From Wikipedia, the free encyclopedia
புதுவை சிவம் என அறியப்படும் புதுச்சேரி சண்முக வேலாயுத சிவப்பிரகாசம் (23 அக்டோபர் 1908 – 31 ஆகத்து 1989) கவிஞர்; இதழாளர்; நாடக ஆசிரியர்; அரசியலர்; சமூகச் சீர்திருத்துநர்; பள்ளி ஆசிரியர்; பதிப்பாளர்; சொற்பொழிவாளர்; கட்டுரையாளர்.
புதுவை சிவம் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை ) | |
பதவியில் 7 ஆகத்து 1969 – 6 ஆகத்து 1975 | |
முன்னையவர் | பி. ஆப்ரகாம் |
பின்னவர் | வி. பி. எம். சாமி |
தொகுதி | புதுச்சேரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 அக்டோபர் 1908 பாண்டிச்சேரி, பிரெஞ்சு இந்தியா (தற்போது புதுச்சேரி, இந்தியா) |
இறப்பு | 31 ஆகத்து 1989 80) | (அகவை
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (1949-89) |
பிற அரசியல் தொடர்புகள் | சுயமரியாதை இயக்கம் (1926-44) திராவிடர் கழகம் (1945-1949) |
துணைவர் |
|
பிள்ளைகள் | சிவ. இளங்கோ (மகன்) |
பெற்றோர் | விசாலாட்சி (தாய்) வேலாயுதம் (தந்தை) |
வேலை | கவிஞர்; இதழாளர்; நாடக ஆசிரியர்; அரசியலர்; சமூகச் சீர்திருத்துநர்; பள்ளி ஆசிரியர்; பதிப்பாளர்; சொற்பொழிவாளர்; கட்டுரையாளர் |
புதுச்சேரி முத்தியாலுபேட்டையில் வாழ்ந்த வேலாயுதம் – விசாலாட்சி இணையரின் தலைமகனாக 23 அக்டோபர் 1908 அன்று பிறந்தார் சிவம் .[1]
திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் பிரஞ்சும் தமிழும் பயின்றார். இவருக்கு 1926 ஆம் ஆண்டில் பாரதிதாசன் என்னும் கனக. சுப்புரத்தினத்தின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் சிவம் தமிழ் யாப்பு இலக்கணங்களைக் கற்று கவிதைகள் எழுதத் தொடங்கினார்.[1]
புதுச்சேரிக்கு 1926-இல் வருகை தந்த "பெரியார்" ஈ. வெ. இராமசாமியின் உரையால் ஈர்க்கப்பட்ட சிவம், சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார்.[1]
22 சூலை 1945அன்று பெரியார், "பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரை அழைத்து புதுவையில் திராவிடர் கழகத்தைத் தொடங்கினார்.[2] பின்னர் அக்கழகத்தின் செயலாளரானார்.
சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து தீவிரமாக இயங்கத் தொடங்கிய சிவம், அவ்வியக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்காக 1930ஆம் ஆண்டில் பாரதிதாசனால் தொடங்கப்பட்ட புதுவை முரசு இதழின் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.[3]
இவ்விதழில் புதுவைச் சிவம், பாரதிதாசன், குத்தூசி குருசாமி உள்ளிட்ட பலரும் கட்டுரை, கவிதை, கதை ஆகியவற்றை எழுதினர். அதில் புதுவை சிவம் கிறித்துத் துறவிகளைப் பற்றி கட்டுரை எழுதினார். அதன் காரணமாக அவ்விதழின் மீது வழக்குத் தொடரப்பட்டு 1932 ஆம் ஆண்டில் புதுவை சிவத்திற்கு 550 பிராங்க் (பிரெஞ்சு நாணயம்) தண்டமும் மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் பிரான்சு நீதிமன்றத்தில் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.[3] பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்விதழ் சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது.
புதுவை சிவம், பாரதிதாசனை ஆசிரியராகக்கொண்டு பாரதி கவிதா மண்டலம் என்னும் இதழை 1935 ஆம் ஆண்டில் தொடங்கினார். இவ்விதழ் முற்றிலும் கவிதை இதழாக வெளிவந்தது. இது ஓராண்டுக்கு மேல் வெளிவரவில்லை.
புதுவை சிவம் சுயமரியாதை இயக்கத்தவர்களான பாரதிதாசன், குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி ஆகியோருடனும் சோசலிச இயக்கத்தவரான எசு. ஆர். சுப்பிரமணியத்துடனும், பொதுவுடைமை இயக்கத்தவரான வ. சுப்பையாவுடனும் நெருங்கிப் பழகினார். இதனால் இம்மூன்று கருத்துகளின் தாக்கத்திலும் தனது படைப்புகளை கவிதை, கதை, நாடகம், கட்டுரையென பல்வேறு வடிவங்களில் உருவாக்கினார். அப்படைப்புகள் புதுவை முரசு, குடியரசு, நகர தூதன், சண்டமாருதம், விடுதலை, புதுஉலகம், பொன்னி, போர்வாள், திராவிடநாடு, முரசொலி, தமிழரசு, தென்றல், மன்றம், கழகக்குரல், திராவிடன், தொழிலாளர்மித்திரன், நம்நாடு, அறிவுக்கொடி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்தன. அவை பின்வரும் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன:
ஆண்டு | நூல் | வகை |
1932 | புதுவை நெசவுத் தொழில் எழுச்சிப் பாடல் | பாடல் |
1935 | ரஞ்சித சுந்தரா அல்லது இரகசிய சுரங்கம் | நாடகம் |
தமிழர்வீழ்ச்சி அல்லது இராமாயண சாரம் | நாடகம் | |
வீரத்தாய் | நாடகம் | |
தமிழச்சியின் தேசபக்தி | நாடகம் | |
1936 | புதுவை சவானா மில் படுகொலைப் பாட்டு | பாடல் |
1937 | அமுதவல்லி அல்லது அடிமையின் வீழ்ச்சி | நாடகம் |
1938 | சமூகசேவை | நாடகம் |
1939 | கோகிலராணி | நாடகம் |
1940 | வீரநந்தன் | நாடகம் |
காந்திமதி அல்லது கல்வியின் மேன்மை | நாடகம் | |
கோவலன் கண்ணகி | நாடகம் | |
1944 | பெரியார் பெருந்தொண்டு | கவிதை |
1945 | கைம்மை வெறுத்த காரிகை | கவிதை |
மறக்குடி மகளிர் | கவிதை | |
தமிழர் தன்மதிப்புப் பாடல்கள் | பாடல்கள் | |
1946 | திராவிடப்பண் | பாடல்கள் |
காதலும் கற்பும் | கவிதைகள் | |
மறுமலர்ச்சிப் பாடல்கள் | கவிதைகள் | |
1948 | இந்தி மறுப்புப் பாடல்கள் | கவிதைகள் |
1950 | தமிழிசைப் பாடல்கள் | பாடல்கள் |
1951 | தன்மதிப்புப் பாடல்கள் | கவிதைகள் |
1970 | நிலம் யாருக்குச் சொந்தம் | நாடகம் |
புதுவை சிவம் இயற்றிய கவிதைகள் அனைத்தும் தொகுத்து 1993 ஆம் ஆண்டில் முல்லைப் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. அவரின் ஒன்பது கவிதை நூல்களைத் தொகுத்து புதுவை சிவம் கவிதைகள் என்னும் தலைப்பில் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை 1997 ஆம் ஆண்டில் வெளியிட்டு இருக்கிறது. அவருடைய நாடகங்களைத் தொகுத்து புதுவை சிவம் நாடகங்கள் என்னும் தலைப்பில் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டு இருக்கிறது.
பெரியார் விழாவும் நாமும் என்னும் தலைப்பில் ஆற்றிய உரையை, புதுவை சிவம் நூலாக தனது ஞாயிறு நூற்பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார்.[2] மேலும் அப்பதிப்பகத்தின் வழியாக பல்வேறு திராவிட இயக்கம் சார்ந்த எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டார். அவ்வகையில் அண்ணாவின் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட நூலான ஆரியமாயை நூலைப் பிரஞ்சு இந்தியாவில் வெளியிட்டார். மேலும் பாவேந்தரின் புரட்சிக்கவி, மகாகவி பாரதியார் முதலான நூல்களையும் வெளியிட்டார்.[3]
சுயமரியாதை இயக்கத்தவரான புதுவை சிவம் அவ்வியக்கத்தின் கொள்கைப்படி வேள்வி வளர்க்காமல், மறையோதாமல் பாரதிதாசன் தலைமையில் 1940 செப்டம்பர் 15 ஆம் நாள் ஜெகதாம்பாள் என்பவரை சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்.[1]
புதுவை சிவம் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]
1949 ஆம் ஆண்டில் அண்ணாதுரை திராவிடர் கழகத்தில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபொழுது, புதுவை சிவமும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். பின்னர் அக்கழகத்தின் சார்பில் புதுச்சேரி நகர்மன்றத் தேர்தலில் முத்தியாலுப்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் புதுச்சேரி நகர மன்றத் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு புதுவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969-ஆம் ஆண்டு முதல் 1975-ஆம் ஆண்டு வரை அதன் உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1]
தமிழக அரசு, புதுவை சிவத்துக்கு 1983 ஆம் ஆண்டில் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.[1]
புதுவை சிவம் 1989-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி காலமானார்.[1]
புதுவை சிவத்தின் நூற்றாண்டு விழாவை புதுச்சேரி அரசு சிறப்பாகக் கொண்டாடி, "நூற்றாண்டு பாமாலை' என்ற நூலை வெளியிட்டும் உருவச்சிலையை நிறுவியும் ஆண்டுதோறும் பிறந்தநாள் கொண்டாடியும் அவரது நினைவைப் போற்றுகிறது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.