சிட்னி ஒப்பேரா மாளிகை (Sydney Opera House) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 2007, ஜூன் 28 ஆம் நாள் இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இதற்கென நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற இதன் வடிவமைப்பு டென்மார்க்கைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான ஜோர்ன் அட்சன் என்பவரால் செய்யப்பட்டது. சிட்னி ஒப்பேரா மாளிகை 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தனித்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று. இது உலகின் மிகவும் புகழ் பெற்ற நிகழ்த்து கலைகளுக்கான அரங்கங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. 2007 ஆம் ஆண்டில், புதிய ஏழு உலக அதிசயங்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட உலகம் தழுவிய வாக்கெடுப்பில் இறுதிக் கட்டத்துக்குத் தெரிவான இருபது அதிசயங்களில் ஒன்றாகவும் இது விளங்கியது. பிரபல கட்டிடக்கலைஞரான லூயிஸ் கான் இக் கட்டிடம் பற்றிக் கூறியபோது, "இக் கட்டிடத்தில் பட்டுத் தெறிக்கும்வரை தனது ஒளி எவ்வளவு அழகானது என்று சூரியனுக்கே தெரியாது" என்றார்.

விரைவான உண்மைகள் சிட்னி ஒப்பேரா மாளிகை Sydney Opera House, பொதுவான தகவல்கள் ...
சிட்னி ஒப்பேரா மாளிகை
Sydney Opera House
Thumb
Thumb
பொதுவான தகவல்கள்
வகைகலைத் தொகுதி
கட்டிடக்கலை பாணிExpressionist
இடம்சிட்னி, ஆஸ்திரேலியா
நிறைவுற்றது1973
திறக்கப்பட்டதுஅக்டோபர் 20, 1973
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைகாங்கிறீட்டுச் சட்டகமும், முன்வார்ப்புக் காங்கிறீட்டுக் கூரையும்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஜோர்ன் அட்சன்
அமைப்புப் பொறியாளர்ஓவ் அருப் அண்ட் பார்ட்னர்ஸ்
முதன்மை ஒப்பந்தகாரர்சிவில் அண்ட் சிவிக் (மட்டம் 1), எம்.ஆர். ஹார்னிபுரூக் (மட்டம் 2 ம், 3 ம் உள்ளக வேலையும்)
மூடு

சிட்னி ஒப்பேரா மாளிகை, சிட்னி துறைமுகப் பாலத்துக்கு அண்மையில், சிட்னித் துறைமுகத்தில் உள்ள பென்னெலோங் முனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடமும் அதம் சூழலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் அறியப்பட்ட அடையாளச் சின்னம் ஆகும்.

இங்கு உற்பத்தி மற்றும் உள்ளக தயாரிப்புகளில் நான்கு முக்கிய குடியுரிமை நிறுவனங்கள் உட்பட பல நிகழ்த்து கலை நிறுவனங்கள் உள்ளன. சிட்னி ஒப்பேரா மாளிகை, ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான பார்வையாளர் பகுதிகளில் ஒன்று, இங்கு ஆண்டுதோறும் ஏழு மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர். 28 ஜூன் 2007 முதல், ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய களமாக விளங்கி வருகிறது.

அமைப்பு

சிட்னி ஒப்பேரா மாளிகை, நவீன வெளிப்பாட்டிய (expressionist) வடிவமைப்புடன் கூடியது. தொடர்ச்சியாக அமைந்த பல காங்கிரீட்டு வளைகூரைகள் வடிவமைப்பின் முக்கியமான கூறுகளாக உள்ளன.[1] இக்கூறுகள் ஒவ்வொன்றும் 75.2 மீட்டர் ஆரமுடைய கோள வடிவத்தின் துண்டுகளால் ஆனது. கட்டிடம் பெரிய அளவிலான மேடை போன்ற அமைப்பின் மேல் நிறுவப்பட்டுள்ளது. 1.8 எக்டேர் (4.4 ஏக்கர்) நிலப்பரப்பில் அமைந்த இக்கட்டிடம் 183 மீட்டர்கள் (600 அடி) நீளமும், 120 மீட்டர்கள் (394 அடி) அகலமும் கொண்டது. கடல் மட்டத்துக்குக் கீழ் 25 மீட்டர்கள் (82 அடி) வரை செல்லும் காங்கிறீட்டு நிலத்தூண்களுக்கு மேல் அமைக்கப்பட்ட 588 காங்கிறீட்டுத் தூண்கள் இக்கட்டிடத்தைத் தாங்குகின்றன.

இதன் கூரை ஓடக (shell) அமைப்புக் கொண்டது எனப் பரவலாகக் குறிப்பிடப்பட்டாலும், அது உண்மையில் முன்தகைப்புக் காங்கிறீட்டினால் ஆன விலா வளைகளின்மீது தாங்கப்பட்ட முன்தகைப்புக் காங்கிறீட்டுத் தகடுகளால் ஆனது.[2] தொலைவில் இருந்து பார்க்கும்போது கூரை ஒரே தன்மையான வெண்ணிறமாகத் தெரிந்தாலும், உண்மையில் அதன் மேற்பரப்பு, பளபளப்பான வெள்ளை, மங்கலான இளமஞ்சள் ஆகிய நிறங்களாலான 1,056,006 ஓடுகள் பதித்து உருவாக்கப்பட்ட "V" வடிவ வரிசைக் கோல அமைப்புக் கொண்டது. மேற்படி ஓடுகள் சுவீடன் நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது.[3]

நிகழ்ச்சிகளுக்கான இடங்களும் வசதிகளும்

சிட்னி ஒப்பேரா மாளிகை நிகழ்த்துகைகளுக்கான பல இடவசதிகளைக் கொண்டது.

  • கச்சேரி மண்டபம்(Concert Hall): 2679 இருக்கைகளுடன் கூடியது.
  • யோவான் சதர்லான்ட் அரங்கம்: 1,507 இருக்கைகள் கொண்டது.
  • நாடக அரங்கம்: 544 இருக்கைகளோடு அமைந்தது.
  • நாடகசாலை: 398 இருக்கைகள்.
  • கலைக்கூடம்: 280 நிலையான இருக்கைகள் கொண்டது. 400 இருக்கைகள் வரை கொள்ளக்கூடியது.
  • அட்சன் அறை
  • ஒலிப்பதிவுக் கூடம்
  • வெளி முற்றம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.