இந்திய இயற்பியலாளர் From Wikipedia, the free encyclopedia
எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன் (Ennackal Chandy George Sudarshan) சுருக்கமாகவும் பரவலாகவும் ஈ. சி. ஜி. சுதர்சன் (செப்டம்பர் 16, 1931 – மே 14, 2018)[1] இந்திய கோட்பாட்டளவிலான இயற்பியலாளரும் ஆஸ்டினிலுள்ள டெக்சாசு பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். சுதர்சன் கோட்பாட்டளவிலான இயற்பியலில் பல பங்களிப்புகளை நல்கியவர்; ஒளி ஒத்திணக்கம், சுதர்சன்-குளோபர் உருவகிப்பு, வலிகுறை இடைவினை, டேக்கியான், குவாண்டம் சீனோ விளைவு, திறவெளி குவாண்டம் அமைப்பு, சுழல்-புள்ளியியல் தேற்றம் போன்றவற்றில் சுதர்சனின் பங்கு மிகப்பெரியது. தவிரவும் கிழக்கு/மேற்கு மெய்யியல், சமயம் இவற்றிற்கிடையேயான தொடர்புகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார். 2005இல் இவரும் கிளாபரும் இணைந்து பங்காற்றிய கிளாபர்-சுதர்சன் பி உருவகிப்பு கோட்பாட்டிற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இராய் கிளாபருக்கு மட்டுமே வழங்கப்பட்டது; இதனால் நோபல் பரிசுவழங்கும் குழு சுதர்சனுக்கு இயற்பியல் பரிசு வழங்காததற்காக சர்ச்சைக்குள்ளானது.[2]
ஜார்ஜ் சுதர்சன் | |
---|---|
2009இல் மும்பை டாட்டா அடிப்படை ஆய்வகத்தில் ஈ. சி. ஜி. சுதர்சன் | |
பிறப்பு | 16 செப்டம்பர் 1931
பள்ளம், கோட்டயம் மாவட்டம், திருவிதாங்கூர் அரசு, (தற்போதைய கேரளம், இந்தியா) |
இறப்பு | 14 மே 2018 86) (அகவை |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியா |
துறை | கோட்பாட்டு இயற்பியல் |
பணியிடங்கள் | டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) இந்திய அறிவியல் கழகம் கணித அறிவியல் கழகம் ஆர்வர்டு பல்கலைக்கழகம் ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சிஎம்எஸ் கல்லூரி, கோட்டயம் சென்னை கிறித்துவக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகம் ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இராபர்ட் மார்சக் |
முனைவர் பட்ட மாணவர்கள் | மொகமது அசுலாம் கான் கலில் நரசிம்மையங்கார் முகுந்தா |
அறியப்படுவது | ஒளி ஒத்திணக்கம் சுதர்சன்-கிளோபர் உருவகிப்பு வலிகுறை இடைவினை டேக்கியான் குவாண்டம் சீனோ விளைவு திறவெளி குவாண்டம் அமைப்பு சுழல்-புள்ளியியல் தேற்றம் |
விருதுகள் | திராக் பதக்கம் (2010) பத்ம விபூசண் (2007) மயோர்னா பரிசு(2006) TWAS பரிசு (1985) போசு பதக்கம் (1977) பத்ம பூசண் (1976) சி. வி. ராமன் விருது (1970) |
ஜார்ஜ் சுதர்சன் திருவிதாங்கூர் சமத்தானத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார். சிரியன் கிருத்துவக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும் தமது திருமணத்திற்குப் பின்னர் இவர் மதம் மாறினார். தனது சக மாணவியும் இந்து சமயத்தினருமாகிய இலலிதாவைத் திருமணம் புரிந்ததும் காரணமாகக் கருதப்படுகிறது. 1954 முதல் 1990 வரை இவர்கள் இணைந்து வாழ்ந்தனர்; இவர்களுக்கு அலெக்சாண்டர், அரவிந்த் (மறைவு), அசோக் என்ற மூன்று மகன்கள் உண்டு.[3] சுதர்சன் தம்மை ஒரு "வேதாந்த இந்துவாகக்" கருதினார்.[4] திருச்சபையின் பார்வையுடன் தாம் வேறுபடும் இடங்களைக் குறிப்பிடும் சுதர்சன், தமக்கு ஆன்மீக உணர்வு ஏற்படாததாலேயே கிறித்தவத்தை விட்டு விலகியதாகவும் கூறியுள்ளார்.[5][6]
கோட்டயத்திலுள்ள சிஎம்எஸ் கல்லூரியில் படித்தார்.[7] பின்னர் பட்டப்படிப்பை சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1951இல் முடித்தார். தொடர்ந்து தனது முதுகலை பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து 1952இல் பெற்றார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் (TIFR) இணைந்து ஹோமி பாபா போன்ற அறிவியலாளர்களுடன் பணியாற்றினார். பின்னர், நியூயார்க் மாநிலத்தின் ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் இராபர்ட் மர்சக் வழிகாட்டுதலின்கீழ் பட்ட மாணவராக சேர்ந்தார். 1958இல் அப்பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் யூலியன் சிவிங்கர் கீழ் முனைவர்பட்ட மேற்படிப்பு மாணவராக சேர்ந்தார்.
சுதர்சன் இயற்பியலின் பல துறைகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அளித்துள்ளார். இராபர்ட்டு மர்சக்குடன் இணைந்து வலிகுறை இடைவினையின் வி-ஏ கோட்பாட்டை முன்வைத்தவர் இவர்தான்; இதுவே பின்னாளில் வலுவற்ற மின் கோட்பாட்டிற்கு வழிகோலியது. பெயின்மான், சுதர்சனின் பங்களிப்பை ஏற்று சுதர்சனும் மர்சக்கும் கண்டறிந்ததை தானும் கெல்மானும் வெளிப்படுத்தியதாக 1963இல் கூறினார்.[8] ஒத்திணைந்த ஒளியை குவாண்டம் சார்பீட்டால் குறிப்பிடும் முறையை உருவாக்கினார்; இது கிளாபர்-சுதர்சன் பி உருவகிப்பு என அறியப்படுகிறது. இதற்குத் தான் இணையரில் ஒருவரான கிளாபருக்கு நோபல் பரிசு கொடுத்த நோபல் அகாதமி சுதர்சனுக்கு கொடுக்காதது சர்ச்சையாயிற்று.
குவாண்டம் ஒளியியலில் சுதர்சன் ஆற்றியிருக்கும் பங்கு சிறப்பானது. செவ்வியல் ஒளியியல் கோட்பாடுகளுக்கு இணையான குவாண்டம் ஒளியியல் கோட்பாடுகளைத் தமது தேற்றம் மூலம் நிலைநிறுத்தினார். இவரதுத் தேற்றம் சுதர்சன் உருவகிப்பைப் பயன்படுத்துகிறது. இந்த உருவகிப்பு குவாண்டம் கோட்பாடு கொண்டு ஒளி விளைவுகளை முன்கணிக்கிறது இந்த விளைவுகளைச் செவ்வியல் ஒளியியல் மூலம் விளக்க இயலாது. தவிரவும் சுதர்சன் டேக்கியான் துகள்களைக் குறித்து முதலில் முன்மொழிந்தவராவார். டேக்கியான் துகள்கள் ஒளியை விட விரைவாகச் செல்லக்கூடியவை.[9] அவர் இயலாற்றல் படங்களை உருவாக்கினார்; இதன் மூலம் திறவெளி குவாண்டம் அமைப்புக் கோட்பாட்டை ஆய்வு செய்ய மிகவும் பயனுள்ளதாகும். பைத்யநாத் மிசுராவுடன் இணைந்து குவாண்டம் சீனோ விளைவை முன்மொழிந்தார்.[10]
சுதர்சனும் கூட்டாளிகளும் இணைந்து "மின்னூட்டத் துகள் கற்றை ஒளியியலின் குவாண்டம் கோட்பாட்டை" துவக்கினர்.[11][12]
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் (டிஐஎஃப்ஆர்), ரோசெஸ்டர் பல்கலைக்கழகம், சிரக்கியூஸ் பல்கலைக்கழகம், மற்றும் ஆர்வர்டு பல்கலைக்கழகங்களில் கற்பித்துள்ளார். 1969 முதல் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார். இந்திய அறிவியல் கழகத்திலும் மூத்த இயற்பியல் பேராசிரியராக இருந்தார். 1980களில் சென்னை கணித அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும் ஐந்தாண்டுகள் பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் இந்த நிறுவனத்தை உயர்திறன் மையமாக மாற்றினார். மெய்யியலாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பலமுறை சந்தித்து உரையாடியுள்ளார். இவரது 80ஆவது பிறந்தநாளில், செப்டம்பர் 16, 2011இல், கணித அறிவியல் கழகம் இவருக்கு பாராட்டு விழா நடத்தியது.[13] சுதர்சனிற்கு துகள் இயற்பியல், குவாண்டம் ஒளியியல், குவாண்டம் தகவல், குவாண்டம் புலக்கோட்பாடு, மரபார்ந்த விசையியல் மற்றும் இயற்பியல் அடிப்படைகளில் ஆர்வமிக்கவராக இருந்தார். சுதர்சனுக்கு வேதாந்தத்திலும் ஆர்வமுண்டு; இத்துறையிலும் அடிக்கடி பேருரைகள் வழங்கியுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.