தொடர்ந்து பேணத் தகுந்த முறையில் பொருளாதார, சமூக, சூழல், அமைப்பு சார் நடவடிக்கைகள், நடைமுறைகள் அமைவதை பேண்தகுநிலை (sustainability) எனலாம். தமிழில் இதனை தாங்குதிறன் அல்லது நிலைத்திருநிலை என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. அண்மைக் காலத்தில் பேண்தகு நிலை என்பது, உயிரியல் தொகுதிகள் தொடர்பில் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூழலியல் நோக்கில் பேண்தகுநிலை என்பதை, சூழலியல் வழிமுறைகள், செயற்பாடுகள், உயிரியல் பல்வகைமை, உற்பத்தித் திறன் ஆகியவற்றை எதிர்காலத்துக்கும் பேணும் வகையில் சூழல்மண்டலத்துக்கு இருக்கக்கூடிய வல்லமை என வரையறுக்க முடியும்.[1]

Thumb
Blue Marble composite images generated by NASA in 2001 (left) and 2002 (right).

இன்று, பேண்தகுநிலை என்பது புவியில் உள்ள உயிர் வாழ்வின் ஏறத்தாழ எல்லா அம்சங்களுக்கும் பயன்படுத்தப் படுகின்ற ஒரு சிக்கலான சொல்லாக உள்ளது. உயிரியல் சார் ஒழுங்கமைப்புக்களான ஈரநிலங்கள், காடுகள் தொடர்பிலும், மனித ஒழுங்கமைப்புக்களான பேண்தகுநிலை நகரங்கள் போன்றவை தொடர்பிலும், மனித நடவடிக்கைகள் துறைகள் சார்ந்த பேண்தகுநிலை வேளாண்மை, பேண்தகுநிலைக் கட்டிடக்கலை, மீள்விக்கத்தக்க ஆற்றல் போன்றவை தொடர்பிலும் இச்சொல் முக்கியத்துவம் பெறுகிறது. மனித இனம் பேண்தகுநிலையுடன் வாழ்வதற்கு, புவியின் வளங்களின் பயன்பாடு, அவற்றை மீளுருவாக்கம் செய்யத்தக்க அளவு வேகத்திலேயே இருக்கவேண்டும். ஆனால், தற்கால அறிவியல் சான்றுகளின்படி மனிதர் அவ்வாறு வாழவில்லை என்பது தெரியவருகிறது. இதனால், புவியின் வளங்களின் பயன்பாட்டு வேகத்தை, அவற்றை மீளுருவாக்கம் செய்யத்தக்க அளவுக்குக் குறைப்பதற்கு முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான கூட்டுமுயற்சிகள் தேவைப்படுகின்றன.[2][3]

1980களில் இருந்து, மனிதர் சார் பேண்தகுநிலை என்னும் எண்ணக்கருவானது, பொருளியல், சமூகவியல், சூழலியல் அம்சங்களின் ஒருங்கிணைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றது. 1989 ஆம் ஆண்டில் சூழலுக்கும் வளர்ச்சிக்குமான உலக ஆணையம் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும், "பேண்தகுநிலை" என்பதற்கான வரைவிலக்கணத்தை உருவாக்கியது. இதன்படி, பேண்தகுநிலை என்பது, "எதிர்காலத் தலைமுறையினர் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வல்லமையைப் பாதிக்காமல் இன்றைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது ஆகும்".”[4]

வரைவிலக்கணம்

மேற்குறிப்பிட்ட ஆணையத்தின் வரைவிலக்கணம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும்,[5] அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளாததுடன், பலவாறான விளக்கங்களும் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளன.[6] பேண்தகுநிலையை ஒரு "பயணம்" ஆகவோ "பயணத்தின் முடிவு" ஆகவோ எடுத்துக்கொண்டு, அதன் வரைவிலக்கணத்தை, இருக்கும் நிலை பற்றிய கூற்றாகவோ, தேவையாகவோ, பெறுமானமாகவோ வெளிப்படுத்த முடியும்."[7]

குறிப்புக்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.