மிர்துலா சாராபாய் (Mridula Sarabhai, 6 மே 1911 – 26 அக்டோபர் 1974) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஆமதாபாத்தில் பிறந்த இவர் வளமான தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்பாலால் சாராபாய், சரியா தேவி இணையருக்குப் பிறந்தவர் ஆவார். மேலும் இவர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்கிரம் சாராபாய் இன் சகோதரி ஆவார்.[1] இவர் பள்ளிக்குப் போகாமலே இல்லத்தில் இருந்து கல்வி பயின்றார்.இருப்பினும் 1928 இல் குசராத்து வித்யாபீத்தில் சேர்ந்து இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் அழைப்பை அடுத்து அயல்நாட்டுப் பொருள்கள், நிறுவனங்கள் முதலியவற்றைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்கினார். எனவே வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பை மறுத்தார்.

இந்திய விடுதலைப் போராட்டச் செயல்பாடுகள்

இளம் அகவையில் மகாத்மா காந்தியின் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார்.குரங்குப் படை என்ற இந்திரா காந்தி தொடங்கிய குழந்தைகளின் போராட்ட அமைப்பில் சேர்ந்தார்.1927 இல் இராஜ்கோட்டில் இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். உப்பு சத்தியாகிரகப் போராட்டக் காங்கிரசு சேவா தளத்தில் சேர்ந்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தினால் சிறைக்கும் சென்றார்.[2] 1932 இல் அனைத்திந்திய காங்கிரசு கமிட்டிக்கு, குசராத்து மாநிலம் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார். சில ஆண்டுகளில் குசராத்து மணிலா காங்கிரசுத் தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மிருதுலா சாராபாய் காங்கிரசுக் கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளில் முக்கியப் பங்கு ஆற்றினார். பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கினார்.

1946 இல் ஜவகர்லால் நேரு இவரைக் காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலார்களில் ஒருவராக அமர்த்தினார். செயற்குழுவிலும் இடம் பெறச் செய்தார். பின்னர் அப்பதவியிலிருந்து விலகி நவகாளிப் படுகொலைகள் நடந்தபோது மகாத்மா காந்தியுடன் மிருதுலா நவகாளிக்குப் பயணம் செய்தார்.

இந்தியப் பிரிவினையின் விளைவாக ஏற்பட்ட மதக் கலவரத்தில் அமைதியும் இணக்கமும் ஏற்பட முயன்றார். 1947 ஆகத்து 15 இல் பாட்னாவில் கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் வன்செயல்கள் பஞ்சாபில் வெடித்துக் கிளம்பியபோது அங்கும் சென்று கொந்தளிக்கும் மக்களிடையே அமைதி நிலவப் பாடுபட்டார். இவருடைய அமைதி முயற்சியை இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் பாராட்டினார்கள்.

காங்கிரசுடன் பிணக்கு

இந்தியா விடுதலை அடைந்த பிறகு காங்கிரசுக் கட்சியுடன் இவருக்குப் பிணக்கு உண்டானது. காசுமீரத் தலைவர் சேக் அப்துல்லாவை ஆதரிக்கத் தொடங்கினார். சேக் அப்துல்லா மீது இருந்த வழக்கின் பொருட்டு இவர் பணம் கொடுத்தார்.[3] இவர் மீது சதி வழக்கு இல்லையானாலும் காசுமீர் சிக்கலில் இவர் கைது ஆகி பல மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டார்.[4]

மேலும் பார்க்க

மேற்கோள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.