From Wikipedia, the free encyclopedia
சர் ஜான் ஜார்ஜ் வுட்ரோஃப் (Sir John George Woodroffe, திசம்பர் 15, 1865 - சனவரி 18, 1936) என்பவர் ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி (Orientalist) ஆவார். ஆர்த்தர் அவலான் எனும் புனைபெயரால் இவர் அழைக்கப்படுகிறார். இவரது செயல்பாடுகள் மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தியது.
ஜான் வுட்ரோஃப் John Woodroffe | |
---|---|
பிறப்பு | திசம்பர் 15, 1865 |
இறப்பு | சனவரி 18, 1936 70) | (அகவை
தேசியம் | பிரித்தானியர் |
மற்ற பெயர்கள் | ஆர்த்தர் அவலோன் |
இனம் | Caucasian |
குடியுரிமை | ஐக்கிய இராச்சியம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகக் கல்லூரி |
பணி | கீழ்த்திசைவாதி |
அறியப்படுவது | த சேர்ப்பண்ட் பவர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | ஜேம்ஸ் வுட்ரோஃப், புளோரென்ஸ் வுட்ரோஃப் |
ஜான் வுட்ரோப், ஜேம்ஸ் டிஸ்டால் வுட்ரோப்புக்கும் அவரது மனைவி பிளாரன்சுக்கும் மூத்த மகனாக பிறந்தார். அவரது தந்தை பெங்காலின் அட்வகேட் ஜெனெரலாகவும், சிறிது காலத்திற்கு இந்திய அரசின் சட்ட ஆலோசகராகவும், செயின்ட் கிரேகரியில் நைட் பட்டம் பெற்றவராகவும் திகழ்ந்தார். சர் ஜான் ஜார்ஜ் வுட்ரோப் ஆக்ஸ்போர்டில் உள்ள வுபோர்ன் பார்க் பள்ளி மற்றும் பல்கலைக்கழக கல்லூரியில் பயின்றார்.
சிவில் சட்டங்களில் இளநிலை படிப்பு முடித்து கொல்கத்தா உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஆக 1889 -இல் பதிவு செய்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் நீதித்துறையின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது நண்பர் திரு.அமீர் அலியுடன் இணைந்து இன்றும் பரவலாக அறியப்படும் சட்ட நூலான "சிவில் ப்ரோசிஜர்ஸ் இன் பிரித்தானியாவின் இந்தியா" எனும் நூலைத் தொகுத்தார். பின்னர் 1902 ஆம் ஆண்டு இந்திய அரசின் நிலைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உயர்நீதி மன்றத்திற்கு நிலை உயர்த்தபட்டார். அப்பதவியில் பதினெட்டு ஆண்டுகள் திறம்பட செயல்பட்டார், பின்னர் 1915ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக நியமிக்கபட்டார். பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின்பும் 1923 தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இந்திய சட்டங்களுக்கான துறையில் ரீடராக பணிபுரிந்தார்.
அவரது நீதித்துறை கடமைகளை செவ்வனே ஆற்றியது மட்டும் அல்லாமல் சமஸ்க்ருத மொழியையும் இந்து மதத்தின் தத்துவ மரபையும் கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக இந்திய மறைஞானமாகிய தாந்த்ரிகத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு. ஆர்தர் அவலான் எனும் புனைபெயரில், சுமார் இருபது சமஸ்க்ருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்திய தத்துவ மரபைப் பற்றியும், யோகக் கலை பற்றியும், தாந்த்ரிகத்தைப் பற்றியும் மிகுந்த அறிவார்ந்த உரைகளை உலகெங்கும் நிகழ்த்தினார்.
டி.எம்.பி மகாதேவன் இவரை பற்றி கூறும் பொழுது " சாக்த மரபின் வெவ்வேறு கூறுகளை பற்றி இவர் தொகுத்தும் எழுதியும் உள்ள கட்டுரைகள் வெகு முக்கியமானவை, இந்து மதமும் வழிபாட்டு முறைகளும் ஆழ்ந்த தத்துவ பின்புலம் கொண்டது என்பதையும் இதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, மூடத்தனமான வழிபாட்டுமுறைகளை அது முன்வைப்பதில்லை என்பதை உலகிற்கு காட்டினார்".
அர்பன் (2003 ப .135) இவரை ஒரு தன்னிரக்க சிந்தனையாளர் என்று முன்வைக்கிறார். "இந்தியாவில் தன்னை நீதி துறையின் வல்லுனராக நிறுவிக்கொண்ட அதே தருணத்தில், தனது சொந்த முயற்சியால் தாந்த்ரிகத்தை கற்று, அது தொடர்பாக பல நூல்களை எழுதி வெளியிட்டதன் மூலம், தாந்த்ரிகத்தை மேற்கு உலகிற்கு புதிய பொலிவோடு நவீன காலகட்டங்களில் அறிமுகப்படுத்தினார். ஆயினும் கூட அவர் தாந்த்ரிகத்தை முன்வைத்து, அதன் மேல் எழுப்பப்படும் விமரிசனங்களை பொருட்படுத்தாமல், அதற்காக வளைந்து கொடுத்தார், அதை அவர் வேத வேதாந்த கொள்கைகளின் வரிசையில் வந்த உத்தமமான, சுத்தமான, ஒழுக்கமான வழிபாட்டுமுறை என்றே முன்வைத்தார்".
இவர் எழுதிய - தி செர்பன்ட் பவர்- தி சீக்ரெட்ஸ் ஒப் தான்த்ரிக் அண்ட் சாக்திக் யோகா, மேற்குலகில் பிற்காலங்களில் குண்டலினி யோகத்தைப் பற்றிய அனேக படைப்புகளின் மூலமாக கருதப்படுகிறது. பூர்ணானந்தர் கி.பி 1550-களில் இயற்றிய "ஷட் சக்ர நிரூபணம்" மற்றும் "பாதுக பஞ்சகா" ஆகிய சமஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பாகவும் உரையாகவும் வெளிவந்த படைப்பாகும். இங்கு "தி செர்பன்ட் பவர்" என்பது குண்டலினி எனும் சக்தியை குறிப்பதாகும். மூலாதாரத்தில் உறங்கி கிடக்கும் இந்த சக்தி தியானத்தினாலும், தாந்த்ரிக முறைகளினாலும் விழிப்படைந்து மேலே செல்ல கூடியது என்று நம்பபடுகிறது.
அவரது மற்றொரு படைப்பான "தி கார்லாந்து ஒப் லெட்டர்ஸ்", சாக்த மரபில் உள்ள அத்வைத பண்புகளை வேறு புரிதல்களை கொண்டு முன்வைக்கிறது. பிரபஞ்சத்தின் ஆதியில்,பரிணாமமற்ற தூய பிரக்ஞை இருந்ததும் அது பிரபஞ்சமாக பரிணமித்தது என்பதையும் கொண்டு அதை அவர் விளக்குகிறார். அவரது ஆழ்ந்த தத்துவ அறிவை கொண்டு இதை அவர் இவ்வாறு விளக்குகிறார். "பிரபஞ்சத்தில் ஒரு பேரதிர்வு உருவாகி, படைத்தலை தொடங்கியது என்று சில மேற்குலக எழுத்தாளர்கள் கூறுகிறார்கள், இதனுடைய இந்திய நோக்கானது -சஸ்பந்தன பிரகிருதி சக்தி - பிரம்மனுடைய சிவாம்சமானது தன்னிலையில் உறைந்து அமைதியாக இருக்கும் நேரத்தில், பிரக்ரிதியானது சலனத்தன்மை கொண்டது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன், அதாவது பிரளயத்தின் பொழுது, பிரபஞ்சத்தின் பிரகிருதி சமநிலையில் உள்ளது பின்பு அது அதிர்ந்து முதல் பேரதிர்வை ஏற்படுத்துகிறது, கட்டுண்ட சக்தியை விடுவிக்கிறது, இந்த நிகழ்வின் ஆரம்ப ஒலி ஓம் எனும் மந்திரத்தை ஒத்தது".
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.