From Wikipedia, the free encyclopedia
அம்னோ என்பது தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு என்பதின் சுருக்கம் ஆகும் (United Malays National Organisation). மலாய்க்காரர்களின் மலாய் மேலாதிக்க தன்மையை நிலைநாட்டி இனம், சமயம், நாடு ஆகியவற்றின் கண்ணியத்தைக் கட்டிக் காக்க இந்தக் கட்சி போராடி வருகிறது. மலாய்க்காரர்களின் கலாசாரத்தைத் தேசியக் கலாசாரமாகப் பாதுகாத்து நிலைநிறுத்தி, இஸ்லாமிய சமயத்தை விரிவு படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அம்னோ UMNO 巫统 | |
---|---|
நிறுவனர் | ஓன் ஜாபார் |
தலைவர் | அகமட் சாகிட் அமிடி (Ahmad Zahid Hamidi) |
துணைத் தலைவர் | முகமது பின் ஹாஜி ஹசன் |
பொதுச் செயலாளர் | அகமட் மசுலான் |
குறிக்கோளுரை | மலாய்க்காரர்கள் வாழ்க (Hidup Melayu) |
தொடக்கம் | 1946 மே 11 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
செய்தி ஏடு | உத்துசான் |
இளைஞர் அமைப்பு | அம்னோ இளைஞர் அணி |
கொள்கை | மலாய் மேலாதிக்கம் பழமைவாதம் பொருளாதார தாராளவாதம் இஸ்லாமியர்களுக்கு |
அரசியல் நிலைப்பாடு | வலது சாரி |
தேசியக் கூட்டணி | பாரிசான் நேசனல் |
நாடாளுமன்ற மக்களவை இடங்கள் | 79 / 222 |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www.umno-online.com அம்னோ இணையத்தளம் |
இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரித்தானியர்கள் மலாயாவுக்கு மறுபடியும் திரும்பினர். மலாய்க்காரர்களுக்காகப் பிரித்தானியர்கள் மலாயா ஒன்றியம் (ஆங்கில மொழி: Malayan Union) எனும் ஓர் அமைப்பை உருவாக்கினர். எனினும், அதன் சட்டக் கட்டமைப்பு வேலைகளில் இருந்த பிரச்னைகளின் காரணமாக எதிர்ப்புகள் தோன்றின.
மலாயா ஒன்றியத்தின் மூலமாக மலாய் மாநிலங்கள் பிரித்தானிய முடியாட்சிக்குள் கொண்டு வரப்படுவதாக மலாய்க்காரர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் மலாய்க்காரர்களின் அரசுரிமையைப் பாதிக்கக்கூடிய அம்சங்களும் அந்தச் சட்டக் கட்டமைப்புகளில் இருந்தன. அவையே எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணங்களாகும்.[1] மலாய்க்காரர்கள் அல்லாதவர்களும் அம்னோவில் உறுப்பியம் பெற வேண்டும் எனும் கருத்தை டத்தோ ஓன் ஜாபார் வலியுறுத்தி வந்தார்.
தவிர, மலாயா ஒன்றியத்தில் மலாய்க்காரர்கள் அல்லாத சீனர்களும், இந்தியர்களும் இடம் பெற வேண்டும் என்றும் பிரித்தானியர்கள் தீவிரம் காட்டினர். அதுதான் மலாயா ஒன்றியத்தை பிரித்தானியர்கள் உருவாக்கியதற்குத் தலையாய காரணம் ஆகும்.[2]
மலாயா ஒன்றியத்தின் மூலமாக மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு கட்டுப்பாடற்ற குடியுரிமை வழங்கப்படுவதைப் பல மலாய்க்காரர் அமைப்புகள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தன. அதன் பிறகு பல மலாய்க்காரர்கள் மாநாடுகள் நடைபெற்றன. அதன் நீட்சியாக 1946 மே 10 இல், வேறு ஒரு தேசியக் கட்சி, அம்னோ எனும் பெயரில் தோற்றம் கண்டது.[3] அம்னோவின் தலைவராக டத்தோ ஓன் ஜாபார் பொறுப்பேற்றார்.[4]
மலாயா ஒன்றியம் என்பது, மலாயாவில் இருந்த அனைத்து சுல்தான்களின் ஆளுமைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, மத்திய அரசாங்கத்தைப் பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும். அதாவது மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுக்குள் பிரித்தானிய ஆளுமையைக் கொண்டு வருவது. இந்த மலாயா ஒன்றியம் அமைக்கப்படுவதில் மலாய்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு வேறு பல காரணங்களும் இருந்தன.
மலாய்க்காரர்களுக்கு அப்போதைய இந்தியர்கள் ஒரு மருட்டலாகத் தெரியவில்லை. சமயக் கோட்பாடுகளைத் தவிர, கலை, கலாசாரங்களின்படி இரு இனங்களும் சமரசமாய் ஒத்துப் போகக்கூடியதாய் இருந்தன. ஆனால், சீனர்களின் பொருளாதார ஆதிக்கத் தன்மைதான் மலாய்க்காரர்களை அச்சமடையச் செய்தது. சீனர்களின் தனிப்பட்ட பொருளாதார ஆதிக்கம் மட்டுமே மலாய்க்காரர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.[6]
1946 மார்ச் 1 இல், மலாயா, சிங்கப்பூரில் இருந்த மலாய் அமைப்புகள் கோலாலம்பூரில் ஒன்று கூடி ஒரு மாநாட்டை நடத்தின. அந்த மாநாட்டிற்கு அகில மலாயா மலாய் மாநாடு என்று பெயர். அதற்கு டத்தோ ஓன் ஜாபார் தலைமை தாங்கினார். ஒரு மாதம் கழித்து 1946 ஏப்ரல் 1 இல், பிரித்தானியர்களால் மலாயா ஒன்றியம் தொடக்கி வைக்கப்பட்டது.
அப்போதைய பிரித்தானியத் தலைமை ஆளுநர் எட்வர்ட் ஜெண்ட் மலாயா ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், மலாய்க்காரர்களும் மலாய் ஆளுநர்களும் மலாயா ஒன்றியத்தை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தனர்.
1945 மே 11 இல் ஜொகூர் பாருவில் மற்றோர் அகில மலாயா மலாய் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மலாய்க்காரர்களுக்காக ஓர் அரசியல் கட்சி தேவை என்பதால் அம்னோ எனும் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. டத்தோ ஓன் ஜாபார் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
அம்னோ தோற்றுவிக்கப்பட்டாலும், மலாயா ஒன்றியத்தை டத்தோ ஓன் ஜாபார் ஆதரித்து வந்தார். ஆனால், அவருடைய நோக்கங்களை மலாய் அமைப்புகள் புறக்கணித்து வந்தன. தன்னுடைய நோக்கங்களுக்கு தொடர்ந்தால் போல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், விரக்தி அடைந்த டத்தோ ஓன் ஜாபார் அம்னோவில் இருந்து வெளியேறி மலாயா சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார்.
டத்தோ ஓன் ஜாபார் வெளியேறியதும், அம்னோவின் தலைமைப் பொறுப்பிற்கு துங்கு அப்துல் ரகுமான் மாற்றுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அதே ஆண்டு 1946 இல், மலாயாவில் முதல்முறையாக பினாங்கு ஜார்ஜ் டவுன் (பினாங்கு) நகராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் மலாயா தீவிரக் கட்சி ஒன்பது இடங்களில் ஆறு இடங்களைக் கைப்பற்றியது.
மலாயா தீவிரக் கட்சி என்பது பெரும்பாலும் சீனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியாகும். பினாங்குத் தீவில் அதிகமாக சீனர்கள் இருந்ததால் மலாயா தீவிரக் கட்சி எளிதாக வெற்றி பெற முடிந்தது அதன் பின்னர், மலேசிய சீனர் சங்கத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒரே இடத்தில் இரு கட்சிகளும் போட்டியிடுவது இல்லை என அம்னோவும் மலேசிய சீனர் சங்கமும் பரஸ்பரம் இணக்கம் தெரிவித்தன.
1947 இல் நடைபெற்ற கோலாலம்பூர் நகராட்சித் தேர்தலில் அம்னோவும் மலேசிய சீனர் சங்கமும் இணைந்து வெற்றி வாகை சூடின. 12 இடங்களில் ஒன்பது இடங்களில் வெற்றி கண்டன. அந்தத் தேர்தலில் டத்தோ ஓன் ஜாபாரின் மலாயா சுதந்திரக் கட்சி மோசமானத் தோல்வியைக் கண்டது.
அடுத்து அடுத்து வந்த தேர்தல்களில் அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்திய காங்கிரசு இணைந்து செயல்பட்டன. அதுவே, பின்னாளில் மலேசிய கூட்டணி கட்சி எனும் அரசியல் கூட்டணி உருவாவதற்கு காரணமாக அமைந்தது. அந்தக் கூட்டணிதான் மலேசியாவில் முதல் அரசியல் கூட்டணியாகும்.
1954 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில், 268 இடங்களில் கூட்டணி போட்டியிட்டது. அதில் 226 இடங்களில் வெற்றி பெற்றது. அதே ஆண்டு 100 இடங்களைக் கொண்ட மத்திய சட்டப் பேரவை தோற்றுவிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையின் 52 இடங்களுக்குத் தேர்தலும் எஞ்சியுள்ள 46 இடங்களுக்கு நியமனங்கள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கூட்டணியின் தேர்தல் பரப்புரைகளில் மலாயாவில் வாழும் அனைத்து இனக் குழந்தைகளுக்கும் இலவசமான கல்வி, மலாயா சுல்தான்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, கம்யூனிச அவசரகாலத்தை முடிவுக்கு கொண்டு வருவது, அரசு சேவையைச் சீரமைப்பு செய்து உள்ளூர் மக்களுக்கு கூடுதலான வாய்ப்புகளை வழங்குவது போன்றவை பிரதான கொள்கை விளக்க அறிக்கையாக அமைந்தன.[7]
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது 52 இடங்களில் போட்டியிட்டு இருந்த கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. கூடணியின் மீது மக்களுக்கு இருந்த வலுவான நம்பிக்கை அந்தத் தேர்தலின் மூலம் தெரிய வந்தது. அதன் பின்னர் 1963 இல், மலாயா, சிங்கப்பூர், சபா, சரவாக் ஆகியவை இணைந்து மலேசியாவானது. 1965 இல் சில அரசியல் காரணங்களுக்காக சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிக்கப்பட்டது.
தற்சமயம் அம்னோவின் தலைவராக நஜீப் துன் ரசாக் பதவி வகிக்கிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.