From Wikipedia, the free encyclopedia
லசுக்காரின் (சிங்களம்: ලස්කිරිඤ්ඤ லஸ்கிரிஞ்ஞ, ஆங்கில மொழி: lascarins) என்பது, இலங்கையில் 1505-1658 காலப்பகுதியில் போர்த்துக்கேயருக்குக் கீழும் பின்னர் 1930கள் வரை பிற குடியேற்றவாத ஆட்சியாளர்களின் கீழும் பணியாற்றிய உள்நாட்டுப் போர்வீரர்களைக் குறிக்கும் சொல் ஆகும். லசுக்காரின்கள் குடியேற்றவாதப் படைகளில் முக்கிய பங்காற்றியது மட்டுமன்றி உள்ளூர் இராச்சியங்களின் படைநடவடிக்கைகளின் வெற்றிக்கும் பங்களிப்புச் செய்துள்ளன.[1][2][3]
லசுக்காரின் Lascarins | |
---|---|
படிக்கார முகாந்திரம் ஆர்தர் சில்வா வொஜேசிங்க சிறிவர்தனவின் லசுக்கரின் காவல்படைகள் (1889-1947) | |
செயற் காலம் | 1500கள்–1930கள் |
நாடு | போர்த்துக்கேய இலங்கை ஒல்லாந்தர் கால இலங்கை பிரித்தானிய இலங்கை |
பற்றிணைப்பு | போர்த்துகல் நெதர்லாந்து பிரித்தானியா |
கிளை | இராணுவம் |
வகை | காலாட் படை |
சண்டைகள் | சிங்கள-போர்த்துக்கீசப் போர் இடச்சு-போர்த்துக்கீசப் போர் |
இச்சொல், "படை முகாம்" அல்லது "படை" என்னும் பொருள் கொண்ட பாரசீக மொழிச் சொல்லான "லசுக்கர்" Lashkar (பாரசீக மொழி: لشکر) என்பதிலிருந்து பெறப்பட்டது. தொடர்புடைய அரபிச் சொல்லான "அஸ்கர்" ('Askar (அரபு: عسكر) என்பது "காவலன்" அல்லது "போர்வீரன்" என்னும் பொருள் தருவது.[4] போர்த்துக்கேயர் ஆசியப் படைவீரர்களையோ மாலுமிகளையோ குறிக்க "லஷ்கர்" என்பதை லஸ்காரின் (lasquarin) எனப் பயன்படுத்தினர். ஆங்கிலத்தில் இதே பொருளில் lascar எனப் பயன்பாட்டுக்கு வந்தது. இலங்கையில் இது உள்ளூர்ப் போர்வீரர்களைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவில் Gun Lascar எனக் கூறப்பட்டது.[5]
போர்த்துக்கேயர் முதலில் 1505 ஆண்டு இலங்கைக் கரையில் இறங்கினர். 1517 அளவில் அவர்கள் கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்ட முடிந்ததோடு உள்வரும், வெளிச்செல்லும் வணிகத்தையும் கட்டுப்படுத்தினர். 1521க்குப் பின்னர் உள்ளூர் இராச்சியங்களின் விடயங்களிலும் அவர்களுடைய தலையீடு தொடங்கியது. போர்த்துக்கேய ஆளணிகள் குறைவாக இருந்ததால், தங்களைப் பாதுகாக்கவும், கோட்டே இராச்சியத்தின் நலன்களைப் பாதுகாக்கவும், தாக்குதல் நடவடிக்கைகளில் உதவவும் உள்ளூர் போர்வீரர்களைப் பணிக்கு அமர்த்தினர். ஏறத்தாழ எல்லா லசுக்காரின்களுமே கத்தோலிக்கராக மதம் மாறிய சிங்களவராகவே இருந்தனர்.[3][6] இக்காலத்திலேயே பல அரச குடும்பத்தினரும் கத்தோலிக்க மதத்துக்கு மாறினர். போர்த்துக்கேயர் உள்ளூர் இராச்சியங்கள் மீது (குறிப்பாகக் கோட்டே இராச்சியம்) நேரடிக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்த பின்னர் உள்ளூர் அரசர்களுடைய வீரர்களும் லசுக்காரின்கள் ஆகியதுடன், முதலி, முகாந்திரம், ஆராய்ச்சி, கங்காணி போன்ற பதவிகளையும் அப்படியே பயன்படுத்தி வந்தனர்.
உள்ளூர்ப் புவியியலை நன்கு தெரிந்து வைத்திருந்ததால், போர்த்துக்கேயரின் உள்ளூர் இராச்சியங்களுடனான போர்களில் லசுக்காரின்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இலங்கையில் போர்த்துக்கேயர் பங்குபற்றிய ஏறத்தாழ எல்லாத் தொடக்ககாலப் போர்களிலும் அவர்களின் படைகளிற் பெரும்பான்மையினர் லசுக்காரின்களாகவே இருந்தனர். சில சந்தர்ப்பங்களில் போர்களின்போது லசுக்காரின்கள் அணிமாறி உள்ளூர் இராச்சியங்களுக்காகப் போராடியதும் உண்டு. தந்துறைப் போரில் போர்த்துக்கேயப் படைகளில் இருந்து அணிமாறிய லசுக்காரின்களால் கண்டியரசனின் படைகள் இரு மடங்காகின. 1630 இல் ரந்தெனிவலச் சண்டையிலும் போர்த்துக்கேயருடன் சேர்ந்து போரிட்ட ஏறத்தாழ எல்லா லசுக்காரின் படையினருமே அணிமாறிவிட்டனர்.[1][2] இதனால் தமது பிற்காலப் போர்களில் இந்திய, ஆப்பிரிக்க (காப்பிரி), மலே கூலிப்படைகளில் போர்த்துக்கேயர் கூடுதலாகத் தங்கியிருக்க வேண்டியதாயிற்று. இலங்கையில் கரையோர இராச்சியங்களில் போர்த்துக்கேயரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த போர்த்துக்கேய - ஒல்லாந்தப் போர்களில் இரண்டு பக்கங்களிலும் லசுக்காரின்கள் போரிட்டனர்.[7][8]
1640 - 1796 காலப்பகுதியில் ஒல்லாந்தர் படைகளில் லசுக்காரின்கள் சேவையில் இருந்தனர். லசுக்காரின்கள் "கம்பனி" எனப் பொருள்படும் "ரஞ்சு"க்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு ரஞ்சுவிலும் இரண்டு அல்லது மூன்று உள்ளூர்த் தலைவர், முகாந்திரம், ஆராய்ச்சி, அல்லது கங்காணிகளும் 24 வீரர்களும் இருப்பர். கோறளை ஒன்றின் முதலியாருக்குக் கீழ் பல ரஞ்சுக்கள் இருக்கும்.[9] பிரித்தானியர் காலத்தில் லசுக்காரின்கள் தமது படைத்துறை வகிபாகத்தை இழந்து சடங்குமுறைக் காவலர்கள் ஆகிவிட்டனர். செல்வாக்குள்ள முதலியார்கள் சிலர் தனிப்பட்ட பாதுகாப்புக்காக பிரித்தானிய அலுவலர்களிடம் அனுமதி பெற்றுச் சிறிய லசுக்காரின் பிரிவுகளை வைத்திருந்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.