From Wikipedia, the free encyclopedia
அடிமைமுறை என்பது வலுக்கட்டாயமாக மனிதர்களைப் பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அவர்களிடமிருந்து வேலையை கட்டாயமாக வாங்குவதாகும். இம்முறை நெடுங்காலமாக பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இப்படி வலுக்கட்டாயம் செய்யப்பட்ட மனிதர்கள் அவர்களுடைய முதலாளிகளால், பிற பொருட்களைப் போல வாங்கி, விற்கப்பட்டனர். இது ஒரு மிகவும் இழிவான முறை என 19-20 ஆம் நூற்றாண்டுகளில் உலகெங்கும் உணரப்பட்டு இம்முறையை நீக்கினர். தனிமனிதர்களின் உரிமை நிலைநாட்ட வரலாற்றில் இது அறியவேண்டிய ஒன்று.
அடிமைமுறை தொன்மைக் காலங்களில் இனங்களிடையே போரினால் ஏற்பட்டது. தோற்ற வீரரகள் அடிமைகளாக்கப்பட்டார்கள். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமையாக்கப்பட்டனர். அடிமைமுறை மெசபடோமியாவின் 'ஹம்முராபியின் நீதி'களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூகவழக்காக தெரிகிறது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலிச்சைக்கு உட்படுத்துவதும் பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் ஒரு வழியாக உள்ளது. அப்படி ஏற்பட்ட அடிமைகள் பெரிய ராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மனை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் அல்லது பிரபுக்கள் வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டனர் அல்லது தாதுப்பொருள் சுரங்கங்களிலும், மற்ற உயிர் ஆபத்து நிறைந்த வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டனர், பல புராதன சுமூகங்களில் "சுதந்திர" மனிதர்களை விட அடிமைகளையே அதிகம்.
எகிப்தியர் போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தினர். அடிமைகள் முதலில் அரசர் பாரோவிற்குத்தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவ்ர்க்கு அடிமைகளை பரிசளிக்கலாம். மூன்றாம் தூத்மோஸ் (கிமு 1479-1425), இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள் கல்வெட்டுகளில் கானான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை, எப்படிப்பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் செய்தனர் என்று தெரிவிக்கின்றன.
எகிப்தின் 18 ஆம் அரச வம்சத்திலிருந்த ஒரு படைதளபதி, தன் கல்லரையில் இவ்வாறு எழுதியுள்ளார். "பிறகு ஆவரிஸ் நகரத்தை சூரையாடினோம்; என் பங்காக நான் ஒரு ஆணையும், 3 பெண்களையும் எடுத்துக் கொண்டு வந்தேன்; பாரோ அவற்றை எனக்கு அடிமைகளாக பரிசாக கொடுத்தார்". எல்லா பாரோ காலங்களிலும் எகிப்துக்கு தெற்கேயுள்ள நூபியா மற்றும் குஷ் பிரதேசத்தில் இருந்த கருப்பர்களை அடிமைகளக்கினர். மெசொப்பொத்தேமியா மீது படையெடுத்தபிறகு யூத மக்களை அடிமையாக்கி, ஆண், பெண், குழந்தைகள் எல்லோரையும் எகிப்த்திற்கு கொண்டு வந்து, சுமையான வேலைகளை அவர்களிடமிருந்து பிழிந்தனர். இவை பழைய விவிலிய நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. பல அடிமைகள் சினாய் பகுதிகளில் செப்புச் சுரங்கங்களில் உயிர்போகும் வரை கட்டாய வேலை பிழியப்பட்டனர். யூதரான மோசே காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள் நாட்டிற்கு திரும்பினர். சில அடிமைகள் தங்கள் முயற்சியாலும், ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர். புராதன உலகெங்கிலும் ஒப்பிடும்போது, எகிப்திய அடிமைகள் சற்று நன்றாகவே நடத்தப்பட்டர்கள் எனத் தோன்றுகிறது.
அடிமைமுறை கிரேக்க நாகரீகத்தில் பெரும்பங்கு வகித்தது. அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும், கப்பல் மாலுமிகளாகவும், கடைக்காரர்களாகவும் ஊழியம் செய்தனர். அவர்கள் பிறப்பினால் - அதாவது பெற்றோர் அடிமை - ஆகவோ, பெற்றொர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளாகவோ, சந்தையில் வாங்கப் பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ ஆகலாம். உதாரணமாக, பெலொபெநீசியன் போர் என அழைக்கப் படும் கிரேக்க உள் நாகாரீக யுத்தங்களில் தோல்வியுற்ற வீரர்கள், வெற்றி பெற்றவர்களால் அடிமையாகாப்பட்டனர். ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற அதீனிய வீரர்கள் சைராகூஸ் நிக்கல் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களும் அடிமைகளாயினர்.
ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, 'அடிமைத் தனம்', இவற்றைப் பொருத்தது. இளமையான, அழகான, திடகாத்திறமான, ஒடுங்கும் சுபாவம் கொண்ட அடிமையின் விலை 10 மினா - அதாவது $180 - ஆக இருக்கலாம். வயதான, தளர்ந்த, அடங்காப் பிடாரிகள் விலை 1/2 மினா - $9 - தான். அடிமைகள் சந்தையில் பெருமளவில் கிடைத்தால் -உதாரணமாக ஒரு வெற்றிகரமான போருக்குப் பின் - அடிமையின் விலையும் சரியும். பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளைக் கூட வைத்திருக்கலாம்
கிரேக்க அடிமைகள் தாங்களே தங்கள் பெயர்களை வைத்துக்கொள்ள கூடாது; அவர் எசமானர் தான் பெயரைக் கொடுக்க வேண்டும். உடற்பயிற்சி சாலைகளையோ, பொது கட்டிடங்களையோ அணுகக் கூடாது. . ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில் அடிமைகள் தான் பெரும்பாலோர். ஏதென்ஸில் 21000 சுதந்திர மனிதர்களும், 4,00,000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்படுகிறது.
ரோமானிய உலகத்தில் அடிமை முறை பெருமுக்கியத்துவத்தை வகித்தது. ரோம் குடியரசாக இருக்கும் வரை (100 கிமு வரை) ஒரளவு கட்டுக்குள் இருந்தது; ரோம் சாம்ராச்சியமானவுடன், பல்வேறு வெளிநாட்டு யுத்தங்களில் தோற்றுப்போன பல தேசத்தினர் அடிமைகளானார்கள். ரோமர்கள், தங்களைத் தவிற மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாக்கினர். விவசாய முறைகளும் வேண்டிய பண்டங்கள் உற்பத்தியை விடுத்து, சர்வதேச ஏற்றுமதிக்கு வணிகமய விவசாயமாகி ஆயிரக்கணக்கான பண்ணையாட்களை தேடிற்று. இதனால் பெரும் பண்ணைகள் அடிமை வேலையை ஊக்குவித்தன. கி.பி.400 வரை, அடிமைமுறை இன்னும் தீவிரமாயிற்று. அதற்குபின், ரோம சாம்ராஜ்ஜியம் குலைய ஆரம்பித்து, கிருத்துவ தாக்கம் பெருகியது. கடைக்கால ரோமில் அடிமைகளின் கதி சுதாரித்தது. சில ஆய்வுகள், கி.மு. 2 ஆம் நூற்றண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை, அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். . அடிமைகளுக்கு பெயரில்லை; அவர்கள் மணம் செய்யமுடியாது; சொத்து வைக்கமுடியாது.
ரோம் அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமை கலகங்கள் நிகழ்ந்தன. ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர் வீரர்கள்; வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருப்பவர்கள். அக்கலகங்களில் புகழ்பெற்றது கிமு 73-71 ஆம் ஆண்டில் நடந்த ஸ்பார்டகஸ் எழுச்சி. ரோம் எசமானர்கள் அடிமை எழுச்சிகளின் பயத்திலேயே காலம் கழித்தனர். ஒருமுறை ரோம் செனேட்டில், அடிமைகளுக்கு தனி உடை போட வேண்டும் என எண்ணம் இருந்தது. ஆனால், அப்படி செய்தால், அடிமைகள் இனம் கண்டுகொண்டு, தங்கள் எண்ணிக்கை பலத்தை உணர்ந்து கலகம் செய்யலாம் என தோன்றியவுடன், அந்த உடை தீர்மானம் கைவிடப்பட்டது. சில அடிமைகள் தப்பியோடி ரகசிய வாழ்க்கை வாந்தனர். அப்படிபட்ட அடிமைகளை கைப்பற்றுவதற்கே தனித் தொழில் ஆரம்பித்தது.
பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக மெகஸ்தனிசு (கிமு 350 - கிமு 290) என்னும் கிரேக்கர், சந்திரகுப்த மௌரியனின் காலத்தில் கிரேக்க தூதுவராக இருந்து இந்தியாவைப் பற்றி யாத்திரை ஏடு எழுதியுள்ளார்.[சான்று தேவை] அதன்படி "(இந்தியாவிலுள்ள) ஆச்சரியமான வழக்குகளில் ஒன்று, அந்நாட்டு சான்றோர்களால் செய்யப்பட்டது - நீதியின்படி யாரும் எந்த சூழ்நிலையிலும் அடிமையாகக் கூடாது ..... எல்லா சொத்துக்களும் சமமாக பாகுபடுத்த வேண்டும்,[சான்று தேவை]" அர்ரியன் என்ற வேறொரு கிரேக்க எழுத்தாளரும் இந்தியாவில் அடிமை என யாரும் இல்லை என்கிறார்[சான்று தேவை]. ஸ்ட்ராபோ என்ற எழுத்தாளரும் அதையே சொல்கிறார்.
ஒரு தமிழ் ஆய்வாளரின்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாம். "அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கியப் பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன" பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம் 2013இல் வெளியான உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைக்கக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.[1]
1. மேற்கு ஆப்பிரிக்காவில் 1788 ஆம் ஆண்டு, கினியா நாட்டு படைத்தளபதியும் இளவரசருமான அப்துல் ரஹ்மான் இப்னு இப்ராஹிம் சோரியை ஃபவுட்டா ஜல்லான் என்ற இடத்தில் பிடித்து அமெரிக்காவிருக்கு அடிமையாக அனுப்பபட்டார். அப்துல் ரஹ்மான் இப்னு இப்ராஹிம் சோரி 40 வருடம் அமெரிக்காவில் அடிமையாக இருந்தார்.
இவற்றை தவிர, 20 ஆம் நூற்றாண்டில், கொடூர அரசாங்கங்களால் கோடிக்கணக்கான மக்கள் அடிமை நிலையில் வைத்து சாகும்வரை கடும்வேலை பிழியப்பட்டனர். இவை அரசாங்கங்களால் நடத்தப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
1. மத்திய ஆப்பிரிக்காவில், இப்போது காங்கோ என அழைக்கப்படும் நாட்டில், பெல்ஜிய காலனிக்க அரசாங்கம், ஆப்பிரிக்கர்களை ஊதியம் கொடுக்காமல் கடும் வேலைக்கூள்ளாக்கியது.
2. 2 ஆம் உலக மகாயுத்தத்தின்போது, ஜெர்மனி பல ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றி பல மில்லியன் மக்களை பலாத்காரமாக அழைத்துச் சென்று, பரிதாபமான நிலையில் வைத்து வேலை பிழிந்தது. இதில் ஒரு பகுதி யூதர்களின் பேரழிப்பு என்ற நாசி திட்டத்தை சார்ந்த்தாகும். யுத்தத்தின் முடிவில் 20 லட்சம் போர்க்கைதிகளும், 75 லட்சம் சாதாரண மக்களும் இவ்வாறு அடிமை வேலை செய்தனர் [தொடர்பிழந்த இணைப்பு] இன்றும், பல ஜெர்மானிய தொழில் நிர்வாகங்களும், அரசாங்கமும், பல யூத அடிமைகளுக்கும், அவர்கள் சந்ததியினருக்கும் ஈடு கொடுக்கின்றனர்.
3. சோவியத் ஒன்றியத்தில், குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில், லட்சோபலட்சம் மக்கள், அடிமை முறையில் தொழிற்சாலைகளிலும், காடுகளையும், சுரங்கங்களையும், கால்வாய்களை வெட்டவும் பயன்படுத்தப்பட்டனர். அந்த முறை குலக் என்றழைக்கப்படுகிறது. சோவியத் கட்டாய வேலை தளங்களில் 50 லட்சத்திலிருந்து 100 லட்சம் மக்கள் மரணமடைந்திருக்கலாம் என கணக்கு செய்யப்படுகிறது. இதைத் தவிர இன்னும் பல கோடி மக்கள் உயிர் தப்பினர் [தொடர்பிழந்த இணைப்பு]. 1918-1956 காலத்தில் 300 லட்சம் மக்கள் வரை குலகுகளுக்கு சென்றிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது [தொடர்பிழந்த இணைப்பு].
4. 2 ஆம் உலக மகாயுத்ததின் போது, ஆசியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய ஜப்பான், பல அட்டூழியங்களை செய்து, அடிமை வேலை வாங்கிற்று.
தற்காலத்தில் அடிமைத்தனம் இவ்விதங்களிலிருப்பதாக அடிமை ஒழிப்பு சங்கம் கூறுகிறது.
அடகு தொழிலாளர் - இன்று லட்சோபலட்சம் மக்கள் அடகு முறையில் கட்டுண்டு உள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும், தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு கொடுத்து, தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர். சில சமயம் அந்த கடன் குழந்தைகளுக்கு மருந்து வாங்குவதற்காகவும் அவ்வளவு சிறிய தொகையாக இருக்கலாம். கடனையும், வட்டியையும் திருப்பிக் கொடுக்க வருடத்தில் எல்லா நாட்களிலும், எல்லா வருடமும், ஒரு மருத்துவ வசதியுமில்லாமல் உழைக்க வேண்டியிருக்கிறது..
இளம் வயதில் கட்டாய மணம் - இது மகளிரை பீடிக்கிறது. பெண்கள் சம்மதமில்லாமலேயே மணம் செய்து கொள்ளப் பட்டு, வன்முறைக்கு ஆளாகிறனர்.
கட்டாய சேவை - அரசாங்கம், அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு, கட்டாய வேலைகளை - துன்புறுத்தியோ, வன்முறை பீதியை ஏற்படுத்தியோ - பிழிகிறார்கள்.
அடிமை சந்ததி - சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம், அடிமைகளாகவோ, கட்டாய வேலை செய்ய ஏற்பட்டவர்கள் எனக் கருதுகிறது.
ஆள் கடத்துதல் - மனிதர்கள், பெண்டிர், சிறார் இவர்களை அடிமைத்தனமான கதிகளில் வைக்கவும், வாங்கி விற்கவும் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு எடுத்துச் செல்லுதல்.
பாலக தொழிலாளர்.- இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் பாலகர்கள் அவர்கள் உடல்நிலைக்குப் பாதகமான சூழ்நிலையில், குறைந்தபட்ச பாதுகாப்பின்றி வேலை செய்கிறனர்.
பழங்கால வாங்கி/விற்கும் பொருள் அடிமை முறை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தடை செய்யப்பட்டாலும், இன்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் அந்த அடிமைமுறை நடக்கிறது. முக்கியமாக சூடான், மௌரிடேனியா என்ற இரு நாட்டினிலும் இது நடக்கிறது. அரபுமயமாக்கப்பட்ட வடக்கு சூடான் அரசு பழைய மதங்களையும் கிருத்துவத்தையும் பின்பற்றி வரும் தெற்கு சூடானிய இனங்களை அடிமைகளாக பிடித்து வருவதை தடுக்காமல், அடிமை பிடிப்பவர்களை ஆயுதம் கொடுத்து உதவியுள்ளது. அதனால் சூடானில் கடந்த 50 வருடங்களாக உள்நாட்டு போர் நடக்கிறது. சர்வதேச அடிமை எதிர்ப்பு அமைப்பின்படி (1997 அறிக்கை) "சூடானிய அரசு நேர்முகமாக அடிமை முறையில் பங்கு எடுக்கிறது என சொல்ல முடியாவிட்டாலும், அவ்வரசு அடிமை முறைக்கு உகந்த சமூக சீரழிவைத் தூண்டிவிட்டு, அதனால் லாபமடைந்துள்ளனர்". தென்சூடானிலுள்ள பார் அல்கசல் பகுதியிலுள்ள டிங்கா குடியினர் பலரை அடிமைகளாக இழந்துள்ளனர். சூடானின் நீதிமுறையில் அடிமை வைப்பது குற்றமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்து, அடிமை எண்ணிக்கை அதிகமாகியுள்ளது
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசின் 1994 கணக்குப்படி, மௌரிடேனியாவில் 80,000 கருப்பர்கள் பெர்பெர் இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கிறனர். பெர்பெர்கள் கருப்பர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும் பயன்படுத்துகிறனர் பரணிடப்பட்டது 2006-11-10 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-05-13 at the வந்தவழி இயந்திரம்
பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான் அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கு குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இவர் 1787 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 'அடிமை ஒழிப்பு குழிவின்' முதல் தலைவர். பிரெஞ்சு புரட்சியின் போது 'முதல் குடியரசு' பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் தடைகள் நீக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும், பிடிப்பதும், விற்று வாங்குவதும், கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் சிக்கலாகி, அமெரிக்க உள்நாட்டு போருக்கு வித்திட்டது. 20 ஆம் நூற்றாண்டில், ஐ.நா. சபை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்றவை, பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல நீதிகளை இயற்றியுள்ளன. ஓரிரண்டு நாடுகளைத் தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.