பகாய் சமயம்

From Wikipedia, the free encyclopedia

பகாய் சமயம்

பஹாய் சமயம் 1844-இல், பாரசீக நாட்டின் ஷிராஸ் நகரில் பாப் என்பவர் (இயற்பெயர் சையிட் அலி முகம்மது) எல்லா மதங்களாலும் வாக்களிக்கப்பட்ட இறைத்தூதர் தாமே என பிரகடனப்படுத்தினார்.[1] அது மட்டுமின்றி, தாம் தமக்குப் பின் வரவிருக்கும் ஒரு மாபெரும் இறை அவதாரத்தின் முன்னோடி எனவும் கூறினார்.[2] இதைத் தொடர்ந்து 1863-இல் பஹாவுல்லா (கடவுளின் ஜோதி), (இயற்பெயர் மிர்சா ஹுசேய்ன் அலி) இராக் நாட்டின் பாக்தாத் நகரில், பாப் அவர்களால் முன்கூறப்பட்ட அந்த இறை அவதாரம் தாமே என பகிரங்கமாக அறிவித்தார்.[3] அவ்வறிப்பைத் தொடர்ந்து பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்ட பாப் அவர்களின் நம்பிக்கையாளர்கள் அதுமுதல் பஹாய்கள் என அழைக்கப்பட்டு,[4] இன்று உலகம் முழுவதும் சுமார் 7 மில்லியன் பஹாய் நம்பிக்கையாளர்கள்[5] உள்ளனர்.

Thumb
இசுரேலில் அமைந்துள்ள பஹாய் தலைமையகம்
Thumb
புதுதில்லியில் உள்ள பஹாய் சமய தாமரை வடிவ வழிபாட்டுத் தலம்

பஹாவுல்லாவின் படிப்பினைகளுக்கேற்ப சமய வரலாறு ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த இறைத்தூதர்கள் மூலமாக நகர்த்தப்பட்டதாகும். ஆபிரகாம், மோசே, புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரையும் உள்ளடக்கிய இறைத்தூதர் வழியில் தானும் ஒருவர் எனத் தன்னைக் குறிப்பிட்டார். எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாகத்துக்கான உலக புனித நூல்களின் முன்னறிவிப்பை தான் நிறைவுச் செய்வதாக கருதினார்.[1]

பஹாய் (IPA: [baˈhaːʔiː]) என்பது சமயத்தையோ அல்லது அதனை பின்பற்றுபவர்களையோ குறிக்கும் முகமாக தமிழில் பயன்படுத்தப்படுகிறது. பஹாய் (بهاء) என்பது இறைவனின் ஒளி எனப் பொருள்படும் அரபு மொழிப் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[2] "பஹாயிசம்" போன்றவை முன்னர் பயன்பட்டாலும் அவை பயன்பாட்டிலிருந்து அறுகிவருகின்றன. (பகாய் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை)

நம்பிக்கைகள்

பஹாய் போதனைகளை மூன்று முக்கிய கருத்துக்களுக்குள் அடக்கலாம் அவையாவன ஒரே கடவுள், சமயங்களின் ஒற்றுமை, மனிதகுலத்தின் ஒற்றுமை என்பனவாகும்.[3] பல பஹாய் நம்பிக்கைகள் இவற்றை மையப்படுத்தியே அமைந்துள்ளனவாயினும் இவற்றை மட்டும் கருத்திற் கொள்வது பஹாய் நம்பிக்கைகளை மிகவும் சுருக்கியதாக அமைந்துவிடும்.

தோற்றம்

பஹாய் சமயத்தின் நிறுவனர் பஹாவுல்லா என்பவராவார். அவர் பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார்.

பஹாவுல்லா, தாம் புதிய மற்றும் சுதந்திரமான இறைவனின் ஓர் இறைத்தூதர் என்பதை மிகத்தெளிவாக அறிவித்தார். அவரது வாழ்வுமுறை, ஆற்றிய காரியங்கள் மற்றும் அவருடைய செல்வாக்கு ஆபிரகாம், மோசே, ஸோராஸ்டர், புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரைப் பிரதிபலித்தது. பஹாவுல்லாவைத் தெய்வீக அவதாரங்களின் தொடர்வரிசையில் மிகவும் சமீபமாகத் தொன்றியவர் என பஹாய்கள் கருதுகின்றனர்.

பஹாவுல்லாவின் அடிப்படையான செய்தி ஐக்கியம் குறித்ததாகும். இறைவன் ஒருவரே எனவும், ஒரு மனித இனமே உள்ளது எனவும், உலகின் சமயங்களெல்லாம் மனுக்குலத்திற்கான இறைவனின் விருப்பம் நோக்கம் ஆகியவற்றின் படிப்படியான கட்டங்களை பிரதிநிதிக்கின்றன எனவும் அவர் போதித்தார். மனுக்குலம் இக்காலத்தில் கூட்டாக முதிர்ச்சிநிலை அடைந்துவிட்டதென பஹாவுல்லா கூறியுள்ளார். உலக புனித சாஸ்திரங்களில் முன்னறிவிக்கப்பட்டுள்ளதுபோல், எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் குடிகள்,” என அவர் எழுதியுள்ளார்.

சிறப்புகள்

பஹாவுல்லாவால் ஸ்தாபிக்கப்பட்ட பஹாய் சமயம் உலகின் சுதத்திரமான சமயங்களிலேயே மிகவும் இளமையான சமயமாகும். அது மற்ற சமயங்களிலிருந்து வெவ்வேறு வகைகளில் வேறுபட்டுள்ளது. 10,000 உள்ளூர் சமூகங்களில் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிமன்றங்களுடைய பஹாய் சமயம் தனிச்சிறப்புடைய உலகளாவிய ஓர் நிர்வாகமுறையை பெற்றுள்ளது.

நடப்பு சமூக பிரச்சினைகளின்பால் மிகவும் வேறுபட்ட ஓர் அணுகுமுறையை பஹாய் சமயம் கடைப்பிடிக்கின்றது. பஹாய் சமயத்தின் புனிதசாஸ்திரங்களும் அதன் உறுப்பினர்களின் பலதரப்பட்ட நடவடிக்கைகளும் உலகத்தின் முக்கிய மேம்பாடுகள் அனைத்தின்பாலும் கவனம் செலுத்துகின்றன. கலாச்சார ரீதியான பல்வகைத்தன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த புதிய சிந்தனைகள் உட்பட, முடிவெடுக்கும் செயல்பாட்டை பல்முனைப்படுத்துவது; குடும்ப வாழ்வு மற்றும் நெறிமுறைகளின்பால் புதிப்பிக்கப்பட்ட ஈடுபாட்டிலிருந்து, உலகளாவிய அண்டைச் சமூகமாக உருவெடுத்துள்ள இவ்வுலகில் சமூக பொருளாதார நீதிமுறையை அறைகூவுவது போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.

பஹாய் சமயத்தின் மிகவும் தனிச்சிறப்புமிக்க நிறைவேற்றமாக அதன் ஐக்கியமே இருந்துவந்துள்ளது. சமூக அரசியல் இயக்கங்கள் உட்பட, உலகின் மற்ற சமயங்களைக் காட்டிலும் சமயப்பிரிவுகளாகவும் இனைப்பிரிவுகளாகவும் பிளவுபடுவதற்கான காலங்காலமான உந்துதல்களை பஹாய் சமூகம் மிகவும் வெற்றிகரமாக சமாளித்துள்ளது. மற்ற புராதன சமயங்களைப்போன்றே மிகவும் கொந்தளிப்பான வரலாற்றை பெற்ற பஹாய் சமயம் அதன் ஐக்கியத்தை இதுவரை காப்பாற்றியே வந்துள்ளது.

பஹாவுல்லா ஓர் உலககளாவிய ஐக்கியத்திற்கான செயல்பாட்டை அன்றே அறைகூவியுள்ளார். இன்று அச்செயல்பாடு பெரிதும் மேம்பாடு கண்டுள்ளது. வரலாறு குறித்த செயல்பாடுகளின் வாயிலாக, இனம், வகுப்பு, சமயம், தேசம் ஆகிய பாரம்பரியமான தடைகள் படிப்படியாக அகன்று வருகின்றன. தற்போது செயல்படும் சக்திகள் காலப்போக்கில் ஓர் அனைத்துலக நாகரிகத்தை உருவாக்கும் என பஹாவுல்லா முன்னறிவித்துள்ளார். தங்களின் ஐக்கியம் குறித்த உண்மையை ஏற்றுக்கொண்டும் இப்புதிய உலகத்தை உருவாக்கிட உதவுவதுமே உலக மக்களின் பிரதான சவாலாக இருக்கின்றது.

உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒரு புதிய மற்றும் அமைதியான உலகமய நாகரிகத்தை உருவாக்கிட முயல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தனிநபர் மற்றும் சமூகத்தின் தன்மைமாற்றத்தின் வாயிலாகவே இக்குறிக்கோளை அடைந்திட செயல்படுகின்றனர். படத்தில் காணப்படும் எர்டென்புல்கான், மொங்கோலியா எனும் இடத்தில் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான விவசாய முயற்சியினைப்போல் அடித்தள மக்களை உட்படுத்தும் பல சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவு நல்குவதும் இதில் உள்ளடங்கும்.

ஓர் உலகமய சமுதாயம் தழைத்தோங்கிட, அது குறிப்பிட்ட சில அடிப்படைக் கோட்பாடுகளை அத்திவாரமாகக் கொண்டிருக்கவேண்டும் என பஹாவுல்லா கூறுகின்றார். எல்லாவித முன்தப்பெண்ணங்கள்; ஆண் பெண்களுக்கிடையில் முழு சமத்துவம்; உலகத்தின் பெரும் சமயங்களுக்கிடையே உள்ள அடிப்படை ஒற்றுமையைப் புரிந்துகொள்வது; வறியநிலை பெரும்செல்வம் ஆகியவற்றுக்கிடையிலான தூரத்தை குறைப்பது; அனைத்துலகக் கல்வி; விஞ்ஞானம் சமயம் ஆகியவற்றுக்கிடையே இணக்கம்; சுற்றுச் சூழல் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு இடையே தொடர்ந்து பேணப்படக்கூடிய சமநிலை; மற்றும் கூட்டு பாதுகாப்பு மற்றும் மனுக்குல ஒற்றுமையின் அடிப்படையில், ஸ்தாபிக்கப்படக்கூடிய ஓர் உலகக் கூட்டரசு முறை ஆகியவற்றை அது உள்ளடக்கியுள்ளது.

உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் இக்கோட்பாடுகளின்பால் தங்கள் கடப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். அதைப் பெரும்பாலும், அடித்தள மக்கள் சமூகங்களில் சமீப காலமாக மேற்கொள்ளப்படும் பெரும் எண்ணிக்கையிலான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், தனிபஹாய்கள் மற்றும் பஹாய்சமூகங்களின் தன்மைமாற்றத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.

பஹாவுல்லாவின் விசுவாசிகள், உள்ளூர், தேசிய மற்றும் அனைத்துலக ரீதியிலாக ஆட்சிமன்றங்களின் ஒன்றுபடுத்தப்பட்ட ஒரு வலைப்பின்னலை அமைக்கும் பணியில் பரந்துவிரிந்ததும், பலதரப்பட்டதுமான ஓர் உலகசமூகத்தை உருவாக்கியுள்ளனர். இச்சமூகம் தனிச்சிறப்புமிக்க வாழ்வு மற்றும் செயல்முறைகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது மற்றும், இச்சமூகம் கூட்டுறவு, இணக்கம், சமுதாயச் செயல்பாடு ஆகியவை குறித்த உற்சாகமளிக்கும் ஓர் உருமாதிரியை வழங்குகின்றது. தனது விசுவாசத்தில் பெரிதும் பிளவுபட்டுக்கிடக்கும் ஓர் உலகத்தில், இது ஒரு தனிப்பெரும் சாதனையாக விளங்குகின்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.