Remove ads
From Wikipedia, the free encyclopedia
சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் கொண்டாடப்படும் ஒரு விரத நாளாகும்.[1] இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன. இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகக் கொண்டாடத் தொடங்கினர். தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர்.
சித்திரா பௌர்ணமி | |
---|---|
மதுரையில் சித்திரா பௌர்ணமி திருவிழாவில் கள்ளழகர் குதிரை பவனி | |
கடைப்பிடிப்போர் | இந்து தமிழர், மலையாளிகள் |
வகை | இந்துப் பண்டிகை |
கொண்டாட்டங்கள் | சித்திரகுப்தன், முருகன் வழிபாடு |
அனுசரிப்புகள் | பூசை |
நாள் | சித்திரை மாதத்தின் வரும் பௌர்ணமி நாள் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
வீட்டின் பூசை அறையில் சித்திர குப்தன் படியளப்பு எழுதி விநாயகர் படத்தினை வைக்கின்றார்கள். அதற்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் படையலிடுகின்றனர். இவற்றோடு காய்கறிகளும், பருப்பும், தயிர் கடையும் மத்தினையும் வைக்கின்றார்கள். இந்தச் சித்திரைப் பௌர்ணமியை சித்திர குப்தனின் திருமண நாளாக குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில் சித்திர குப்தரிடம் "எங்களில் மலையளவு பாவத்தினைக் கடுகளகாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்" என வேண்டுகின்றனர். [2] இந்த நாளில் மாக்கோலம் போடுதல், ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி சாமியறையில் பூசை செய்தல், காலையிலிருந்து விரதம் இருத்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். இந்நாளில் சித்திர குப்த நாயனாரின் புராணத்தினைப் படிப்பதைக் கிராமத்தில் வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த நாளில் கடல், ஆறு, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதும், அங்குள்ள ஏழைகளுக்கும், சாமியார்களுக்கும் உணவிடுதலைச் சிறப்பாகக் கருதுகிறார்கள்.
இந்த சித்திரா பௌர்ணமி விழா பல காலமாக தமிழர்களிடையே கொண்டாப்பட்டு வந்துள்ளமைக்குப் பல கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இந்த விழாவினைப் பற்றி திருச்சிராப்பள்ளி நெடுங்கலாதர் கோயிலிலும், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விநாயகர் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோயிலில் உள்ள கல்வெட்டில் ராசராச சோழன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு அவர் நிவந்தம் கொடுத்தமை கொடுத்த குறிப்பு உள்ளது. [3]
இந்நாளில் சிவாலயங்களில் விழா கொண்டாப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்த சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்திரன் விருத்திராசூரன், விசுவரூபன் என்ற பிராமணர்களைக் கொன்றமையால், இங்குள்ள சிவனை சித்ரா பௌர்ணமியில் வழிபட்டு அப்பாவத்தினை நீக்குவதாக மதுரை தலபுராணம் கூறுகிறது. [4] காஞ்சிபுரம் வைஷ்ணவா கோயில்களில் இவ்விழாவை நைனார் நோம்பு என்ற பெயரில் வழங்குகிறார்கள்.
சித்ரா பௌர்ணமி என்பது ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதம் சித்திரையில் நிகழும் பௌர்ணமி தினம் ஆகும். பெளர்ணமி தினம் மாதந்தோறும் வரும். தமிழ் இன மக்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற்குரிய நாளாகக் கருதுகின்றனர்.
அன்றைய தினம் தமிழ் மக்கள் வழிபடும் அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் சில கோயில்களில் சித்திரைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு பௌர்ணமி தினம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும்.
சித்ரா பௌர்ணமி அன்று சிவன், முருகன் போன்ற கோயில்களில் கிரிவலம் செல்வார்கள்.
சித்ரா பௌர்ணமி அன்று காலையில் குளித்து முடித்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம்.
பழங்காலத்தில், சித்ரா பௌர்ணமி அன்று ஆற்றங்கரையில் உறல் தோண்டி அதற்கு திருவுறல் என்று பெயர் சூட்டி, அங்கே இறைவனை வலம் வரச் செய்வார்கள். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்குப் படைத்து பூஜிப்பார்கள்.
இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும். புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை. தமிழ்மக்கள் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ அமர்ந்து உரையாடி, பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்தமானதாகும்.
புராணக் கதைகளின்படி, மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்திரகுப்தர் அவதரித்த நாளும் இன்றுதான். அவர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாலும், சித்திரை மாதத்தில் பிறந்ததாலும் சித்திர குப்தன் என்று அழைக்கப்படுகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.