திருவிவிலிய நூல் From Wikipedia, the free encyclopedia
பிலமோன் அல்லது பிலமோனுக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to Philemon) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினெட்டாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் பதின்மூன்றாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Philemona (Επιστολή Προς Φιλήμονα) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Philemonem எனவும் உள்ளது [1].
இத்திருமுகம் பவுல் எழுதிய பதின்மூன்று மடல்களிலும் மிகச் சிறியதாகும். மூல பாடமாகிய கிரேக்கத்தில் இம்மடல் 335 சொற்களை மட்டுமே கொண்டுள்ளது. இதில் அதிகாரப் பிரிவுகள் இல்லை. மொத்தம் 25 வசனங்கள் மட்டுமே உண்டு.
புதிய ஏற்பாட்டுத் திருமுகங்களுள் பரிந்துரை மடலாக விளங்குவது பிலமோனுக்கு எழுதப்பட்ட திருமுகமாகும். அழகிய சொல்லாட்சியுடன் நளினமான முறையில் பவுல் இச்சிறு மடலை எழுதியுள்ளார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுகொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை இத்திருமுகம் எடுத்துக் கூறுகிறது[2].
இத்திருமுகம் நேர்த்தியான முறையில் வரையப்பட்டுள்ளது. பழங்கால உரோமை, கிரேக்க இலக்கிய முறையில் இக்கடிதத்தில் வரும் பரிந்துரை அமைந்துள்ளது.
கொலோசை நகரிலிருந்த முக்கிய கிறிஸ்தவரும் செல்வருமான பிலமோன் என்பவரிடம் ஒனேசிம் என்பவர் அடிமைத் தொழில் செய்துவந்தார். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் தலைவரிடமிருந்து தப்பியோடிவிட்டார் (பில 18). இதற்கு உரோமைச் சட்டப்படி மரண தண்டனை கொடுக்கலாம். ஆனால் ஒனேசிம் தம் தலைவரின் நண்பரான தூய பவுலை நாடி வந்தார்; சிறிது காலம் அவரோடு இருந்து கிறிஸ்தவராகிய பின்னர் தம் தலைவரிடம் திரும்பிச் செல்ல விழைந்தார். அப்போது பவுல், பிலமோன் ஒனேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஓர் அடிமையாக அல்ல, ஒரு சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார்.
இக்கடிதத்தைப் பவுல் கி.பி. 61ஆம் ஆண்டு உரோமைச் சிறையிலிருந்து எழுதினார் என்பது மரபுக் கருத்து. எனினும் இதனை அவர் தம் மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது எபேசிலிருந்து எழுதியிருக்க வேண்டும் என்றே பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகின்றனர். அவ்வாறாயின் இம்மடல் கி.பி. 53-56 அளவில் எழுதப்பட்டது.
பவுல் ஒரு தனி ஆளுக்கு எழுதியதாக அமைந்தது பிலமோன் திருமுகம். தம் நண்பரான பிலமோன் நடந்ததை மறந்துவிட்டு, ஓடிப்போன அடிமையாகிய ஒனேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் பரிந்துரையை பவுல் முன்வைக்கின்றார். தனது பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு புதிய மனிதராக மாறிவிட்டிருந்தார் ஒனேசிமு. எனவே பவுல் "இனி ஒனேசிமுவை நீர் அடிமையாக அல்ல, அடிமையைவிட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்" என்று பிலமோனுக்கு எழுதுகிறார் (வசனம் 16).
பவுல் பிலமோனின் முன்வைத்த கோரிக்கை என்ன? பிலமோன் ஒனேசிமுவை மன்னித்து ஏற்க வேண்டுமா, விடுதலை செய்ய வேண்டுமா? ஒனேசிமுவை "சகோதரனாகவும்" "அடிமையாகவும்" ஏற்க வேண்டுமா? ஒனேசிமுவை மன்னித்து, மீண்டும் அவரைப் பவுலிடம் அனுப்பிவைக்க வேண்டுமா (காண்க: வசனங்கள் 14, 20)? கிறிஸ்தவராக மாறிவிட்ட ஒனேசிமு இனிமேல் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெற்று, "சகோதரராக" மாறிவிட்டாரா? - இக்கேள்விகளுக்குத் தெளிவான, அறுதியான பதில் இத்திருமுகத்தில் இல்லை.
பவுல் வாழ்ந்த காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டில் அடிமைகளை வாங்குவதும் விற்பதும் வழக்கமாய் இருந்தது. கிரேக்க மற்றும் உரோமை கலாச்சாரங்கள் அடிமைத்தனத்தை ஏற்றிருந்தன. அடிமைகள் மனித மாண்போடு நடத்தப்படவில்லை, மாறாக, விற்பனைப் பொருள்போலவே கருதப்பட்டார்கள். அந்தச் சமூக வழக்கத்தைத் தூய பவுல் கேள்விக்கு உட்படுத்தவில்லை; கண்டனம் செய்யவில்லை. ஆயினும் அடிமைத்தனம் என்னும் சமூக அநீதியை ஒழிப்பதற்கான அடித்தளம் இம்மடலில் உள்ளது. அடிமை-எசமான் உறவு மாறவில்லை என்றாலும் அவர்கள் இருவருமே இயேசு கிறிஸ்துவில் உடன்பிறப்புகள் என்னும் உறவால் பிணைந்திருக்கிறார்கள்; எனவே, அந்த அன்புப் பிணைப்பு சகோதர, சமத்துவ நிலையின் அடித்தளத்தில் அமைய வேண்டும். இந்த உண்மையைப் பவுல் பிலமோனுக்கு உணர்த்தினார்.
16ஆம் நூற்றாண்டிலும் அதன் பிறகும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் அடிமைகளை வாங்கி விற்று மிகுந்த ஆதாயம் ஈட்டின. அப்போது, கிறிஸ்தவம் அடிமைத்தனத்தை ஆதரிக்கிறதா எதிர்க்கிறதா என்னும் விவாதம் எழுந்தது. அடிமைத்தனம் கிறிஸ்தவ போதனைக்கு எதிரானது என்று வாதாடியவர்களும், அடிமைத்தனத்தை ஆதரித்தவர்களும் பிலமோன் திருமுகத்தை மேற்கோள் காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
பெயர் |
கிரேக்கம் |
இலத்தீன் |
சுருக்கக் குறியீடு | ||
தமிழில் | ஆங்கிலத்தில் | ||||
உரோமையர் | Προς Ρωμαίους | Epistula ad Romanos | உரோ | Rom | |
1 கொரிந்தியர் | Προς Κορινθίους Α | Epistula I ad Corinthios | 1 கொரி | 1 Cor | |
2 கொரிந்தியர் | Προς Κορινθίους Β | Epistula II ad Corinthios | 2 கொரி | 2 Cor | |
கலாத்தியர் | Προς Γαλάτας | Epistula ad Galatas | கலா | Gal | |
எபேசியர் | Προς Εφεσίους | Epistula ad Ephesios | எபே | Eph | |
பிலிப்பியர் | Προς Φιλιππησίους | Epistula ad Philippenses | பிலி | Phil | |
கொலோசையர் | Προς Κολασσαείς | Epistula ad Colossenses | கொலோ | Col | |
1 தெசலோனிக்கர் | Προς Θεσσαλονικείς Α | Epistula I ad Thessalonicenses | 1 தெச | 1 Thess | |
2 தெசலோனிக்கர் | Προς Θεσσαλονικείς Β | Epistula II ad Thessalonicenses | 2 தெச | 2 Thess | |
1 திமொத்தேயு | Προς Τιμόθεον Α | Epistula I ad Timotheum | 1 திமொ | 1 Tim | |
2 திமொத்தேயு | Προς Τιμόθεον Β | Epistula II ad Timotheum | 2 திமொ | 2 Tim | |
தீத்து | Προς Τίτον | Epistula ad Titum | தீத் | Tit | |
பிலமோன் | Προς Φιλήμονα | Epistula ad Philemonem | பில | Philem |
பிலமோன் 8-21
"நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட,
கிறிஸ்தவ உறவில், எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும்,
அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுவிக்கவே விரும்புகிறேன்.
கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும்
பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்த போது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன்.
முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன்.
அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன்.
அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும்.
நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு,
உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக் கொள்ள விரும்பினேன்.
ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல்,
மனமாரச் செய்ய வேண்டு மென்று நினைத்தே,
உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை.
அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்!
இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக,
அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்.
அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன்.
அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும்
அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்!
எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக் கொள்வது போல் அவனையும் ஏற்றுக் கொள்ளும்.
அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும்.
நானே அதற்கு ஈடு செய்வேன், எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன்.
நீர் உம்மையே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டுமென நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லை.
ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும்.
கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும்.
என் சொல்லுக்கு நீர் இணங்குவீர் என்னும் நம்பிக்கையோடு இதை எழுதுகிறேன்.
நான் கேட்பதற்கு மேலாகவே நீர் செய்வீர் என்பது எனக்குத் தெரியும்."
பொருளடக்கம் - பகுதிப் பிரிவு | வசனங்கள் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முன்னுரை
(வாழ்த்து, பிலமோனின் அன்பும்
|
வச 1-7 | 410 |
2. ஒனேசிமுக்காக வேண்டுகோள் | வச 8-21 | 410 - 411 |
3. முடிவுரை | வச 22-25 | 411 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.