ரந்தெனிவலைச் சண்டை என்பது, சிங்கள - போர்த்துக்கேயப் போர்களின் ஒரு பகுதியாக 25 ஆகத்து 1630 இல் பதுளை நகருக்கு அண்மையில் அமைந்த வெல்லவாயா என்னும் இடத்துக்கு அருகில் உள்ள ரந்தெனிவலை என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டை ஆகும். இது, கண்டி மன்னன், அவனது இரண்டு மகன்கள் ஆகியோரின் படைகள், போர்த்துக்கேய ஆளுனன் கான்சுட்டன்டினோ டி சா டி நோரொஞ்ஞாவின் தலைமையிலான படைகளுக்கும் இடையில் நிகழ்ந்தது.[1] கான்சுட்டன்டினோ டி சா, பதுளை ஊடாகக் கண்டிக்குள் படையெடுத்தபோது இச்சண்டை ஏற்பட்டது. இது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். இச்சண்டையின்போது போர்த்துக்கேயர் பக்கமிருந்த "லசுக்காரின் படை" எனப்பட்ட சிங்களப் படையணிகள் முழுமையாக கண்டியரசன் பக்கத்துக்குச் சென்றுவிட்டன. போர்த்துக்கேயப் படைகள் முழுமையாக அழிக்கப்பட்டன.[2][3][4] படைகளுக்குத் தலைமையேற்று வந்த கான்சுட்டன்டினோ டி சாவும் கொல்லப்பட்டான்.
பின்னணி
1629ல் போர்த்துக்கேயப் படைகள் டி சாவின் தலைமையில் கண்டி இராச்சியத்துக்குள் ஊடுருவி ஊர்களுக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறு அழிவுகளை ஏற்படுத்துவதையும், கண்டி இராச்சியத்தின் எல்லைப்புற ஊர்களிலிருந்து மக்களை இடம்பெயர்த்துத் துரத்துவதையும் ஒரு உத்தியாகவே போர்த்துக்கேயர் செயற்படுத்தி வந்தனர். இதேவேளை கண்டி இளவரசன் போர்த்துக்கேய ஆளுனன் டி சாவுக்கு நெருக்கமான சிங்கள உயர் அலுவலர்கள் சிலரைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு போர்த்துக்கேயருக்கு எதிராகச் சதி வேலைகளைச் செய்ய அவர்களை ஊக்குவித்தான். போர்த்துக்கேயப் படையினரை மலைநாட்டுப் பகுதிக்குள் இழுத்து அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்கான திட்டங்களும் இருந்தன. கண்டி இளவரசன் ஊவாவைக் கடந்து போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் நுழைந்து அழிவுகளை ஏற்படுத்தினான். ஆனாலும், கண்டி மீது படையெடுப்பதற்கு வேண்டிய வளங்கள் டி சாவிடம் இருக்கவில்லை ஆதலால், உடனடியான எதிர் நடவடிக்கைகள் எதிலும் அவர்கள் ஈடுபடவில்லை. கோவாவுக்குப் புதிதாக வந்திருந்த அரசப் பிரதிநிதி கண்டி இராச்சியத்தை வெற்றி கொள்வது தொடர்பில் போதிய முன்னேற்றம் இல்லாதது குறித்து டி சாவிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தான். அத்துடன் டி சா இலங்கைக்கு அனுப்பப்பட்டது போரை நடத்துவதற்காகவே என்பதையும் நினைவூட்டியிருந்தான். இதைத் தொடர்ந்து கண்டி மீது படை எடுப்பதற்கு டி சா முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தான்.[5]
சண்டை
போர்த்துக்கேயப் படையில், முதலியார்களால் அனுப்பப்பட்ட 13,000 லசுக்காரின் எனப்படும் சிங்களப் படையினரும், 700 போர்த்துக்கேயரும் இருந்தனர். 1630 ஆகத்து 25 ஆம் தேதி போர்த்துக்கேயப் படைகள் மெனிக்கடவரை என்னும் இடத்தில் இருந்து கண்டி இராச்சியத்துக்குள் முன்னேறின. நிலைக்குத்தான மலைத் தொடர்களைக் கடந்து எதிர்ப்பு எதுவும் இல்லாமல் மிக மெதுவாகப் படைகள் பதுளை நகரை அடைந்தன. ஏற்கெனவே மக்கள் வெளியேறிவிட்ட அந்நகரை இரண்டு நாட்களாகச் சூறையாடியாடிய பின்னர் அதைத் தீவைத்து எரித்தனர். அங்குராங்கெட்டையில் இருந்து கண்டியரசனின் மூத்த மகன் மகா அசுத்தனன் தலைமையில் புறப்பட்ட கண்டிப் படைகள் கந்தகெதர என்னும் இடத்தில் போர்த்துக்கேயப் படைகளை நெருங்கின. உடனடியாகவே மோதல்கள் தொடங்கிவிட்டன. தாம் சிறிது சிறிதாகச் சூழப்பட்டு வருவதை உணர்ந்த போர்த்துக்கேயத் தரப்பினர் தம்மிடம் மேலதிகமாக இருந்த சுமைகளையும், தாம் சூறையாடிய பொருட்களையும், எரித்துவிட்டுப் பின்வாங்கத் தயாராகினர். போர்த்துக்கேயரின் வியூகத்தில் ஏழு கோறளைகளையும், கொழும்பையும் சேர்ந்த லசுக்காரின் படைகள் போர்த்துக்கேயரைச் சூழ நின்றன. அமரக்கோன் ராலா மற்றும் சிலரின் உதவியுடன் விக்கிரமசிங்கா என்பவன் லசுக்காரின் படைகளுக்குத் தலைவனாக இருந்தான். பின்னேறத் தொடங்கியதுமே கண்டிப் படைகள் தாக்குதலைத் தொடங்கின. போர்த்துக்கேயர் கலையத் தொடங்கினர். அவர்களில் ஒருவனின் தலையைச் சீவிய விக்கிரமசிங்கா அத்தலையை ஈட்டியில் செருகி அதன்மீது வெள்ளைத் துணியொன்றைப் போர்த்தியபடி தனது ஆட்கள் சிலருடன் கண்டிப் படையினர் பக்கம் சேர்ந்துகொண்டான். என்ன நடக்கிறது என்று புரியாது திகைத்து நின்ற ஏனைய லசுக்காரின் படையினர் பலரை அமரக்கோனின் ஆட்கள் கண்டிப் படைகள் பக்கம் துரத்திவிட்டனர்.[6]
மூன்று நாட்களுக்குப் பின்னர் பெரும் இழப்புடன் போர்த்துக்கேயப் படைகள் நாகவலக்கடை என்னுமிடத்தை அடைந்தன. ஏழு கோரளைகளின் திசாவையான லூயிசு தெயிக்யிசெரா, இன்னொரு அதிகாரி மிகுவேல் டா பொன்சேக்கா, மேலும் பல அலுவலர், படையினர் எனப் பலர் உயிருடன் கண்டிப் படைகளிடம் பிடிபட்டனர். மேலும் பின்வாங்கிய போர்த்துக்கேயப் படைகள் ரந்தெனிவலை வெளியை அடைந்தன. எஞ்சியிருந்த லசுக்காரின்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் போர்த்துக்கேயரை விட்டு விலகிச் சென்றனர். நேரத்தில், அம்புகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் போர்த்துக்கேயப் படைகள் தாக்கப்பட்டன. இரவு நேரத்தில் அவர்களால் பாதுகாப்பு அரண்களை நிறுவிக்கொள்ள முடியவில்லை. இதற்கும் மேலாகப் பல மணிநேரம் பெய்த மழையால், போர்த்துக்கேயரின் வெடிமருந்துகள் பயனற்றவை ஆகிவிட்டன.[1] போர்த்துக்கேயரின் மூத்த தளபதிகள் இரவோடு இரவாகத் தப்பிச் செல்லுமாறு டி சாவை வேண்டினர். ஆனாலும் டி சா படையினரை மோசமான நிலையில் விட்டுவிட்டுச் செல்ல மறுத்துவிட்டான். அடுத்தநாட் காலை மீண்டும் சண்டை தொடங்கியது. கண்டிப் படைகள் போர்த்துக்கேயப் படைகளை மேலும் நெருக்கமாகச் சூழ்ந்து கொண்டன. டி சாவை உயிருடன் பிடிக்குமாறு கண்டி அரசன் ஆணையிட்டிருந்தான். ஆனால், டி சா வீரத்துடன் போராடிக்கொண்டிருந்தான். இரண்டு உதவியாளர் அருகில் நின்று நிரப்பப்பட்ட துப்பாக்கிகளை எடுத்துக்கொடுக்க அவன் எதிரிகளைச் சுட்டு வீழ்த்திக்கொண்டிருந்தான்.[7]
இறுதியாக அவனைச் சுடும்படி ஆணை கிடைத்தது. அவனது உதவியாளர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். டி சா வாளை உருவிப் போரிடத் தொடங்கினான். டி சா எவ்வாறு இறந்தான் என்பது குறித்துப் பல கதைகள் காணப்படுகின்றன. கேரோசுப் பாதிரியாரின் குறிப்புக்களின்படி இரண்டு அம்புகள் டி சாவை மார்பிலும் தோளிலும் தாக்க அவன் கீழே விழுந்தான். இன்னொரு அம்பு அவன் உயிரைக் குடித்தது. ஆனால், டி சா உயிருடன் பிடிபடுவதைத் தடுக்கத் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தான் எனத் தான் கண்டிப்படையினர் சொல்லக் கேட்டதை ராபர்ட் நொக்சு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[8]
விளைவு
பல முக்கிய போர்த்துக்கேயத் தளபதிகள் போரில் இறந்தனர். தளபதிகள் உள்ளிட்ட 200 போர்த்துக்கேயர் கண்டிப் படைகளிடம் உயிருடன் பிடிபட்டனர். சபிரகமுவாவின் திசாவை சில லசுக்காரின்களுடன் தப்பிச் சென்றான். ஆனால், அவனும் எல்லையருகே பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். டி சாவின் தலை கண்டியில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு இறுதியாக மரம் ஒன்றின் தொங்கவிடப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.