுவப் பல வாதங்களை முன்வைத்தனர். பொறிப்புக்கள் மிகமிகச் சுருக்கமாக இருத்தல், அரிதாகக் காணப்படும் குறியீடுகள் பெருமளவில் இருத்தல், மொழிகளுக்குப் பொதுவான, குறியீடுகள் திரும்ப வருதல் ஒழுங்கற்ற முறையில் அமையும் தன்மை குறைவாக இருத்தல் என்பன இவர்களது வாதங்களுள் முக்கியமானவை.[9]
2005 ஆம் ஆண்டில், விட்செல் முதலானோரின் கருத்தை மறுத்த அஸ்கோ பார்ப்போலா, முன் குறித்த வாதங்கள் இலகுவாகப் பிழையென நிறுவப்படக்கூடியவை என்றார்.[10] சீன மொழியில், பெருமளவில் அரிதாக வரும் குறியீடுகள் இருப்பதை எடுத்துக்காட்டிய பர்ப்போலா, தொடக்ககால படவெழுத்து முறையில் எழுதப்பட்ட குறைந்த நீளப் பொறிப்புக்களில் குறியீடுகள் திரும்ப வருவதற்கான காரணங்கள் கிடையாது என்றார். 2007ம் ஆண்டில் விரிவுரை[11] ஒன்றில் மீண்டும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ஃபாமர் முதலானோரின் முக்கியமான 10 வாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்தார். ஒரு எழுத்துமுறை, சில குறியீடுகளை ஒலிக்கக்கூடிய வகையில் "ரீபசு" (rebus) கோட்பாட்டைப் பயன்படுத்துமானால், சிறு பெயர்ச்சொல் தொடர்களும், முழுமையற்ற வாக்கியங்களும்கூட, முழுமையான ஒரு மொழிக்குரிய எழுத்து முறையாகக் கொள்ளப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சவாலாக அமைந்துள்ள விடயங்களுள் பின்வருவனவும் அடங்கும்.
இந்த வரிவடிவம் தொடர்பான சர்ச்சையில் முக்கிய இடம்பெறுவது, இது எத்தகைய மொழிக்காகப் பயன்பட்டது என்பது தொடர்பிலேயாகும். பொதுவாக இரண்டு கொள்கைகள் ஆய்வாளர்களிடையே நிலவின. இது முதல்நிலைச் சமஸ்கிருத மொழிக்கானது (ப்ராகிருதம்) என்பது ஒரு கொள்கை. இல்லை இது தமிழிய மொழிக்கான (தமிழ்) எழுத்து வடிவமே யென்பது இரண்டாவது கொள்கை.
உருசிய அறிஞரான யூரி நோரோசோவ், சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி ஒட்டுநிலைத் தமிழிய மொழியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கருத்து வெளியிட்டார்.[12] இவருடைய கருத்துக்கு முன்பே என்றி ஏராசு (Henry Heras) முந்து தமிழிய மொழி என்ற எடுகோளின் அடிப்படையில் சில குறியீடுகளுக்கான தனது வாசிப்புக்களை வெளியிட்டிருந்தார்.[13]
பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் ஆஸ்கோ பர்ப்போலாவும், சிந்துவெளி எழுத்துக்களும், அரப்பா மொழியும் பெரும்பாலும் தமிழிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தாகவே இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.[14] 1960'கள் முதல் 1980'கள் வரை இவரது தலைமையில் ஒரு பின்லாந்துக் குழுவினர் கணினிப் பகுப்பாய்வுகளின் மூலம் சிந்துவெளிக் குறியீடுகளை ஆய்வு செய்தனர். அரப்பா மொழி முந்து தமிழ் மொழி (கற்பனை மொழி) என்ற எடுகோளின் அடிப்படையில் பல குறிகளுக்கான தமது வாசிப்பை அவர்கள் முன்வைத்தனர். இவர்களது சில வாசிப்புக்கள் ஏராசு, நோரோசோவ் ஆகியோரது வாசிப்புக்களுடன் பொருந்தின ("மீன்" குறியீட்டைத் தமிழ்ச் சொல்லான "மீன்" என்னும் சொல்லாகவே வாசித்தமை), வேறு சில முரண்பட்டன. 1994 வரையான பர்ப்போலாவின் ஆய்வுகளின் விரிவான விளக்கங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்தறிதல் (Deciphering the Indus Script) என்னும் அவரது நூலில் தரப்பட்டுள்ளன.[15] தமிழ்நாட்டில் அண்மையில், சிந்துவெளிக் குறியீடுகள் எனக் கருதப்படும் குறியீடுகளுடன் கூடிய புதியகற்காலக் (2 ஆயிரவாண்டுத் தொடக்கம். அரப்பாவின் வீழ்ச்சிக்கு முந்திய காலம்) கற்கோடரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தமிழிய மொழிக் கருதுகோளுக்கு வலிமை சேர்ப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[16][17] 2007 மே மாதத்தில், தமிழ்நாடு தொல்லியல் பகுதியால் பூம்புகாருக்கு அண்மையில் உள்ள மேலப்பெரும்பள்ளம் என்னும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில், அம்புத்தலைக் குறியீடுகளுடன்கூடிய பானைகள் கிடைத்தன. இந்தக் குறிகள், 1920ல் மொகெஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளிலுள்ள குறியீடுகளுடன் ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.[18]
ஆஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சி யாளர்கள் சமஸ்கிருதம், கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிக்கிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான ரிக் வேதம் நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற நகரப் பண்பாடு ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான குதிரை, சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்து எழுத்தாய்வு, தொல்லியல் ஆய்வாளர் நா. ப. பூரணச்சந்திர ஜீவா என்பவர் 2004 இல் வெளியிட்ட "சிந்து வெளியில் முந்து தமிழ்" என்ற நூலில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு உரியவர்கள்
(தமிழே ள்) என்று சான்றுகளுடன் விளக்குகிறார்.[சான்று தேவை]. அந்நூலில் அனைத்து எழுத்துகளும் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. கடந்த 25 வருட ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கபட்டது அந்நூல்.
இரா. மதிவாணன் என்னும் தமிழறிஞர் சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்னைத்தையும் படித்து சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே என்று நிறுவியுள்ளார். அதை உலகநாடுகளின் பல மேடைகளிலும் முழங்கியுள்ளார். https://www.youtube.com/embed/kCeVvX-czZw எனும் வலையொளி இணைப்பில் சிந்துவெளி எழுத்துக்களில் உயிர்எழுத்துக்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். https://www.youtube.com/embed/UVgWd9zvCV4 எனும் வலையொளி இணைப்பில் சிந்துவெளி எழுத்துக்களில் மெய்எழுத்துக்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்தியத் தொல்லியலாளர் சிக்காரிபுர ரங்கநாத ராவ், தான் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்துவிட்டதாக அறிவித்தார். சிந்துவெளி நாகரிகத்தின் முழுப்பரப்பிலும் ஒருசீரான எழுத்துக்களே பயன்பாட்டில் இருந்தன என்ற எடுகோளுடன், அவ்வெழுத்துக்களை அவர் பினீசிய எழுத்துக்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒலிப் பெறுமானங்களை வழங்கினார். இவ்வாறான இவரது வாசிப்பு ஒரு சமசுக்கிருத வாசிப்பாக அமைந்தது. 1, 3, 4, 5, 7, 10, 12, 100 போன்ற எண்களுக்கும், ஏக்க, ட்ரா, சத்துஸ், பன்ட்டா, ஹப்தா/சப்தா, தசா, த்வாதசா, சத்தா என சமசுக்கிருத ஒலிப்புக்களாகவே வாசித்தார்.[19] பிந்திய அரப்பா வரிவடிவங்களுக்கும், பினீசிய எழுத்துக்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வடிவ ஒற்றுமைகளை எடுத்துக்காட்டிய அவர், பினீசிய எழுத்துக்கள் அரப்பா எழுத்துக்களிலிருந்தே உருவானதாக வாதித்தார்.
ஜான் ஈ. மிச்சினர் இவ்வாறான சில வாசிப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ராவினுடைய வாசிப்பு ஓரளவுக்கு முறையான அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், பெருமளவு தற்சார்பு கொண்டதாகவும், இந்திய-ஐரோப்பிய மொழி அடிப்படையை விளக்குவதில் இது நம்பத்தக்க முயற்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.[20]
பிந்திய அரப்பா வரிவடிவங்களின் மிகப் பொதுவாகக் காணப்படும் 10 குறிகள், பிராமி எழுத்துக் குறியீடுகளுடன் வடிவ அடிப்படையில் பெருமளவு ஒத்திருப்பது, சிந்துவெளிக் குறியீடுகளுக்கும், பிராமிக்கும் இடையே ஒரு தொடர்ச்சி இருப்பதற்கான சான்றாகக் காட்டப்படுகிறது.[21] எண்களின் பயன்பாட்டிலும் இவ்வாறான தொடர்ச்சிக்கான சான்றுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.[22][23] இவ்விரு எழுத்துமுறைகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த தாஸ் என்பவரின் புள்ளியியல் ஆய்வுகளும் மேற்படி தொடர்ச்சிக்கு வலுச்சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.[24]
காலத்துக்குக் காலம் தாங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்துவிட்டதாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள் எனினும், இவையெதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.