From Wikipedia, the free encyclopedia
அலாஸ்கா மூவலந்தீவு (Alaska Peninsula) அலாஸ்கா பெருநிலப்பகுதியிலிருந்து தென்மேற்கே 800 கிமீ (497 மைல்) தொலைவிற்கு நீண்டு அலூசியன் தீவுகளில் முடியும் மூவலந்தீவு ஆகும். இந்த மூவலந்தீவு அமைதிப் பெருங்கடலை பெரிங் கடலின் அங்கமாகிய பிரிஸ்டல் விரிகுடாவிலிருந்து பிரிக்கிறது.
இலக்கியங்களில் (குறிப்பாக உருசியாவில்) ‘அலாஸ்கா மூவலந்தீவு’ என்ற சொற்றொடர் வட அமெரிக்காவின் முழுமையான வடமேற்கு நீட்டலை அல்லது சட்டிப்பிடியையும் தீவுகளையும் தவிர்த்த தற்போதைய அலாஸ்கா மாநிலத்தைக் குறிக்கின்றது.
மிகவும் தீவிரச் செயற்பாட்டிலிலுள்ள எரிமலை மலைத் தொடர் அலூசியன் மலைகள் இந்த மூவலந்தீவின் முழு நீளத்திற்கும் பரவியுள்ளது. இந்த மலைத்தொடரில் கட்மயி தேசியப் பூங்கா, அனியச்சக் தேசிய நினைவகம் மற்றும் காப்பகம், பெச்சோராஃப் வனவிலங்குச் சரணாலயம், அலாஸ்கா மூவலந்தீவு தேசிய வனவிலங்கு உய்வகம், இசெம்பெக் தேசிய வனவிலங்கு உய்வகம் போன்ற பல வனவிலங்கு உய்வகங்கள் அமைந்துள்ளன.
அலாஸ்கா மூவலந்தீவின் தென்பகுதி கரடுமுரடாகவும் மலைப்பாங்காகவும் உள்ளது. வட பசிபிக் தட்டுப் புவிப்பொறையின் மேனோக்கிய புவியொட்டு செயலால் வட அமெரிக்க புவிப்பொறையின் மேற்குப் பகுதியின் கீழ் போனதால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. மூவலந்தீவின் வடபகுதி பொதுவாக சமவெளியாக, சதுப்பு நிலமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட மண்ணரிப்பினாலும் பொதுவான நில நடுக்க நிலைத்தன்மையாலும் இவ்வாறான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கடலோரங்களும் இதேபோல் வேறுபாட்டைக் கொண்டுள்ளன. வடக்கு பிரிஸ்டல் விரிகுடாவின் கடலோரம் பொதுவாக கலங்கியும் சேறாகவும் உள்ளது. ஆழம் குறைவாகவும் உள்ள இப்பகுதியில் அலையேற்ற இறக்கங்கள் கூடுதலான மாற்றங்களைக் கொண்டுள்ளன. எதிராக அமைதிப் பெருங்கடல் பக்கமுள்ள கடலோரத்தில் அலை ஏற்ற இறக்கங்கள் மிதமாக இருப்பதுடன் மிகுந்த ஆழத்துடனும் தெளிவான நீருடனும் உள்ளது.
மூவலந்தீவின் நிலப்பகுதி நான்கு நிர்வாகப் பிரிவுகளாக, மாவட்டத்திற்கு இணையான பரோக்களாக, பிரிக்கப்பட்டுள்ளன. இவை:
ஏரி மற்றும் மூவலந்தீவு பரோ மூவலந்தீவின் பெரும்பாலான நிலப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
சராசரி ஆண்டு மழை 24 அங் முதல் 65 அங் (610 மிமீ முதல் 1,650 மிமீ) வரை பெய்கிறது. கடலோரப்பகுதிகளில் கடுமையான சூறாவளிகளும் கடங்காற்றும், மழையும் காணப்படுகின்றது.குளிர்கால வெப்பநிலை −11°C முதல் 1°C வரையும் வேனிற்கால வெப்பநிலை 6°C முதல் 15°வரையும் நிலவுகின்றது. உயரமான இடங்களில் ஆண்டின் எந்நேரமும் உறைபனி ஏற்படலாம்.[1][2] இங்குள்ள வானிலை அலூசியன் தீவுகள், ஐசுலாந்து ஒத்ததாக உள்ளது.
அலாஸ்கா மூவலந்தீவில் ஐக்கிய அமெரிக்காவின் இயற்கையான, சிறிதும் சிதைவுறா வனவுயிர்களை பெருமளவில் காணவியலும். மெக்னீல் ஆறு, கத்மல் தேசியப் பூங்கா பகுதிகளில் காணப்படும் அலாஸ்காவின் பழுப்புக் கரடிகளைத் தவிர பெரும் எண்ணிக்கையில் ரெயின்டீர், மூஸ், ஓநாய் கூட்டங்களையும் நீர்ப்பறவைகளின் வாழ்விடங்களையும் காணலாம். இந்த மூவலந்தீவிலும் பிரிஸ்டல் விரிகுடாப் பகுதியிலும் ஏராளமான பழுப்புக் கரடிகளைக் காணலாம். இக்கரடிகளின் மிகுந்த மக்கள்தொகைக்கு இங்கு கிடைக்கும் உலகின் மிகப்பெரிய சாக்கை சால்மன்களை (Oncorhynchus nerka) உணவாகக் கொள்வதே காரணமாகும். இங்குள்ள பல ஏரிகளிலும் வளரும் இவ்வகை மீன் இப்பகுதியின் வாழ்க்கைவட்டத்திற்கு முதன்மையான கூறாகும். இந்த சால்மன் மீன்கள் கடலில் சிலகாலம் வாழ்ந்தபிறகு இங்குள்ள ஏரிகளுக்கு இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. வளரும் மீன்குஞ்சுகளுக்கு ஆழமான ஏரிகளில் உணவு ஏராளமாக கிடைக்கின்றது. ஓரிரு ஆண்டுகளில் நன்கு வளர்ந்து பின் கடலுக்கு இடம்பெயர்கின்றன.
மிக அரிதான பெரிய கடற்பறவைகளின் கூட்டங்களையும் கடலோரங்களில் காணலாம்.[2]
மூவலந்தீவின் கரடுமுரடான தென்பகுதியில் மேலும் கரடிகளையும் பல காக்கப்பட்ட வனவுயிரினங்களையும் காணலாம்.
கடலோரங்களில் வசிக்கும் மக்களைத் தவிர, அலாஸ்கா மூவலந்தீவிலுள்ள பெயர்பெற்ற சிற்றூர்கள்: கோல்டு பே, கிங் கோவ், பெர்ரிவல், சிக்னிக், சிக்னிக் ஏரி, சிக்னிக் கடலோரக் காயல், மோல்லர் துறைமுகம். இவற்றில் முதன்மையாக அலாஸ்காவின் பழங்குடிகள் வாழ்ந்தாலும் தங்களது வாழ்வாதாரத்திற்கு மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர். போபாஃப் தீவில் இருந்தாலும் சாண்டு முனை சிற்றூர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படலாம்; இது மூவலந்தீவின் தென்கடலோரத்தில் அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.