போர்டிக்சன்
நெகிரி செம்பிலான் மாநிலத்தில், போர்டிக்சன் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். From Wikipedia, the free encyclopedia
நெகிரி செம்பிலான் மாநிலத்தில், போர்டிக்சன் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். From Wikipedia, the free encyclopedia
போர்டிக்சன் என்பது (மலாய்: Port Dickson; ஆங்கிலம்: Port Dickson; சீனம்: 波德申) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், போர்டிக்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம் ஆகும்.
போர்டிக்சன் | |
---|---|
Port Dickson | |
நெகிரி செம்பிலான் | |
அடைபெயர்(கள்): PD | |
ஆள்கூறுகள்: 2°31′N 101°48′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
தொகுதி | போர்டிக்சன் மாவட்டம் |
உள்ளூராட்சி | போர்டிக்சன் உள்ளூராட்சி மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | கைரி மாமோர்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 572.35 km2 (220.99 sq mi) |
மக்கள்தொகை (2015 [3]) | |
• மொத்தம் | 1,19,300 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 71xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
இணையதளம் | போர்டிக்சன் நகராண்மைக் கழகம் |
போர்டிக்சன் நகரம், மலேசியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமான விடுமுறைச் சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 90 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. உள்ளூர் மக்களால் பி.டி. (PD) என்று செல்லமாக அழைக்கப் படுகிறது.
கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் போன்ற பெருநகரங்களில் இருந்து முக்கிய நெடுஞ்சாலைகளால் இந்த நகரம் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த நகரத்தின் கடற்கரைகள் 10 மைல் நீளத்திற்கு நீண்டுள்ளன. இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஒரே ஒரு கடற்கரை நகரம் ஆகும்.
முன்பு காலத்தில் போட்டிக்சன் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த கிள்ளான் கிள்ளான் மாவட்டத்தின் (Luak of Kelang) ஒரு பகுதியாகும்.
சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாட் (Sultan Abdul Samad); லுக்குட் மாவட்டத்தின் ஆட்சியாளர் ராஜா போட் (Raja Bot); சுங்கை ஊஜோங் (Sungai Ujong) பகுதியைச் சேர்ந்த டத்தோ கெலானா (Dato' Kelana) மற்றும் பிரித்தானியருக்கு இடையே 30 ஜூலை 1880-இல் சிங்கப்பூரில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.
அந்தச் சந்திப்பில் சிலாங்கூருக்குச் சொந்தமான லுக்குட் பகுதி; சுங்கை ஊஜோங்கிடம் கொடுக்கப்பட்டது. சுங்கை ஊஜோங் நாளடைவில் நெகிரி செம்பிலான் என்று அறியப்பட்டது.
1760-ஆம் ஆண்டுகளில் போர்டிக்சன், ஒரு சிறிய மீன்பிடிக் கிராமம். அப்போது அங்கு வாழ்ந்த சீனர்களும்; இந்தியர்களும் ஆராங் (Arang) என்று அழைத்தனர். ஆராங் என்றால் மலாய் மொழியில் நிலக்கரி என்று பொருள். அந்தப் பெயர் ஓர் உள்ளூர் நிலக்கரி சுரங்கத்தின் பெயராகும். மலாய்க்காரர்கள் தஞ்சோங் என்று அழைத்தனர்.
1820-ஆம் ஆண்டுகளில், போர்டிக்சன் நகருக்கு வடக்கே இருந்த லுக்குட் எனும் நகரில் ஈயப் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் சீனர்கள் போர்டிக்சன் பகுதிக்கு பெரும் அளவில் குடிபெயர்ந்தார்கள். 1840-ஆம் ஆண்டுகளில் போர்டிக்சன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல காபி, மிளகுத் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.
1870 - 1900-ஆம் ஆண்டுகளில் மலாயா, நெகிரி செம்பிலான், போர்டிக்சன், லிங்கி, லுக்குட் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன. ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு பல வகையான உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன.[4]
1905-ஆம் ஆண்டில், போர்டிக்சனுக்கு அருகாமையில் இருந்த லுக்குட் காபி தோட்டம் புனரமைப்பு செய்யப் பட்டது. லிங்கி தோட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் காபி சாகுபடியும் நிறுத்தப் பட்டது. 1906-ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி தொடங்கியது.[5][6]
பிரித்தானிய ஆட்சியாளர்கள் பெங்காலான் கெம்பாசு எனும் இடத்தில் ஒரு துறைமுகம் அமைக்க திட்டமிட்டனர். சர் பிரடெரிக் டிக்சன் (Sir John Frederick Dickson) எனும் பிரித்தானிய அதிகாரி, ஈயம் கொண்டு செல்வதற்கான துறைமுகமாகப் போர்டிக்சன் நகரத்தை மாற்றி அமைத்தார். அதற்கு பொறுப்பு வகித்த அவரின் பெயரால் அவ்விடத்திற்கு போர்ட்டிக்சன் என்று பெயரிடப்பட்டது.[7][8]
போர்டிக்சன் புறநகர்ப் பகுதிகளில் செபாத்தாங் காரா (Sebatang Karah), செகெந்திங் (Segenting), சி ரூசா (Si Rusa) மற்றும் சுங்கலா (Sunggala) போன்ற மலேசிய இராணுவத்தின் இராணுவ முகாம்களும் உள்ளன. தேசிய அளவிலான இராணுவ பணிகளை அடையாளம் காட்டும் வகையிலும் செப்டம்பர் 2009-இல் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களால், போர்டிக்சன் நகரம் ஓர் இராணுவ நகரம் என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
இன்றைய காலத்தில் போர்டிக்சன் ஒரு பரபரப்பான வர்த்தக மையமாக உருவெடுத்து உள்ளது. போர்டிக்சனின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிக்காக ஓர் இரயில் பாதையும் அமைக்கப்பட்டது.
ஆனால் இப்போது பயன்பாட்டில் இல்லை. போர்டிக்சன் விரைவான நவீன வளர்ச்சியை அடைந்து உள்ளது. இருப்பினும் அதன் கடற்கரைகள் நன்றாகப் பாதுகாக்கப் படுகின்றன.
போர்ட்டிக்சனின் பொருளாதரத்திற்கு எண்ணெய், எரிவாயு தயாரிப்பு மற்றும் சுற்றுலாத் துறை பெரும் பங்காற்றுகிறது. போர்ட்டிசனில் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றுள் செல் (Shell) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை 1962-ஆம் ஆண்டில் இருந்தும்; பெட்ரோன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (முன்பு எக்சோன் மோபில்- ExxonMobil Malaysia) 1963-ஆம் ஆண்டில் இருந்தும் செயல்பட்டு வருகின்றன.
தஞ்சோங் கெமுக் (Tanjung Gemuk) எனும் இடத்தில் இருந்து தஞ்சோங் துவான் வரையில் 18 கி.மீ. (11 மைல்) நீளமுள்ள கடற்கரை கொண்ட நகரம். உள்ளூர் மக்களுக்கும், வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்கும் இடமாகின்றது.
சிங்கப்பூரியர்கள் பலர் போர்டிக்சன் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள விடுமுறை விடுதிகளில் முதலீடுகள் செய்து உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பல ஆண்டுகளாக, பல தங்கும் விடுதிகளும் ஓய்வு விடுதிகளும் திறக்கப்பட்டு வருகின்றன. 1990-ஆம் ஆண்டுகளில், போர்டிக்சனில் புதிய தங்கும் விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகள் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப் பட்டன.
இருப்பினும், 1997-ஆம் ஆண்டின் ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாக, இந்த திட்டங்களில் பல முடங்கின. அதன் காரணமாக போர்டிக்சன் கடற்கரையோரத்தில் பல முடிக்கப் படாத கட்டிடங்கள் இருந்தன.
அந்த விடுதிகளில் பாதி கட்டப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. இருப்பினும் 2000-களின் பொருளாதார மறுமலர்ச்சியினால், பல திட்டங்கள் இறுதியில் புதுப்பிக்கப்பட்டு முடிக்கப்பட்டன.
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) போர்டிக்சன் நகரத்தின் நாடாளுமன்றத் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P132 | போர்டிக்சன் | அன்வார் இப்ராகிம் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
போர்டிக்சன் வட்டாரத்தின் சட்டமன்றத் தொகுதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[9][10]
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P132 | N29 | சுவா | யெக் டியூ சிங் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
P132 | N30 | லுக்குட் | சூ கென் ஹுவா | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
P132 | N31 | பாகன் பினாங் | அயிருடின் அபு பக்கார் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P132 | N32 | லிங்கி | ரகுமான் ரெட்சா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P132 | N33 | ஸ்ரீ தஞ்சோங் | ரவி முனுசாமி | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
நெகிரி செம்பிலான்; போர்டிக்சன் மாவட்டத்தின்; போர்டிக்சன் நகரத்தில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 371 மாணவர்கள் பயில்கிறார்கள். 35 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD2034 | போர்டிக்சன் | SJK(T) Port Dickson[11][12] | போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி | 71000 | போர்டிக்சன் | 323 | 26 |
NBD2035 | போர்டிக்சன் (தாமான் உத்தாமா) | SJK(T) Ldg St Leonard[13] | செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி | 71010 | போர்டிக்சன் | 48 | 9 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.