இந்து பெண் தெய்வம் From Wikipedia, the free encyclopedia
சின்னமஸ்தா (Chinnamastā) அல்லது அரிதலைச்சி என்பவர், பத்து மகாவித்யா தேவதைகளில் ஒருத்தியாவாள். தன் தலையைத் தானே அரிந்து கையிலேந்தி, மறு கையில் கூன்வாள் ஏந்திக் காட்சி தரும் மிகக் குரூரமான வடிவம் இவளுடையது. "பிரசண்ட சண்டிகை" எனும் திருநாமமும் இவளுடையதே!
"தன்னைத் தியாகம் செய்தல்" என்ற கோட்பாட்டின் உருவகமே அரிதலைச்சி. சுயகட்டுப்பாடு, கலவி வேட்கை, கலவியாற்றல் முதலான பல கோட்பாடுகளின் உருவகமாகவும் இவள் கொள்ளப்படுகிறாள். தேவியின், வரமருளும் - வாழ்வைச் செறுக்கும் இரு குணங்களும் அரிதலைச்சிக்குப் பொருந்துகின்றன. குரூரமான தோற்றமும், ஆபத்தான வழிபாட்டு முறைகளும், உலகியலாளர்களுக்கும் சாதாரண தாந்திரீகர்களுக்கும், சின்னமஸ்தையின் வழிபாட்டைத் தடை செய்கின்றன.
திபெத்திய பௌத்த தேவதையான "வஜ்ரயோகினி"யின் "சின்னமுண்டா" எனும் தலையரிந்த வடிவம், சின்னமஸ்தைக்குச் சமனான பௌத்த வடிவம் ஆகும்.[1] கிருஷ்ணாச்சாரியார் எனும் பௌத்த வகுப்பைச் சேர்ந்த மேகலை, கங்கலை எனும் இரு சோதரியர் தம் தலையைத் தாமே துண்டித்து தம் குருமுன் நடனமாடியதாகவும், அவர்களுடன் வஜ்ரயோகினியும், இணைந்துகொண்டதாகவும் ஒரு பௌத்தக் கதை சொல்கின்றது. இன்னொரு கதை, பத்மசம்பவ புத்தரின் அடியவளான லக்ஷ்மிங்கரை எனும் இளவரசி, தன் அரிந்த தலையுடன் நகரெங்கும் உலா வந்து, "சின்னமுண்டா வஜ்ரவராகி" எனப் பெயர் பெற்றதாகவும் சொல்கின்றது.[2]
ஏழாம் நூற்றாண்டில் வழிபடப்பட்ட பௌத்த சின்னமுண்டாவே, இந்து சின்னமஸ்தாவின் ஆரம்பம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[3] இன்னும் சிலர் வேதகால தெய்வமான ""நிர்ரித்ரீ"யின் மாறுபட்ட வடிவங்களே இன்றைய காளி, சாமுண்டி, அரிதலைச்சி போன்றோர் என்கின்றனர்.[4] குருதிவெறி பிடித்த, கோரவடிவான எத்தனையோ பெண்தெய்வங்கள், இந்து மதத்தில் இருக்கும் போதும், அரிதலைச்சி ஒருத்தியே தலையரிந்த மிகக் கொடூரமான தோற்றத்தில் காட்சி தருகிறாள்.[5][6] குஹ்யாதிகுஹ்ய தந்திரம் நூல், சின்னமஸ்தையிலிருந்தே நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கின்றது.[7]
சாக்தப் பிரமோதம் எனும் நூலில் சொல்லப்படும் அரிதலைச்சியின் நூறு பெயர்களில் ஒன்றான "பிரசண்ட சண்டிகை" என்பது, தேவாசுரப் போரில் அசுரரை அழித்தும், அவள் வெறியடங்காமல் தன் தலையரிந்து தன் குருதியை அருந்தியதால் சின்னமஸ்தை ஆனதாக மேலும் விரிகின்றது.[8] பொதுவாக அரிதலைச்சியின் எல்லாக் கதைகளிலும் அவளது தாய்மை, தன்னைத் தானே தியாகம் செய்தல், உலகநலன் முதலான விடயங்களே முன்னிலைப்படுத்தப் படுகின்றன.[9]
செம்பருத்திப்பூ நிறத்தவளாக வருணிக்கப்படும் அரிதலைச்சி, பதினாறு வயதும், விரித்த கூந்தலும், பிறந்த மேனியுமாய்க் காட்சிதருவள். நாகத்தைப் பூணூலாகவும், கபாலமாலையும் அணிந்து, அரிந்த தன் தலையை இடக்கையில் ஏந்தி, அதை அரிந்த கத்தரிக் கோலை வலக்கையில் ஏந்தி அகோரமாய் நிற்பாள். அரிந்த முண்டத்திலிருந்து ஊற்றெடுக்கும் மூன்று குருதிப் பீய்ச்சல்களில் ஒன்றை அவளது அரிந்த தலையும், ஏனைய இரண்டை அவள்தன் தோழியரான இடாகினியும் வாருணியும் அருந்துவர். அவளுக்குப் பீடமாக, கலவியில் ஈடுபடும் மதனனும் இரதி தேவியும் காணப்படுவர். பின்புலமாக சுடுகாடு காட்சி தரும்.[10][11] மதனன் இரதிக்குப் பதிலாக, அங்கு சிவன் படுத்திருக்க, சிவனுடன் உறவாடும் கோலத்திலும் அரிதலைச்சி காட்சியளிப்பதுண்டு.[12]
வாழ்க்கை, மரணம், கலவி என்பன ஒன்றோடொன்று இணைந்தவை என்பதை அரிதலைச்சி குறிக்கின்றாள். அவளை, மீளுருவாக்கம், தியாகம் என்பவற்றுடன் இணைப்பதும் உண்டு.[13] தேவியின் குரூர வடிவங்கள் எல்லாம் பிறரை அழிக்க, சின்னமஸ்தையோ தன் தலை அரிந்து அடியவர்க்கு வழங்குவதன் மூலம் தாய்மையின் தியாகத்தைச் சுட்டுகின்றாள். காமன், இரதியைக் காலின்கீழ் மிதிப்பதால், காம இச்சையைக் கட்டுப்படுத்தும் வல்லமையை அளிப்பவளாகவும் மிளிர்கின்றாள்.[14] எனவே, காமத்தை அடக்கவும், மரணபயத்தை வெல்லவும், தியாகத்தை ஏற்றுக் கொள்ளவும், போர்வீரர்கள் அவளை வழிபடுமாறு "சின்னமஸ்தா தத்துவம்"நூல் வலியுறுத்துகின்றது.[15]
இன்னொரு விதத்தில், காமனும் இரதியும் மூலாதார சக்கரத்தைக் குறிக்க, இடை, பிங்கலை, சுசும்னா நாடிகளூடாக குண்டலினி சக்தி தலையைத் தனியே பிரித்து வெளியேறுவதை, அரிதலைச்சியின் கழுத்திலுள்ள மூன்று குருதி ஊற்றுகள் சுட்டிக் காட்டுகின்றன.[16][17][18]
குரூரமான தோற்றத்தால், மகாவித்யைகளோடு அன்றி, தனிப்பட்ட ஆலயங்கள் அரிதலைச்சிக்கு மிகக் குறைவு.[5][19] மனிதக்குருதி, தசை என்பவற்றால் மிக மகிழ்பவளாக சித்தரிக்கப்படுவதும் இதற்கொரு காரணம் ஆகலாம்.[19] கன்னிப்பெண்ணுடன் உறவாடுதல், மது, மாமிச பலி, குருதிப்பலி[20] முதலியன அரிதலைச்சி வழிபாட்டின் சில கடுமையான கடமைகளாகச் சொல்லப்படுகின்றன. பெண்ணொருத்தி அரிதலைச்சியை வழிபட்டால், கணவன், குழந்தைகளை இழந்து இடாகினிப் பேயாய் அலைய வேண்டி நேரிடும் என்று சாக்தநூல்கள் எச்சரிக்கின்றன. வழிபாட்டில் குறையேற்பட்டால், பக்தன் தலையரிந்து அவன் குருதியைக் குடிக்கவும் சின்னமஸ்தை தயங்காள் என்று அச்சுறுத்துகின்றன சின்னமஸ்தையின் வழிபாட்டு நூல்கள்.
இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சிந்துபூர்ணியிலுள்ள சின்னமஸ்திகா ஆலயம், தாட்சாயிணியின் திருப்பாதம் விழுந்த சக்திபீடங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.[21] காசிக்கு அண்மையிலுள்ள இராம்நகரிலும், ஜார்க்கண்ட்டிலுள்ள நந்தன பர்வத் மலையிலும், மேற்கு வங்கத்தின் விஷ்ணுபூரிலும், நேபாளத்தின் காத்மண்டு பள்ளத்தாக்கிலும் அவளுக்குரிய அரிதான ஆலயங்கள் அமைந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.