From Wikipedia, the free encyclopedia
பீட்டர் பெர்டினண்ட் டிரக்கர் (நவம்பர் 19, 1909 - நவம்பர் 11, 2005) 20ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற மேலாண்மைத் துறைச் சிந்தனையாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். ஆஸ்திரியாவில் பிறந்த இவர் இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் ஆலோசகராகவும் பணிபுரிந்தவர்.
பீட்டர் ஃபெர்டினாண்ட் ட்ரக்கர் Peter Ferdinand Drucker | |
---|---|
பிறப்பு | நவம்பர் 19, 1909 காஸ்க்ரேபன், வியன்னா, ஆஸ்திரியா |
இறப்பு | நவம்பர் 11, 2005 க்ளேர்மாண்ட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | மேலாண்மை ஆலோசகர் |
1909ல் வியன்னாவில் பிறந்து, அங்கேயும் பின்னர் இங்கிலாந்திலும் கல்வி பயின்றார். இவருடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருடைய தந்தையின் நண்பர் ஒருவர் மூலமாக இவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. ஜெர்மனி, ஃப்ராங்க்பர்ட் நகரில் பத்திரிகை நிருபராக இருந்தபொழுது, பொது, சர்வதேச சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்தில் ஒரு பன்னாட்டு வங்கியில் பொருளாதார நிபுணராக பணியாற்றினார். 1937ல் ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்த அவர், இரண்டாண்டுகளில் தனது "The End of Economic Man" எனும் முதல் புத்தகத்தினை வெளியிட்டார். டிரக்கரின் மேலாண்மை நூல்களும், பொருளாதாரம், சமூகம் பற்றிய அவரது பகுப்பாய்வுகளும் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு உலக அளவில் படிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன. அவர் ஒரு சுயசரிதையையும், இரண்டு புதினங்கள் உட்பட 39 புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
டிரக்கர், தனது பல்வேறு எழுத்துப்பணிகளுக்கிடையே பேராசிரியராகவும் செம்மையாக பணியாற்றியிருக்கிறார். முதலில் அரசியல் தத்துவ பேராசிரியராக பெனிங்டன் கல்லூரியிலும், பின்னர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, நியுயார்க் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பட்டக் கல்லூரியில் (Graduate Business School of New York University), பேராசிரியராகவும் இருந்தார். 1971ல் இருந்து கலிபோர்னியாவின் க்ளேர்மாண்ட் பட்ட கல்லூரியில் (Claremont Graduate School) சமூக அறிவியல் பேராசிரியராக இருந்தார்[1].
இவருடைய காலத்தில் வாழ்ந்த மேலாண்மைச் சிந்தனையாளர்கள் அனைவரிலும் பீட்டர் டிரக்கர் புதிய கோணத்தில் முகாமைத்துவத்தினை நோக்கியவராவார். இவரால் முகாமைத்துவத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கோட்பாடு 'குறிக்கோளுடனான முகாமைத்துவம்' (Management by objectives') என அழைக்கப்படுகின்றது. முகாமையாளர் உரிய முறையில் ஒரு செயலிலோ அல்லது செயல்களிலோ ஈடுபடுவது நிறுவனத்தின் குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கேயாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இன்று பீட்டர் டிரக்கரின் குறிக்கோளுடனான முகாமைத்துவம் உலகிலுள்ள பல நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவர் முகாமைத்துவம் பற்றிப் பல நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் பிரபலமான 'The Practice of Management' (1954) – 'முகாமைத்துவச் செயற்பாடு' எனும் நவீன முகாமைத்துவ நூலில்தான் குறிக்கோளுடனான முகாமைத்துவம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
டிரக்கர் அதிகார வர்க்க முகாமைத்துவத்திற்கு எதிராகவே தனது முகாமைத்துவச் சிந்தனைகளை முன்வைக்கின்றார். முகாமைத்துவத்தில் புதிய விடயங்கள் புகுத்தப்படுவது ஆரோக்கியமான ஒன்றாகவே அவர் கருதுகின்றார். முகாமைத்துவத்தை ஒரு தொழில் என்றும் நல்ல பயிற்சி என்றும் குறிப்பிடும் றகர் முகாமைத்துவ அமைப்பொன்றில் ஒவ்வொரு உறுப்பினராலும் நிறைவேற்றப்பட வேண்டிய நோக்கங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட வேண்டும், பின் அவர்களின் நோக்கங்களைச் செவ்வனே நிறைவேற்ற உதவும் வகையில் தேவையான தகவல்கள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படுதல் வேண்டும் என்று வற்புறுத்துகின்றார். முகாமைத்துவத்தில் கட்டுப்பாடு என்பதனைத் தேவையற்ற ஒன்றாகவே அவர் காண்கின்றார்.
மேலும், டிரக்கரினால் முன்வைக்கப்பட்ட குறிக்கோளுடனான முகாமைத்துவத்தில் குறிக்கோள்கள் தெளிவாகக் காணப்படும். அக்குறிக்கோள்களை அடைவதற்கு அனைவரும் உடன்பாடன வழிகாட்டல்களிலும், செயற்பாடுகளிலும் ஈடுபடுவர். நிறுவனத்தின் அறிவு, திறன், கற்பனாசக்தி ஆகிய அனைத்தும் ஒருங்கே ஒன்றுபடுத்தப்பட்டு குறிக்கோளினை நோக்கித் திசைப்படுத்தப்படுவது இதன் அடிப்படையாகும். குறிக்கோள்களுடனான முகாமைத்துவம் அதி சிறந்த குழு உணர்வினையும், குழு வேலையினையும் விருத்தியாக்குகின்றது; மனிதர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்கள் குறிக்கோளினை அடைவதற்கு ஆற்றலுடன் செயற்படுவர் எனக் குறிப்பிடுகின்றது. இதனால் தான் டிரக்கர் குறிக்கோளுடனான முகாமைத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுகின்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.