From Wikipedia, the free encyclopedia
வியன்னா மாநாடு என்பது, 1814 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 1815 ஆண்டு யூன் மாதம் வரையில், ஆசுத்திரிய அரசியலாளர் கிளெமென்சு வென்செல் வொன் மெட்டெர்னிச் (Klemens Wenzel von Metternich) தலைமையில் நடந்த ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்கான மாநாடு ஆகும்.[1] பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள், நெப்போலியப் போர்கள், புனித ரோமப் பேரரசு கலைப்பு போன்றவற்றினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்றை எட்டுவதே இந்த மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டின் விளைவாக ஐரோப்பாவின் அரசியல் நிலப்படம் பல மாற்றங்களுக்கு உட்பட்டது. பிரான்சு, வார்சோ டியூச்சகம், நெதர்லாந்து, ரைன் நாடுகள், செருமன் மாகாணமான சக்சனி, பல்வேறு இத்தாலிய ஆட்சிப்பகுதிகள் என்பவற்றுக்குப் புதிய எல்லைகள் உருவாயின. அத்துடன், உள்நாட்டு மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலுமான பிரச்சினைகளில், ஆசுத்திரியா, பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியவை தலையிடுவதற்கான செல்வாக்கு மண்டலங்களும் உருவாயின. ஐரோப்பாவின் நாடுகளிடையே ஒத்திசைவை ஏற்படுத்தி, அமைதியான அதிகாரச் சமநிலையை எட்டும் நோக்கில் இடம்பெற்ற பல்வேறு பன்னாட்டுச் சந்திப்புக்களில் இது முதலாவது ஆகும். இம் முயற்சிகள், பிற்காலத்தில் உருவான உலக நாடுகள் சங்கம், ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றுக்கான மாதிரியாகவும் தொழிற்பட்டன.
நெப்போலியப் பிரான்சு தோல்வியடைந்து, 1814 மே மாதத்தில் சரண் அடைந்ததோடு, 25 ஆண்டுகாலம் ஏறத்தாழத் தொடர்ச்சியாக இடம்பெற்ற போர்கள் முடிவுக்கு வந்ததே இம் மாநாட்டுக்கான கிட்டிய பின்னணியாக இருந்தது. நாடுகடந்து வாழ்ந்த நெப்போலியன் மீண்டு வந்து, 1815 மார்ச்சுக்கும் யூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் நூறு நாட்கள் பிரான்சின் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மீண்டும் போர் வெடித்த போதும் வியன்னா மாநாட்டுப் பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்றன. நெப்போலியன், 1815 யூன் 18 ஆம் தேதி வாட்டர்லூவில் இறுதித் தோல்வியைச் சந்திப்பதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் மாநாட்டின் இறுதி ஒப்பந்தச் சட்டமூலம் கைச்சாத்தானது.
"வியன்னா மாநாடு" ஒரு முறையான மாநாடு என்று சொல்ல முடியாது. இம் மாநாட்டுக்கான முழு அமர்வுக் கூட்டம் எதுவும் இடம்பெறவில்லை. பெரும்பாலான பேச்சுக்கள் ஆசுத்திரியா, பிரான்சு, உருசியா, பிரித்தானியா, பிரசியா ஆகியவற்றுக்கு இடையே முறைசாராத நேரடிப் பேச்சுக்களாகவே இருந்தன. பிற பேராளர்களின் பங்கு மிகக் குறைவாக அல்லது முற்றாகவே இல்லாமல் இருந்தது. ஒரு கண்டம் தழுவிய அளவில் பல நாடுகளின் பேராளர்கள் ஒரே இடத்தில் கூடி ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க முனைந்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்னர் நாடுகளின் தலைநகரங்களுக்கு இடையே தூதுவர்கள் மூலமும் தகவல்களை அனுப்புவதன் மூலமுமே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சில மாற்றங்கள் ஏற்பட்ட போதும், வியன்னா மாநாட்டில் எட்டப்பட்ட தீர்வே, 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் ஏற்படும் வரை ஐரோப்பாவின் பன்னாட்டு அரசியலின் அடிப்படையாக அமைந்திருந்தது.
பிரான்சுக்கும் ஆறாவது கூட்டணிக்கும் இடையிலான பாரிசு ஒப்பந்தத்திலேயே பகுதித் தீர்வு ஏற்பட்டிருந்தது. கியெல் ஒப்பந்தத்தில் இசுக்கன்டினேவியா தொடர்பான விடயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. பாரிசு ஒப்பந்தம், வியன்னாவில் பொது மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என்பதை ஏற்றிருந்ததுடன், போரில் ஈடுபட்ட எல்லா நாடுகளுக்கும் அழைப்பு அனுப்புவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.[2] இம் மாநாட்டை 1814 யூலையில் தொடங்குவதற்கும் காலம் குறித்திருந்தனர்.[3]
நான்கு பெரிய வல்லரசுகளும் முன்னரே ஆறாவது கூட்டணியை உருவாக்கி இருந்தனர். நெப்போலியன் தோல்வியுறும் நிலையில் இருந்தபோது இவ்வல்லரசுகள் தமது பொது நிலைப்பாட்டை சோமொன்ட் ஒப்பந்தம் (மார்ச் 1814) மூலம் உருவாக்கி இருந்தனர். பிரான்சில் பர்பன் வம்ச ஆட்சி மீள்விக்கப்பட்ட பின்னர் அவர்களுடன் பேச்சு நடத்தி அதே ஆண்டில் பாரிசு ஒப்பந்தத்தையும் உருவாக்கினர். நான்கு வல்லரசுகள் சார்பிலும், பர்பன் பிரான்சின் சார்பிலும் பின்வருவோர் பேராளர்களாகக் கலந்து கொண்டனர்:
இந்நாடுகள் முதலில் .கையெழுத்தான சோமொன்ட் ஒப்பந்தத்தில் பங்கு பெறவில்லை. ஆனால், பாரிசு ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
ஐரோப்பாவில் இருந்த ஒவ்வொரு நாட்டுக்கும் வியன்னாவில் பேராளர்கள் இருந்தனர். 200க்கும் மேற்பட்ட நாடுகளும், சிற்றரசுகளும் வியன்னா மாநாட்டுக்குப் பேராளர்களை அனுப்பியிருந்தனர். இவற்றோடு, நகரங்கள், கூட்டாண்மைகள், மத அமைப்புக்கள் போன்றவற்றுக்கும்; காப்புரிமைச் சட்டங்கள், பத்திரிகைச் சுதந்திரம் என்பவற்றைக் கோரிய செருமன் பதிப்பாளர்கள் போன்ற சிறப்புக் குழுக்கள் என்பவற்றுக்கும் பேராளர்கள் இருந்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.