2011 திக்குவல்லை கலவரம்
From Wikipedia, the free encyclopedia
2011 திக்குவல்லை கலவரம் என்பது ஆகத்து 31 2011ல் முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தினத்தன்று இலங்கையில் தென்மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள திக்குவல்லை எனும் இடத்தில் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் ஏற்பட்ட கலவரத்தைக் குறிக்கும். இக்கலவரம் சில தினங்களுக்கு நீடித்தது.[1]
காரணம்
நோன்புப் பெருநாள் தினத்தன்று மாலை திக்குவல்லையில் முஸ்லிம் இளைஞர்களால் துடுப்பாட்ட போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினருக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலே கலவரமாக வெடித்தது. துடுப்பாட்ட போட்டியைப் பார்வையிட்டு கொண்டிருந்த பொது மக்கள் மத்தியில் மதுபோதையில் நுழைந்த குழுவினர் ஒரு முஸ்லிம் இளைஞரை பிடித்திழுத்து கடுமையாக தாக்கினர். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 1ம் திகதி மதுபோதையில் கலகம் விளைவித்ததற்காக 05 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு. செப்டம்பர் 2 திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இச்சம்பவம் ஒரு கலவரமாக மாறத் தொடங்கியது.
சேதங்கள்
முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் உட்பட சுமார் 20க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. முஸ்லிம்களின் சில வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதுடன் 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
சந்தேக நபர்கள் கைது
இக்கலவரத்துடன் தொடர்புடைய 16 சிங்கள இளைஞர்களையும், 14 முஸ்லிம்கள் இளைஞர்களையும் காவல்துறையினர் இனங்கண்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து செப்டம்பர் 5 ம் திகதி மாத்தறை மாவட்டத்தில் கலவரம் தொடர்பாக 28 முறைப்பாடுகளுக்காகவும் நான்கு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களால் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பளிக்கப்பட்டு சந்தேக நபர்கள் அனைவரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சமாதான முயற்சி
இச்சம்பவத்தினால் சீர்குலைந்துள்ள சிங்கள முஸ்லிம் சமூகத்தரின் உறவினை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. செப்டம்பர் 4ம் திகதி அமைச்சர் டளஸ் அலகபெரும தலைமையில் சமாதானக்குழு சமாதானக் கூட்டமொன்று திக்குவலை பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்றது.
மக்கள் கருத்து
நோன்புப்பெருநாள் தினத்தன்று நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியின்போது முஸ்லிம் இளைஞர்களாலேயே சிங்கள இளைஞர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் போதையுற்ற இளைஞர்களே பார்வையாளர் மத்தியில் தாக்குதலை நடத்தியிருக்கின்றார்கள்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.