From Wikipedia, the free encyclopedia
காசுமீரி மொழி ஒரு வடமேற்கு இந்திய-ஆரிய மொழியாகும். இது, முக்கியமாக இந்திய மாநிலமான சம்மு காசுமீரின் காசுமீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படுகிறது. இம் மொழி பேசும் 7,147,000 தொகையினரில், 6.797.587 [1]பேர் இந்தியாவிலும் மிகுதிப் பேர், 353,064[2] பாகித்தானிலும் உள்ளனர். இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஆரியப் பிரிவைச் சேர்ந்த இந்த மொழி புவியியல் அடிப்படையிலான துணைக் குழுவான தார்டிக் மொழிகள் குழுவில் அடங்குகிறது. இது இந்தியாவின் அட்டவணைப் படுத்தப்பட்ட 23 மொழிகளுள் ஒன்றாகும்.
காசுமீரி மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ks |
ISO 639-2 | kas |
ISO 639-3 | kas |
காசுமீரி ஒரு வினை இரண்டாவதாக வரும் சொல் ஒழுங்கு (V2 word order) கொண்ட ஒரு மொழியாகும். சாரதா எழுத்து முறையில் எழுதப்பட்ட சில ஆவணங்கள் இருந்தபோதும் காசுமீரி மொழி அண்மைக்காலம் வரை பேச்சு மொழியாகவே இருந்தது. பின்னர் இது பார்சிய-அரபி எழுத்துக்களில் எழுதப்பட்டது. தற்போது இம்மொழி, பார்சிய-அரபியில் அல்லது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வருகிறது. எழுதும் போது உயிர் எழுத்துக்களை எப்பொழுதும் பயன்படுத்துவதனால், பார்சிய-அரபியில் எழுதப்படும் மொழிகளுள் காசுமீரி தனித்துவமானது ஆகும்.
பல்வேறு அரசியற் காரணங்களினாலும் போதிய கல்வி வசதிகள் இல்லாமையாலும் காசுமீரி மொழிக் கல்வி பெரிதும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. இதனைப் பேசுவோர் தொகையும் குறைந்து வருகிறது. சம்மு காசுமீரி மாநிலத்தின் உத்தியோக மொழி காசுமீரி அல்ல என்பதும், இத் தகுதியை உருது மொழியே பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. காசுமீரி பேசுவோரிற் சிலர் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் அல்லது இந்தியைப் பயன்படுத்துகின்றனர். கடந்த சில பத்தாண்டுகளாக காசுமீரி மொழி இப்பகுதியிலுள்ள பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளுக்கான பாடத் திட்டங்களிலும் இதனைச் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
சார்ச்சு ஆபிரகாம் கிரியர்சன் என்பவர், 1919 ஆம் ஆண்டில் எழுதும்போது, தார்டிக் மொழிகளில் காசுமீரி மட்டுமே இலக்கியத்தைக் கொண்ட மொழி என்று குறிப்பிட்டார். காசுமீரி மொழியில் காணப்படும் இலக்கியங்கள் சுமார் 750 ஆண்டுகள் வரை பழமையானவை. இதுவே ஆங்கிலம் உள்ளிட்ட பல நவீன மொழி இலக்கியங்களின் வயதாக உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.