பி. எஸ். எம். சார்லசு

இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் From Wikipedia, the free encyclopedia

பி. எஸ். எம். சார்லசு (P. S. M. Charles) என அழைக்கப்படும் பியென்சியா சரோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் (Piencia Sarojinidevy Manmatharajah Charles) இலங்கைப் பொதுத்துறை அலுவலரும், வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.

விரைவான உண்மைகள் பி. எஸ். எம். சார்ள்ஸ்P. S. M. Charles, 7-ஆவது வட மாகாண ஆளுநர் ...
பி. எஸ். எம். சார்ள்ஸ்
P. S. M. Charles
7-ஆவது வட மாகாண ஆளுநர்
பதவியில்
17 மே 2023  23 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்ஜீவன் தியாகராஜா
பின்னவர்நாகலிங்கம் வேதநாயகன்
பதவியில்
30 திசம்பர் 2019  11 அக்டோபர் 2021
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
முன்னையவர்சுரேன் ராகவன்
பின்னவர்ஜீவன் தியாகராஜா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபத்தாவத்தை, இளவாலை, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிசுயேச்சை
முன்னாள் மாணவர்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பணிபொதுத்துறை அலுவலர்
மூடு

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம், இளவாலையில் பத்தாவத்தை என்ற கிராமத்தில்[1] கத்தோலிக்கக் குடும்பம் ஒன்றில் பிறந்த பி. எஸ். எம். சார்லசின் தந்தை ஒரு பாடசாலை அதிபர் ஆவார்.[2] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர் 1985 இல் ஆசிரிய சேவையில் இணைந்தார்.[1] பேராதனைப் பல்கலைக்கழகம், ரஜரட்டை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேரழிவு மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.[3][4]

பணிகள்

1991 ஆம் ஆண்டில் இலங்கை நிருவாக சேவைக்கு அவ்வாண்டில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழராக இணைந்த சார்லசு[1] முதலில் அநுராதபுர மாவட்ட செயலகத்தில் பணியாற்ற ஆரம்பித்தார்.[1] பின்னர் வவுனியா மாவட்டத்தில் உதவி அரசாங்க அதிபராக பதவியேற்று, பின்னர் கூடுதல் மாவட்ட செயலாளராகவும், 2008 அக்டோபரில் வவுனியா மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றினார்.[3][4] ஈழப்போரின் இறுதியில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 300,000 தமிழ் அகதிகளுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களுக்கு பொறுப்பாளராக இருந்து செயற்பட்டார்.[5][6] 2012 மே மாதத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.[7][8]

2017 செப்டம்பரில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.[9][10] சந்தேகத்திற்கிடமான 143 சரக்குக் கொள்கலன்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அரசாங்கத்தின் அழுத்தத்தை ஏற்க மறுத்ததாகக் கூறப்பட்டு, 2019 சனவரியில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[11][12] ஆனாலும், சுங்கப் பணியாளர்கள் எடுத்த தொழில்துறை நடவடிக்கை காரணமாக இவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.[13][14] 2019 நவம்பரில் இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை அடுத்து, இவர் சுகாதாரத்துறை மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[15][16]

வடமாகாண ஆளுநர்

2019 நவம்பர் 18 இல் கோட்டாபய ராஜபக்சவின் புதிய அரசு பதவியேற்றதில் இருந்து வட மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது. 2019 திசம்பர் 30 இல் சார்லசு வடமாகாணத்தின் 7-ஆவது ஆளுநராக அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்டார்.[17][18] 2020 சனவரி 2 முதல் 2021 அக்டோபர் வரை இவர் இப்பதவியில் இருந்தார். இவருக்குப் பதிலாக ஜீவன் தியாகராஜா புதிய ஆளுநராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[19] 2023 மே மாதத்தில் இவர் மீண்டும் வட மாகாண ஆளுநராக அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார்.[20]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.