From Wikipedia, the free encyclopedia
எல்லப்பிரகத சுப்பாராவ் (Yellapragada Subbarao, தெலுங்கு: యెల్లప్రగడ సుబ్బారావు, சனவரி 12, 1895 - ஆகஸ்டு 9, 1948) இந்தியாவில் பிறந்து சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியவர். அமெரிக்காவில் வாழ்ந்த காலம் முழுதும் பச்சை அட்டை இல்லாமலேயே வாழ்ந்தவர். இவரது அளவுகடந்த அடக்கப் பண்பால் இவரது பெருமை பலராலும் முழுதும் அறியப்படாமல் போனது.[1][2][3]
எல்லப்பிரகத சுப்பாராவ் | |
---|---|
இந்திய அறிவியலாளர் | |
பிறப்பு | பீமாவரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | சனவரி 12, 1895
இறப்பு | ஆகத்து 9, 1948 53) | (அகவை
தேசியம் | இந்தியர் |
துறை | மருத்துவம் |
பணியிடங்கள் | லெடெர்ல் ஆய்வுகூடம் 1994) |
கல்வி கற்ற இடங்கள் | சென்னை மருத்துவக் கல்லூரி ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தசை இயக்கத்தில் அடினோசின் ட்ரை பாஸ்ஃபேட்டு மற்றும் கிரியாட்டின் பாஸ்ஃபேட்டு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கண்டறிதல். ஃபோலிக் அமிலம் தயாரிப்பு மீத்தோட்ரெக்சேட் தயாரிப்பு ஆரோமைசின் கண்டறிதல் டை எத்தில் கார்பமசின் கண்டறிதல் |
இவர் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த பீமாவரம் (தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது) எனும் ஊரில் ஏழை பிராமணக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவரின் நெருங்கிய உறவினர்கள் பலர் நோயால் இளமையிலேயே இறந்ததால் பள்ளிப் பருவம் அவருக்குக் கசப்பான அனுபவங்களையே தந்தது. இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒருவழியாக மூன்றாவது முயற்சியில் மெட்ரிக்குலேசன் தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College) இடைநிலைத் தேர்ச்சி பெற்று உயர்கல்வி கற்க சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
நண்பர்கள் மற்றும் கஸ்தூரி சூரியநாராயண மூர்த்தி போன்றோரின் பொருளாதார உதவியுடன் மருத்துவம் படித்தார். இந்த சூரியநாராயண மூர்த்தியே இவருக்குப் பின்னாளில் மாமானாரானார். பிரித்தானியப் பொருட்களைப் புறக்கணித்து சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டுமென காந்தியடிகள் வைத்த கோரிக்கையை ஏற்ற சுப்பாராவ் காதி ஆடைகளை அணிய அது அறுவையியல் பேராசிரியர் M.C.பிராட்ஃபீல்டு என்பவரின் ஆத்திரத்தைத் தூண்டியது. இதனால் எழுத்துத் தேர்வுகளில் நன்றாக எழுதியும் சுப்பாராவுக்கு அந்தக் காலத்தில் எம்.பி.,பி.எஸ்., க்கும் குறைவான எல்.எம்.எஸ் எனும் பட்டமே கிடைத்தது.
அரசு மருத்துவப் பணி கிடைக்காததால் சென்னையிலிருந்த மருத்துவர் இலக்குமிபதி ஆயுர்வேதக் கல்லூரியில் உடலியங்கியல் விரிவுரையாளராய்ப் பணியேற்றார். ஆயுர்வேத மருந்துகளின் குணப்படுத்தும் திறனால் கவரப்பட்ட அவர் அம்மருந்துகளுக்கு நவீன வடிவம் கொடுப்பதிலான ஆராய்ச்சியில் இறங்கினார்.
அமெரிக்கா செல்ல வேண்டுமென்ற இவரின் விருப்பம் சத்தியலிங்க நாயக்கர் அறக்கட்டளை, மல்லாடி அறக்கட்டளை மற்றும் இவரது மாமனார் திரட்டிய உதவிகள் ஆகியவற்றின் மூலம் சாத்தியமானது. 1922 அக்டோபர் 26 ஆம் பாஸ்டன் நகரில் இவர் முதன் முதலாக அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.
ஹார்வர்டு வெப்பமண்டல நோய்கள் மருத்துவப் (tropical medicine) பள்ளியில் பட்டயப் (diplamo) படிப்பு படித்து முடித்து அங்கேயே இளநிலை தொழில்முறைப் பணியாளர் தொகுதியில் (junior faculty member) உறுப்பினரானார். சைரஸ் ஃபிஸ்க் என்பவருடன் இணைந்து உடல்திரவங்களிலும் திசுக்களிலும் உள்ள ஃபாஸ்பரசை அளவிடும் முறையை உருவாக்கினார்.
தசை இயக்கத்தில் அடினோசின் ட்ரை பாஸ்ஃபேட்டு (ATP) மற்றும் கிரியாட்டின் பாஸ்ஃபேட்டு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கண்டறிந்தார். அதே வருடத்தில் முனைவர் (PhD) பட்டத்தையும் பெற்றார்.
ஹார்வர்டில் அவருக்கு நிலையான இடம் கிடைக்காமல் போகவே அமெரிக்கன் சயனமிடின் (American Cyanamid) ஒரு பிரிவான லெடர்ள் (Lederle Laboratories) ஆய்வகத்தில் இணைந்தார். அங்கே அவர் ஃபோலிக் அமிலத்தைத் தயாரிக்கும் முறையைக் கண்டறித்தார். அதன்பின் மரு. சிட்னி ஃபார்பர் உதவியுடன் மீத்தோ ட்ரெக்சேட் (Methotrexate) எனும் இன்றியமையாத புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டறிந்தார். அத்தோடு ஃபைலேரியா (filaria) நோயை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தும் மிக மிக முக்கியமான மருந்தான டை எத்தில் கார்பமசினைக் (DEC) கண்டறிந்தார். இவரின் வழிகாட்டுதலில் பெஞ்சமின் டக்கர் உலகின் முதல் டெட்ராசைக்ளின் மருந்தான ஆரியோமைசினைக் (Aureomycin) கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளிலேயே மிகப் பரந்த (extensive) ஆய்வின் விளைவாக நிகழ்த்தப்பட்டது.
தன்னலமற்ற அவரின் அளவுகடந்த அடக்கப் பண்பால் அவர் புரிந்த சாதனைகள் யாவும் குடத்திலிட்ட விளக்கென ஆயின. தன் கண்டுபிடிப்புகளை அவர் சந்தைப்படுத்திப் பணமாக்க முயன்றதில்லை. பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளித்ததில்லை. மற்ற அறிவியலாளர்களைப் போல் தன் கண்டுபிடிப்புகளை உலகெங்கும் பரப்பும் வகையில் விரிவுரை உலா சென்றதுமில்லை.
இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவர் பணிபுரிந்த அமெரிக்க நிறுவனமான அமெரிக்கன் சயனமிட் தான் புதிதாகக் கண்டறிந்த பூஞ்சைக்கு (Subbaromyces splendens) இவரது பெயரை வைத்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.