இந்திய ஓவியர் From Wikipedia, the free encyclopedia
மக்புல் ஃபிதா உசைன் (Maqbool Fida Husain), ( செப்டம்பர் 17,1915, பந்தர்பூர், மகாராட்டிரம் - சூன் 9, 2011, இலண்டன், ஐக்கிய இராச்சியம்[1] ) இந்தியாவின் ஓர் சிறந்த ஓவியக்கலைஞர். பரவலாக எம்.எஃப்.உசைன் (M F Husain)என அறியப்படும் இவர் தனது ஏழுபதாண்டு பணிவாழ்வில் ஏராளமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன.
ஃபோர்பஸ் இதழ் இவரை இந்தியாவின் பிக்காசோ எனப் பாராட்டுகிறது.[2] இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டிலிருந்து துபாய் நகரில் வசித்து வந்தார்.[3][4]
மகாராஷ்ட்ர மாநிலம் (அப்போதைய பாம்பே ராஜதானி) சோலாப்பூர் மாவட்டம் பண்டர்புரில் போரா இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்; உசைன் சுலைமானி போரா குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சிறு வயதிலேயே தமது தாயாரை இழந்தார். அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டு இந்தூர் சென்றார். தமது துவக்கக் கல்வியை அங்கு கற்ற உசைன் 1935ஆம் ஆண்டு மும்பையில் ஜே.ஜே கலைப்பள்ளியில் சேர்ந்தார்.
துவக்கத்தில் திரைப்பட விளம்பர தட்டிகள் வரைந்து தமது வாழ்க்கையைத் துவங்கினார். 1940களிலிருந்து அவரது ஓவியப்பணி அறியப்பட்டது.1952ஆம் ஆண்டு தமது தனிப்பட்ட ஓவியக் கண்காட்சியை சூரிச்சு நகரில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே ஐரோப்பா,அமெரிக்க நாடுகளில் அவர் புகழ் பரவியது.இந்திய அரசு 1955ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இதனைத் தொடர்ந்து 1973ஆம் ஆண்டில் பத்ம பூசன்|பத்ம பூசண் விருதும் 1991ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருதும் வழங்கியது. இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத் ரத்னா வழங்கப்பட இவரது இரசிகர்கள் அரசிற்கு மனு கொடுத்தனர்.[5] அவரது ஓவியம் கிரிஸ்டி ஏல நிறுவனத்தால் $1.4 மில்லியனுக்கு விற்கப்பட்டது.[6]
உசைன் திரைப்படங்களும் எடுத்தார். 1967ஆம் ஆண்டு ஒரு ஓவியரின் பார்வையில் (Through the Eyes of a Painter) என்ற படத்தைத் தயாரித்தார். இது பெர்லின் திரைப்பட விழாவில் தங்கk கரடி (Golden Bear) விருது பெற்றது.[7][8] அவரின் அபிமான நடிகை மாதுரி தீட்சித் நடிக்க கஜகாமினி என்ற திரைப்படத்தையும், மீனாட்சி:மூன்று நகரங்களின் கதை என்ற தபு நடித்த திரைப்படத்தையும் இயக்கினார். அந்த படத்தில் வந்த சில வசனங்கள் இசுலாமிய மதத்தை அவமதிப்பவை எனவும் சர்ச்சை எழுந்தது[9].
சரசுவதி, லட்சுமி, சிவன், அனுமன், சீதை போன்ற இந்துக் கடவுள்களை உசைன் நிர்வாணக் கோலத்தில் வரைந்ததும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாரத மாதா கற்பழிக்கப்பட்டது போன்று வரைந்தது (Rape Of India) பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்துக் கடவுள்களை மட்டும் உசைன் அவமதிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் வண்ணம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர்.
இந்து சமய நம்பிக்கைகளை அவதூறு செய்தார் எனவும், இரு வேறு சமயத்தவரிடையே பகையுணர்வைத் தூண்டினார் எனவும் உசைன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன; பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. உசைன் வீட்டின் மீது இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சர்ச்சைகளாலும், கொலை மிரட்டல்களாலும் 2006இல் இந்தியாவை விட்டு வெளியேறிய உசைன் துபாய் நகரில் வாழ்ந்து வந்தார். 2010ம் ஆண்டு கத்தார் நாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.