Remove ads
From Wikipedia, the free encyclopedia
புலவர் செ. இராசு (2 சனவரி 1938 – 9 ஆகத்து 2023) தமிழகக் கல்வெட்டறிஞரும், தொல்லியலாளரும், நூலாசிரியரும் ஆவார்.
செ. இராசு | |
---|---|
பிறப்பு | வெள்ளமுத்துக் கவுண்டன்வலசு, பிரிக்கப்படாத கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) | 2 சனவரி 1938
இறப்பு | ஆகத்து 9, 2023 85) கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா | (அகவை
கல்வி | காமராசர் பல்கலைக்கழகம், முனைவர் சென்னைப் பல்கலைக்கழகம், முதுகலை |
பணி | தொல்லியலாளர், விரிவுரையாளர் |
அறியப்படுவது | கல்வெட்டறிஞர் |
பெற்றோர் | ந. சென்னியப்பன், நல்லம்மாள் |
வாழ்க்கைத் துணை | கௌரி |
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் 1938 சனவரி 2 அன்று பிறந்தவர். தகப்பனார் ந. சென்னியப்பன், தாயார் நல்லம்மாள். இவர்தம் மனைவி பெயர் கௌரி அம்மாள். இவருக்கு கணிப்பொறித் துறையில் பணிபுரியும் மூன்று ஆண்மக்கள் உண்டு.
பள்ளிக் கல்வியை திருப்பூர், கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், ஞானிபாளையம், ஈரோடு ஆகிய இடங்களில் பயின்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவுசெய்தவர் (1955-59). சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
ஈரோட்டில் 1959 இல் தமிழாசிரியர் பணியைத் தொடங்கினார். 1980-82 இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1980 ஆம் ஆண்டு தொடங்கி 1982 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் விரிவுரையாளராக 1982 இல் இணைந்து கல்வெட்டு,தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார்.
பள்ளியில் தமிழாசிரியாராகப் பணியேற்றது முதல் இவரின் பன்முகத் திறன்களைப் பட்டை தீட்டியவர்கள்; சுவடிப்பயிற்சி - பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டர்; கல்வெட்டுப் பயிற்சி - பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா; தொல்லியல் பயிற்சி - தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் இரா.நாகசாமி. தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன் பட்டறிவை வளர்த்துக்கொண்டு கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.[1]
இவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர். ஆதலால் தமிழ் ஆவணங்களைப் பிழையின்றி, பொருள் உணர்ச்சியுடன் படிப்பதில் வல்லவர். கல்வெட்டு,செப்பேடு,சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும்,நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்குவதில் வல்லவர். கொங்கு நாடு தொடர்பான நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தும் எழுதியும் உள்ளார். கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள் ஆகியவை அவர் பதிப்பில் சிறந்தவை. பஞ்சக் கும்மி என்னும் நூல் பதிப்பும் குறிப்பிடத்தக்கது. கச்சத்தீவு குறித்த இவர் எழுதிய நூல் பல வரலாற்று ஆதாரங்களைக் கொண்டதாகும். வட்டார வரலாற்றுத் துறையில் பெரிதும் ஈடுபட்டுப் பல நூல்களை உருவாக்கி உள்ளார். கொங்கு வட்டாரத்தில் உள்ள கோயில்கள், கொங்கு வேளாளர் குலங்கள் குறித்துப் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.[2]. இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல் அமைகின்றன. கட்டுரைகள் 250 அளவில் வெளிவந்துள்ளன.செய்திகள் 100 மேல் வந்துள்ளன. 2012ஆம் ஆண்டில் செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் என்ற கல்வெட்டு, செப்பேடு தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.[3]
இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல், திருப்பணிச்செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத்தக்கன.
இவர் எழுதிய தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வரலாறு, தொல்பொருளியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளில் ஒன்றாக உ. வே. சா விருதையும் அளிக்கத் தொடங்கியது. இந்த உ.வே.சா விருதை முதலில் பெற்றவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.[4]
உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவந்த இராசு, 2023 ஆகத்து 9 அன்று காலையில் காலமானார். அவர் உடலுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் இராஜகோபால் சுன்கரா, முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மாநில அமைச்சர் கே. வி. இராமலிங்கம், அரசியலர்கள், தொழிலதிபர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்று மாலையே பெருந்துறை மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.