Remove ads
இந்திய இயற்பியலாளர் From Wikipedia, the free encyclopedia
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்காக 1930ல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
சர் சந்திரசேகர வெங்கட ராமன் | |
---|---|
பிறப்பு | திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா | 7 நவம்பர் 1888
இறப்பு | 21 நவம்பர் 1970 82) பெங்களூரு, கர்நாடகம், இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியன் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் இந்திய அறிவியல் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஜி. என். ராமச்சந்திரன் |
அறியப்படுவது | இராமன் விளைவு |
விருதுகள் | நைட் பேச்சளர் (1929) இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930) பாரத ரத்னா (1954) லெனின் அமைதிப் பரிசு (1957) |
சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். இவர் 1904ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை மாநிலக் கல்லூரியிலே தொடர்ந்தார். 1907ஆம் ஆண்டு ஜனவரியில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.
ச. வெ. இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.
சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.
இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.
பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.
இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.