இருக்கு வேத கால முனிவர்கள் பொ.ஊ.மு. 1500 - 1100↑ கால கட்டத்தில் வாழ்ந்த ரிஷிகள் ஆவர். இவர்களின் எண்ணிக்கை 350க்குச் சற்று அதிகமாக உள்ளது. இருக்கு வேத கால ரிஷிகள் 10647 இருக்குகள், 2024 வர்க்கங்கள், 1028 சூக்தங்கள், 85 அனுவாகம், 64 அத்தியாயம் மற்றும் 10 மண்டலங்கள் கொண்ட ரித் வேதத்தைப் படைத்துள்ளனர்.[1][2] மரீசியின் மகன் காசியபரும் தலா எட்டு சூக்தங்களைப் படைத்துள்ளனர். ‘அபாலா’ என்ற பெண் முனி ஒரு சூக்தம் படைத்துள்ளார். முனிவர்களின் முன்னோர்களான வருண புத்திரன் பிருகு, இசிரத்தின் மகன் குசிக் தலா ஒரு சூக்தம் படைத்துள்ளனர்.
சில முனிவர்களின் தலைமுறைகள்
வசிட்டரின் தந்தை மித்ரவர்ணன், சகோதரர் அகத்தியர், மகன் சக்தி. விசுவாமித்ரரின் தந்தை காத்தி, தாத்தா குஷிகர், கொள்ளுத்தாத்தா இசிரத். பிருகுவின் தந்தை வருணன். பரத்துவாசரின் தந்தை பிரகசுபதி, தாத்தா லோகநாமா. கண்வரின் தந்தை கோரர், தாத்தா அங்கிரஸ் ஆவார்.காசிபரின் தந்தை மரீசி. கோதமரின் தந்தை ரகூகன்.
ரிஷிகளின் பணிகள்
வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்விகள் செய்தல், செய்வித்தல், தவம் செய்தல், தானம் பெறுதல், அரசனுக்கு குருவாக இருந்து அரசியல், குடிமக்கள், எதிரி நாட்டு மன்னர்கள் விசயங்களில் ஆலோசனை சொல்லுதல், மற்றும் வர்ணாசிரம தர்மத்தைக் காத்தல், வரி விதித்தல், சட்டங்கள் இயற்றுவது தொடர்பாக அரசனுக்கு ஆலோசனை கூறுதல் மற்றும் புரோகிதம் செய்தல் ஆகியன ரிஷிகளின் கடமைகள் ஆகும்.
இருக்கு வேதகால இனக்குழுக்களின் புரோகிதம் செய்யும் சில ரிஷிகள்
எண் | ரிஷிகள் | இனக்குழு | வாழ்விடம் |
---|---|---|---|
1 | பிருகு | திருஹ்யு | விருஷ்ணி-அசிக்னி நதிக்களிடையே உள்ள பகுதி |
2 | அத்திரி & கிருதசமத் | புரு குலம் | விபாசு-சுதுத்ரி நதிக்களிடையே உள்ள பகுதி |
3 | பரத்துவாசர் | திவோதாசு-சுதாசு (பாரதர்கள்) | விருஷ்ணி-விபாசு நதிக்களிடையே உள்ள பகுதி |
4 | வசிட்டர் | சுதாசு (பாரதர்கள்) | விருஷ்ணி-விபாசு நதிக்களிடையே உள்ள பகுதி |
5 | விசுவாமித்திரர் | சுதாசு (பாரதர்கள்) | விருஷ்ணி-விபாசு நதிக்களிடையே உள்ள பகுதி |
6 | தீர்க்கதமஸ் | பாரதர்கள் - திருத்சூ | விருஷ்ணி-விபாசு நதிக்களிடையே உள்ள பகுதி |
7 | கண்வர் | துர்வசு - யது | விருஷ்ணி-அசிக்னி நதிக்களிடையே உள்ள பகுதி |
வசிட்டர்
இருக்கு வேதத்தின் ஏழாவது மண்டலத்தைச் சேர்ந்தவர் வசிட்டர்.இவர் மற்ற ரிஷிகளை விட அதிகமாக, 103 சூக்தங்கள் இயற்றியுள்ளார். இவரின் தந்தை மித்ரவர்ண தேவர். இவரது மகன்களான சக்தி, சித்ரமகா, ம்ருலீக், கெளரவீதி, மற்றும் பேரன் பராசரர் ரிக் வேத கால ரிஷிகளே.
வசிட்டரின் சூக்தங்களால் ரிக்வேதகாலத்திய வரலாறு, நிலவியல், தெளிவாகத் தெரிகிறது. இவருக்கு விருப்பமான வாக்கியம்: ‘நீ மங்கள ஆசியுடன் எப்போதும் எங்களை காப்பாற்றும்’ என்று இந்திரன், வருணன், மித்திரன், சூரியன், அக்னி, விசுவதேவர், அஸ்வித்வய, உஷா, சரசுவதி ஆகிய தேவர்களை வேண்டுகிறார். வசிட்டர் வாழ்வில் நடந்த மாபெரும் நிகழ்ச்சியும், வெற்றியும் பத்து அரசர்களின் போரில் மன்னன் சுதாசின் வெற்றியால் சப்தசிந்து பகுதியில் சிதறி கிடந்த ஆரிய மக்களை ஒன்று படுத்தியதாகும். (ரிக்வேதம் 7-33-107).
விசுவாமித்திரர்
விசுவாமித்திரர் காயத்திரி மந்திரத்தை இயற்றியவர். இவர் காத்தியரின் மகன், குசிகரின் பேரன், இசிரத்தின் கொள்ளுப்பேரன். இவர் இந்திரன், வருணன், பிரகசுபதி, பூசா, சவிதா, சோமதேவன், மித்திரன் ஆகிய தேவர்களை துதி செய்து சூக்தங்கள் இயற்றியுள்ளார். 33 கோடி தேவர்கள் அல்ல, 33 தேவர்கள் மட்டுமே என இவர் முதன் முதலில் குறிப்பிட்டுள்ளார் (ரிக்வேதம் 3-9-90). ரிக்வேதத்தில் 48 மந்திரங்களை செய்தவர்.
பரத்துவாசர்
பாரத்துவாசர் பிரகஸ்பதியின் மகன். ரிக்வேதத்தில் 60 சூக்தங்கள் செய்தவர். ஆன்மீக சக்தியை ஆதரிப்பவர் அல்ல. “எங்கள் உடல் பாறையைப் போன்று இருக்கட்டும்! என வேண்டுகிறார் (ரிக்வேதம் 6-75-12). இவர் ரிக்வேத கால மன்னர்களான திவோதாசு மற்றும் சுதாசு ஆகியவர்களின் புரோகிதர். திவோதாசின் மகன் சுதாசுவின் மூலம் வசிட்டரைக் கொண்டு அசுவமேதயாகத்தை செய்வித்தார். (ஐதரேய பிரமாணம் 8-4-21). இதுவே அசுவமேதயாகத்தைப் பற்றிய மிகப் பழைய குறிப்பாகும். இவரது சூக்தங்கள் மூலம் அக்காலத்தில் வேள்விகளும், பசு தானமும் அதிக அளவில் செய்யப்பட்டது என்றும் மக்கள் அதிகமான குதிரைகளையும், பசுக்களையும் விரும்பினர் என்றும், மன்னன் திவோதாசு அளித்த சோமபான அரங்கங்களில் தான் கலந்து கொண்டதாக பரத்துவாசர் ரிக்வேதம் 6-16-5 ல் குறிப்பிட்டுள்ளார். மன்னன் திவோதாசு 60,000 அசுரர்களை கொன்றதையும், மன்னர் புரு அசுரர்களின் எழு கோட்டைகளை நாசமாக்கியதை ரிக்வேதம் 6-20-10இல் குறிப்பிட்டுள்ளார்.
வாமதேவர்
கோதம முனிவரின் மகன் வாமதேவர். ரிக்வேதத்தில் 55 சூக்தங்கள் இயற்றியவர். வசிட்டர், விசுவாமித்திரர் ஆகியவர்களுக்கு பிந்தைய தலைமுறையை சேர்ந்தவர். இவரின் புகழ் அவர்களுக்கு குறைந்தது அல்ல. விசுவாமித்திரரின் சூக்தங்களை பரவச் செய்தவர். மன்னன் திவோதசு மற்றும் அவன் மகன் சுதாசுவின் வெற்றிகளை விவரிக்கிறார். ‘திவோதசு,அசுரர்களின் நூறு புரங்களை (கோட்டைகள்) வெற்றி கொண்டார் (ரி.வே.4-26-3); இந்த நூறு கோட்டைகளும் தாமிரத்தால் கட்டப்பட்டவை (ரி.வே.4-27-1). திவோதசுக்காக நூறு மலைக்கோட்டைகளை இந்திரன் வெற்றி கொண்டார் (4-30-20). போரில் முப்பதாயிரம் அடிமைகள் மயக்கம் அடைந்தனர். (4-22-2).ஐம்பதாயிரம் கிருஷ்ணர்கள் (கறுப்பு அசுரர்கள்கள்) கொல்லப்பட்டதாகவும் வாமதேவர் குறிப்பிடுகிறார். (ரி.வே.4-16-13). வாமதேவரின் சகோதரன் நோதா, தந்தை கோதமர், பாட்டனார் ரகூகண். வாமதேவரின் மகன்கள் மூர்த்தன்வா, பிரகத்திவ், பிரகதுக்த ஆகியவர்களும் முனிவர்களே.
அகத்தியர்
அகத்தியர், மித்ரவருணரின் மகனும் வசிட்டரின் சகோதரரும் ஆவார். ரிக்வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30)
தீர்க்கதமஸ்
வத்சயன் - மமதா தம்பதியரின் மகனான தீர்க்கதமஸ் [ரி.வே.1-158-1]. பிறவியிலேயே பார்வை அற்றவர். ரிக் வேதத்தில் 25 சூக்தங்களை செய்துள்ளார். வேள்விகளில் பலி இடப்படும் குதிரைகள் சாவதில்லை, சுவர்க்கத்திற்கு செல்கிறது [ரி.வே. 1-162-1]. இவரும் அடிமைகளைப் பற்றி ரி.வே. 1-158-5 ல் கூறுகிறார்.
கௌதமர்
ரிக்வேதத்தில் 20 சூக்தங்களைச் செய்துள்ளார். இவர் முனிவர் இரகூகனின் மகன் ஆவார்.
கிரத்சமத்
சௌனகரின் மகன். ரிக்வேதத்தில் 10 சூக்தங்களை இயற்றி உள்ளார். திவோதாசு-சம்பராசுரன் ஆகியவர்களுக்கிடையே நடந்த போரைப் பற்றி வர்ணித்துள்ளார் [ரி.வே.2-8-5]. சம்பரன் என்ற அசுரனின் 99 கோட்டைகளையும், நூறு நகரங்களை திவோதாசு அழித்தான் என்று ரி.வே.2-19-6 மற்றும் 2-14-6&7ல் குறிப்பிட்டுள்ளார். சம்பரனைத் தவிர சுவசுன, சூஷ்ண, அசுசு, வியன்சு, பிங்கு, நமுசி, சுமுரி, துனி, குயவ், போன்ற அடிமை மன்னர்களை இவர் குறிப்பிடுகிறார் [ரி.வே. 2-14-15].
மேதாதிதி
ரிக்வேதத்தில் 20 சூக்தங்கள் படைத்தவர். கண்வ முனிவரின் மகன்.பாட்டன் கோரர். முப்பாட்டன் அங்கிரா. தம் வழித்தோண்றலகளை இவர் ’கண்வரின் மக்கள்’ என்று நினைவு கூறுகிறார்.
சியாவாசுவ
ரிக்வேதத்தில் 15 சூக்தங்களைப் படைத்தவர். அத்திரி முனிவரின் மகன். இவர் அழகான தானம் அளிப்பதற்கு ‘அர்ஹத்’ எனும் சொல்லை பயன்படுத்தினார் ரி.வே.5-25-5. ’அர்ஹத’ எனில் அழகிய மூக்கை உடையவன் என்று பொருள். இவர் சப்தசிந்து பள்ளத்தாக்கு பகுதிக்கு கிழக்கே ஓடும் யமுனை நதியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் (ரி.வே.5-52-17). சப்த சிந்துவின் வடக்கு பகுதியில் பாயும் குபா [காபுல்], கிரமு [குர்ரம்], சரயு, ஆகிய நதிகளைப்பற்றி ரிக்வேதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அத்திரி முனிவரின் வம்சத்தவரில் இவர் மற்ற எல்லோரையும் விட பெரிய முனிவர் ஆவர்.
மதுசந்தா
இவர் விசுவாமித்திரரின் மகன். ரிக்வேதத்தில் 10 சூக்தங்களைப் படைத்தவர். [முஷ்டி ஹத்யா] எனும் ’முழங்கையால் கொல்லுதல்’ என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். (ரி.வே. 1-8-2) அத்துடன் சோம பானத்தை குறிப்பிடுகிறார் (ரி.வே. 9-1-1) இவருக்கு ஜேதா, அகமர்சணன் என்ற இரண்டு முனி குமாரர்கள் இருந்தனர்.
அபாலா, பெண் முனி
ரிக்வேதத்தில் காணப்படும் பெண் முனிவர்கள் லோபமுத்திரை ( அகத்தியரின் மனைவி) மற்றொருவர் அபாலா ஆவார். இவர், ரிக்வேதத்தில் ஒரு சூக்தம் மட்டுமே படைத்துள்ளார். அபாலாவின் வேண்டுதலுக்கு இரங்கி தேவர்கள் அவரது தோல் நோய்யை அகற்றி ஒளிரச் செய்தனர்.
அசுடகர்
இவர் விசிவாமித்திரரின் மகன். ரிக்வேத்தில் ஒரே சூக்தம் மட்டுமே படைத்துள்ளார். ரி.வே. 1-0-104. சப்தசிந்துவின் எழு நதிகளும், ஒன்பது கிளை நதிகளும், தொண்னூறு கால்வாய்களும் குறிப்பிட்டுள்ளார் ரி.வே.10-104-8.
கட்சிவான்
இவர் தீர்க்கதமா-அவுசத்யாவின் மகன். இவரும் மன்னன் திவோதசுவைப் பற்றி குறிப்பிடுகிறார். [ரிக்வேதம் 1-116-15,16,18]. இவர் நூறு கட்டைகள் கொண்ட ஓடம் பற்றி குறிப்பிட்டுள்ளார் [ரி.வே.1-116-5]. இதிலிருந்து அக்காலத்தில் கடலில் செல்லும் கப்பல்களும் சப்தசிந்து பகுதிகளில் இருந்ததாக தெரியவருகிறது. விசுபலா, கோசா, போன்ற மேதாவி பெண்களையும் குறிப்பிடுகிறார் [ரி.வே.1-117-7,11]. மன்னர் ‘பாவ்யா’ புரோகிதருக்கு எவ்வளவு பொருட்கள் தானம் அளித்தார் என்று ரி.வே.1-126-14ல் குறிப்பிடுகிறார். ’காந்தார செம்மறி ஆடுகள்’ பற்றி 1-126-7ல் குறித்துள்ளார்.
குத்சர்
ரிக்வேதத்தில் 15 சூக்தங்களை இயற்றிய இவர், முனி அங்கிராவின் மகன். இவரும் ‘அர்கத்’ [தானம்] என்ற சொல்லை [1-195-1] பயன்படுத்தியதுடன், அசுர மன்னர்களில் சுஷ்ண, பிப்ரு, விருத்திரசூரன், சம்பராசூரன் போன்றவர்களின் பெயர்களை தம் சூக்தங்களில் கூறியுள்ளார். (ரி. வே.1-103-8).
பிரசுகண்வர்
கண்வ ரிஷியின் மகன். ரிக்வேதத்தில் பத்து சூக்தங்களைச் செய்துள்ளார். துர்வசுக்களுக்கும், யது குலத்தவர்களுக்கும் கண்வ முனிவரும், பிரசுகண்வரும் புரோகிதர்களாக இருந்துள்ளனர். துர்வசு--யது இன மக்களுக்கும், மன்னன் சுதாசுக்கும் இடையே நடந்த போர் பற்றி தனது மந்திரங்களில் குறிப்பிட்டுள்ளார்.
ரிக்வேதகால பெண் ரிஷிகள்
கோஷை, கோதை, விசுவவரஸ், அபாலை, உபநிஷதை, மைத்ரேயி, நிசதை, பிரமாஜயை, அதிதி, இந்திராணி, சராமை, ரோமஸை, ஊர்வசி, லோபாமுத்திரை, நதிகள், யமி, ஸ்ரீ, இலக்க்ஷை, ரஜினி, வாக்தேவி, சிரத்தா, மேதை, தட்சினை, இராத்திரி மற்றும் சூரிய சவிதா.
உசாத்துணைகள்
- ரிக்வேத கால ஆரியர்கள், ஆசிரியர், ராகுல் சாங்கிருத்யாயன், அலைகள் வெளீட்டகம், சென்னை
- Rig Veda
- Encyclopedia of Indo-European Culture (sv.Indo-Iranian Langugages, p306) 1500-1100BC
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.