மு. தமிழ்க்குடிமகன் (15.9.1938 - 22-9-2004) என்னும் மு. சாத்தையா தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர். இவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் இவர் 1989-ல் நடந்த சட்டசபை தேர்தலில் இளையான்குடி தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை தமிழக சட்டசபை சபாநாயகராகவும் பணியாற்றினார். இவருடைய இயற்பெயர் பெயர் சாத்தையா. தமிழ் மீதுக் கொண்ட பற்றுக் காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அமைந்த திமுக ஆட்சியில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார் (1996-2001).
கல்வி
பள்ளிக் கல்வி
- தொடக்கக் கல்வியை (முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) சாத்தனூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கற்றார்.
- இடைநிலைக் கல்வி (6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை) உயர்நிலைக் கல்வி (9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை) ஆகியவற்றை தேவகோட்டை தூய பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியில் கற்றார்.
கல்லூரிக் கல்வி
- 1956 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பைத் திருச்சித் தூய வளவனார் கல்லூரியில் கணிதப் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றார்.
- 1961 இல் தமிழ் இலக்கியம் பயில சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆய்வுக்கல்வி
1983இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் (1967 முதல் 1977வரை ) என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
- பரமக்குடியில் அமைந்துள்ள ஆயிரவைசிய உயர்நிலைப் பள்ளியில் 1969ஆம் ஆண்டு வரை கணித ஆசிரியராகப் பணியாற்றினார்.
- 1969 ஆம் ஆண்டு முதல் 1978 வரை மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
- 1978 ஆம் ஆண்டு முதல் 1989 வரை மதுரை யாதவர கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்.
குடும்பம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் 15. 9. 1938ஆம் நாள் பிறந்தார் [1].இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும் மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 ஆண்மக்களும் கோப்பெருந்தேவி என்ற பெண்மகவும் உள்ளனர்.
தமிழ்ப்பணி
திருச்சி தூய வளவனார் கல்லூரியில் பயிலும்போது தேவநேயப் பாவாணர் எழுதிய ஒப்பியன் மொழிநூல் என்னும் புத்தகத்தைப் படித்துத் தனித்தமிழ் ஆர்வம் பெற்றார். 1958 இல் பாவாணரின் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டதால் சாத்தையா என்னும் தனது இயற்பெயரை தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக்கொண்டார். இரா. இளவரசு போன்ற பிற மாணவத் தோழர்களுடன் இணைந்து தமிழ்ப் பேராயம் என்னும் ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி இலக்கியக் கூட்டங்களை நடத்தினார். பெருஞ்சித்திரனார் நடத்திய தென்மொழி இதழில் துணை ஆசிரியராகவும் கைகாட்டி (இதழ்), அறிவு ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். பாவாணர் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பிலும்,அதன் பின்னர் இரா. இளவரசு முதலியரோடு இணைந்து தமிழியக்கம் என்னும் அமைப்பிலும் முன்னின்று செயல்பட்டார். தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்வழிக் கல்வி, கோவில்களில் தமிழ் வழிபாடு, விளம்பரப் பலகைகளில் தமிழ் எனப் பல வழிகளில் பணியாற்றினார்.
அரசியல்
திராவிட முன்னேற்றக் கழகத்தில்
- தமிழ்க்குடிமகன் கடந்த 1989,1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவை உறுப்பினர் ஆனார்.
- 1989 முதல் 1991 வரை தமிழக சட்டபேரவை தலைவராக பணியாற்றினார்.
- 199ஆம் ஆண்டில் இளையான்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.
- 1996 முதல் 2001 வரை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்
- 2001 மார்ச்சில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அஇஅதிமுகவில் இணைந்தார்.
வெளிநாட்டுப் பயணங்கள்
இவர் அமெரிக்கா, இங்கிலாந்து, செருமனீ. பிரான்சு, சீனா, சிங்கப்பூர், மலேசியா, இத்தாலி, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
மரணம்
22-9-2004ஆம் நாள் மதுரையில் மரணமடைந்தார்.
எழுதிய நூல்கள்
வ.எண் | நூல் | வகை | முதற்பதிப்பு ஆண்டு | பதிப்பகம் | குறிப்பு |
---|---|---|---|---|---|
01 | அந்தமானைப் பாருங்கள் | பயண நூல் | - | பாரதி பதிப்பகம், சென்னை - 17. | |
02 | ஐரோப்பியப் பயணம் | பயண நூல் | - | தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17. | |
03 | கண்ணீர் | கட்டுரை | - | திருமகள் புத்தக நிலையம் சென்னை - 17 | |
04 | கலைஞரும் பாவேந்தரும் | கட்டுரை | - | தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17. | |
05 | கலைஞர்மேல் காதல்கொண்டேன் | கட்டுரை | - | - | |
06 | கவிதைக் கனிகள் | கவிதை | - | திருமகள் புத்தக நிலையம், சென்னை - 17 | |
07 | காலமெனும் காட்டாறு | கட்டுரை | - | தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17. | |
08 | சீன நாடும் சின்ன நாடும் | பயண நூல் | 2003 | தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17. | |
09 | செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் | வரலாறு | 1983 செப் 9 | அறிவொளி பதிப்பகம், மதுரை-1 | மாலைமுரசு இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு |
10 | தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் என் பங்கு (இருபாகங்கள்) | ஆட்சியியல் | - | தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17. | |
11 | பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் | திறனாய்வு | - | வானதி பதிப்பகம், சென்னை - 17 | |
12 | பாவாணரும் தனித்தமிழும் | சொற்பொழிவு | - | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. | |
13 | பாவேந்தர் கனவு | கட்டுரை | - | திருமகள் புத்தக நிலையம், சென்னை - 17 | |
14 | பாவேந்தரின் மனிதநேயம் | கட்டுரை | - | தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17. | |
15 | புதுக்கவிதை | திறனாய்வு | - | - | |
16 | மலேசிய முழக்கம் | சொற்பொழிவு | - | தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17. | |
17 | மனமாற்றம் | நாடகம் | - | - | |
18 | மனம்கவர்ந்த மலேசியா | பயண நூல் | - | - | |
19 | வாழ்ந்து காட்டுங்கள் | கட்டுரை | - | - |
சான்றடைவு
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.