From Wikipedia, the free encyclopedia
காந்தார இருமொழிக் கல்வெட்டு அல்லது அசோகரின் காந்தார கல்வெட்டு (Kandahar Bilingual Rock Inscription) என்பது மௌரியப் பேரரசின் பேரரசர் அசோகரால் (r.269-233 கி.மு. ) சுமார் கி.மு 260 இல் கிரேக்க மற்றும் அராமேய மொழிகளில் பாறையில் செதுக்கப்பட்ட பிரபலமான இருமொழி கல்வெட்டு அரசாணை ஆகும். இது அசோகரின் அறியப்பட்ட முதல் கல்வெட்டு ஆகும். இது அவரது ஆட்சியின் 10 ஆம் ஆண்டில் (கிமு 260) எழுதப்பட்டது. இது அவரது ஆரம்பகால சிறு பாறைக் கலவெட்டுகள், மற்றும் பராபர் குகை கல்வெட்டுகள் அல்லது அவரது பெரும் பாறைக் கல்வெட்டு ஆணைகள் உட்பட மற்ற அனைத்து கல்வெட்டுகளுக்கும் முந்தையது. [2] இந்த முதல் கல்வெட்டானது செவ்வியல் கிரேக்கம் மற்றும் அராமேய மொழியில் தனித்தனியாக எழுதப்பட்டுள்ளன. இது 1958 இல் கண்டுபிடிக்கப்பட்டது, [1] சில அகழ்வாராய்ச்சி பணிகளின் போது 1 மீ உயரமான இடிபாடுகளின் கீழ், [3] இது KAI 279 என்று அழைக்கப்படுகிறது.
செய்பொருள் | Rock |
---|---|
அளவு | H55xW49.5cm[1] |
எழுத்து | கிரேக்கம் மற்றும் அரமேயம் |
உருவாக்கம் | circa 260 BCE |
காலம்/பண்பாடு | 3rd Century BCE |
இடம் | சில் சீனா, காந்தாரம், ஆப்கானித்தான் |
தற்போதைய இடம் | ஆப்கானிஸ்தானின் தேசிய அருங்காட்சியகம், ஆப்கானித்தான் |
இது சில நேரங்களில் அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது (பின்னர் அசோகரின்" "சிறு பாறைக் கல்வெட்டு எண் .4 என அழைக்கப்படுகிறது). [4] இது அவரது " பெரும் பாறைக் கல்வெட்டுகளுக்கு மாறாக, 1 முதல் 14 வரையிலான அவரது ஆணைகளின் பகுதிகள் கொண்டதாக உள்ளது. [5] ஆப்கானிஸ்தானில் உள்ள இரண்டு ஆணைகள் கிரேக்க மொழிக் கல்வெட்டுகளுடன் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று கிரேக்க மொழியிலும், அராமிக் மொழியிலும் உள்ள இந்த இருமொழி ஆணையாகும். மற்றொன்று காந்தார கல்வெட்டானது கிரேக்க மொழியில் மட்டுமே உள்ளது. [1] இந்த இருமொழி ஆணை செஹெல் ஜினாவின் மலைப்பகுதியில் உள்ள ஒரு பாறையில் காணப்பட்டது (சில்சினா, அல்லது சில் சீனா, "நாற்பது படிகள்" என்றும் அழைக்கப்படுகிறது). இது பண்டைய அலெக்சாந்திரியா அராச்சோசியாவின் மற்றும் மேற்கு பகுதியின் இயற்கை அரணாக இருந்துள்ளது. தற்போது காந்தகாரின் பழைய நகரம் மற்றும் காந்தாரத்தின் பழைய நகரமாகவும் உள்ளது. [6]
இந்த ஆணைக் கல்வெட்டு இன்றும் மலைப்பகுதியில் உள்ளது. [3] இந்தக் கல்வெட்டின் ஒரு மாதிரியானது காபூல் அருங்காட்சியகத்தில் உள்ளது. [7] இந்த அரசாணையில், அசோகர் கிரேக்க சமூகத்திற்கு "பக்தி" (" தருமம் " என்பதற்கான கிரேக்கச் சொல்லான யூசேபியாவைப் பயன்படுத்தப்பட்டுள்ளது) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். [8]
மௌரியப் பேரரசின் வடமேற்கில், குறிப்பாக தற்போதைய பாகித்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள பண்டைய காந்தாரத்திலும், தற்போதய தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அரக்கோசியா பகுதியிலும், கிமு 323 இல் , அலெக்சாண்டரின் வெற்றி மற்றும் குடியேற்ற முயற்சிகளைத் தொடர்ந்து கிரேக்க சமூகத்தினர் அங்கே வாழ்ந்துவந்தனர். அலெக்சாந்தருக்கு சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் அசோகரின் ஆட்சியின் போதும் இந்த சமூகங்கள் ஆப்கானித்தான் பகுதியில் குறிப்பிடத்தக்கதாகதாக இருந்துள்ளது தெரிகிறது. [1]
அசோகர் தனது ஆட்சியின் வன்முறை கொண்ட துவக்கத்தின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது நம்பிக்கையைப் பிரகடனப்படுத்துகிறார். மேலும் மனிதனையோ, விலங்குகளையோ தனது ஆட்சியில் கொல்வதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறார். இந்த கல்வெட்டுகளில் அவர் வலியுறுத்திய தர்மத்தை கிரேக்க மொழியில் யூசோபி ( εὐσέβεια ) "பக்தி" என்று மொழிபெயர்த்துள்ளார். இப்பகுதியை பேரரசர் அலெக்சாந்தர் கைப்பற்றும் வரை ஆண்ட அகாமனிசியப் பேரரசின் ஆட்சிமொழியாக அரமேயம் (அதிகாரப்பூர்வ அராமைக் என்று அழைக்கப்படுவது) இருந்ததை அராமிக் மொழியின் பயன்பாடு காட்டுகிறது. அதில் அராமைக் முற்றிலும் அராமைக்காக அல்லாமல், ஈரானிய மொழியின் சில கூறுகளை உள்ளடக்கியதாகத் தெரிகிறது. [9] டி. டி. கோசாம்பியின் கூற்றுப்படி, அராமைக்கில் உள்ளது, கிரேக்க மொழியின் சரியான மொழிபெயர்ப்பு அல்ல. இந்தியாவின் பொதுவான அதிகாரப்பூர்வ மொழியான மகதியில் உள்ள மூலத்திலிருந்து இரண்டும் தனித்தனியாக மொழிபெயர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த நேரத்தில் அசோகரின் பிற கல்வெட்டுகளில் அசோகரின் ஆட்சிப் பரப்பில் இருந்த கலிங்கம் போன்ற மொழியியல் ரீதியாக வேறுபட்ட பகுதிகளிலும் கூட, மகதி மொழியிலேயே ஆணைகள் வெட்டப்பட்டுள்ளன. [8] ஆனால் இது அராமிக் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.
12வது மற்றும் 13வது ஆணைகளின் நீண்ட பகுதிகளைக் கொண்ட அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகளில், காந்தாரத்தில் உள்ள அசோகரின் கிரேக்கத்தில் உள்ள மற்ற கல்வெட்டுகள் உட்பட, அசோகரின் அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டு ஆணைகளுடன் ஒப்பிடும்போது, இந்தக் கல்வெட்டு உள்ளடக்கத்தில் மிகவும் குறுகியதாகவும் பொதுவானதாகவும் உள்ளது. இது ஆரம்பத்திலும் முடிவிலும் துண்டிக்கப்பட்டதால் இன்னும் பலவற்றைக் கொண்டதாக இருந்திருக்கலாம்.
காந்தாரத்தின் இந்தப் பிரகடனமானது ஆப்கானிஸ்தானின் அந்தப் பகுதியின் மீது அசோகர் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பதற்கு சான்றாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்கு ஆதாரமாக இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது செலூக்கசின் கிமு 305 சமாதான உடன்படிக்கையில் சந்திரகுப்த மௌரியருக்கு இந்த நிலப்பரப்பைக் கொடுத்த பிறகு இருக்கலாம். [10] இப்பகுதியில் கணிசமான அளவு கிரேக்க மக்கள் இருந்ததை இந்த ஆணை காட்டுகிறது. மேலும் இது அகாமனிசியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பல தசாப்தங்களுக்குப் பிறகும், அராமிக் மொழி நீண்டகாலம் முக்கியத்துவத்துடன் இருந்ததையும் காட்டுகிறது. [1] [11] அதே சகாப்தத்தில், கிரேக்கர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட கிரேக்க பாக்திரியா பேரரசில் முதலாம் டியோடடசின் ஆட்சியின் கீழ் உறுதியாக நிலைகொண்டிருந்தனர். குறிப்பாக ஆப்கானித்தானின் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ள எல்லை நகரமான ஐ கனெமில் வேரூன்றி இருந்தனர்.
சிர்காரின் கூற்றுப்படி, கல்வெட்டு அரசாணையில் கிரேக்க மொழியின் பயன்பாடானது உண்மையில் காந்தாரத்தில் வசிக்கும் கிரேக்கர்களை நோக்கமாகக் கொண்டது. அதே சமயம் அராமிக் மொழியின் பயன்பாடானது கம்போஜர்களின் ஈரானிய மக்களை நோக்கமாகக் கொண்டது. [4]
கிரேக்க மற்றும் அராமிக் பதிப்புகள் ஓரளவு வேறுபடுகின்றன. மேலும் பிராகிருதத்தில் உள்ள அசல் உரையின் கட்டற்ற மொழி பெயர்ப்புகளாகத் தெரிகிறது. "எங்கள் மன்னரே, அரசர் பிரியதாசி ", "எங்கள் மன்னர், அரசர்" போன்ற கூற்றுகள் அசோகரின் அதிகாரத்தை அராமிக் உரையானது தெளிவாக அங்கீகரிக்கிறது. இது உண்மையில் அங்குள்ளவர்களை அசோகரின் குடிமக்கள் என்று உணர்த்துகிறது. அதேசமயம் கல்வெட்டின் கிரேக்க பதிப்பு "மன்னர் அசோகர்" என்ற எளிய கூற்றுடன், மிகவும் நடுநிலையானதாக உள்ளது. [4]
மற்ற நன்கு அறியப்பட்ட கிரேக்க கல்வெட்டான, அசோகரின் காந்தார கிரேக்க கல்வெட்டானது, இந்த இருமொழி பாறை கல்வெட்டுக்கு தெற்கே 1.5 கிலோமீட்டர் தொலைவில், பழங்கால நகரமான பழைய காந்தாரத்தில் (பஷ்தூ மொழியில் சோர் ஷார் அல்லது தாரி மொழி ஷஹர்-இ-கோனா என்று அறியப்படுகிறது. ), 1963 இல் கண்டறியப்பட்டது. [10] பழைய காந்தாரம் கிமு 4 ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாந்தரால் நிறுவப்பட்டது என்று கருதப்படுகிறது. அவர் பண்டைய கிரேக்கத்தில் Αλεξάνδρεια Aραχωσίας (அரச்சோசியாவின் அலெக்சாந்திரியா ) என்று அழைக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு சுண்ணாம்புக் கல்லால் ஆன கற்பலகையில் உள்ளது. இது ஒரு கட்டிடத்தில் பதித்து வைக்கப்படதாக இருக்கலாம், அதன் அளவு 45x69.5 செ.மீ. ஆகும். [6] [10] அந்தக் கற்பலகையின் தொடக்கமும் முடிவும் குறைபாடாக உள்ளது. அந்தக் கல்வெட்டின் அசல் கல்வெட்டு கணிசமான நீளம் கொண்டதாக இருந்திருக்கலாம் எனப்படுகிறது. மேலும் இந்தியாவின் பல இடங்களில் உள்ளதைப் போல அசோகரின் பதினான்கு கட்டளைகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கலாம். கல்வெட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழி மிக உயர்ந்த தரத்தில் உள்ளது மற்றும் தத்துவ நேர்த்தியைக் காட்டுகிறது. கிமு 3 ஆம் நூற்றாண்டில் எலனியக் காலத்தின் அரசியல் மொழியைப் பற்றிய ஆழமான புரிதலையும் இது காட்டுகிறது. அந்த நேரத்தில் காந்தாரத்தில் மிகவும் பண்பட்ட கிரேக்க மொழி பயன்பாட்டில் இருந்ததை இது குறிக்கிறது. [6]
கிரேக்க மொழியில் மேலும் இரண்டு கல்வெட்டுகள் காந்தாரத்தில் அறியப்படுகின்றன. ஒன்று தன்னை "அரிஸ்டோனாக்ஸின் மகன்" (கிமு 3 ஆம் நூற்றாண்டு) என்று அழைத்துக் கொண்ட ஒரு கிரேக்கரின் கலவெட்டு. மற்றொன்று நாரடோஸின் மகன் சோஃபிடோஸ் (கி.மு. 2ஆம் நூற்றாண்டு) எழுதிய நேர்த்தியான இசையமைப்பாகும். [12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.