Remove ads
From Wikipedia, the free encyclopedia
கோத்தா கினபாலு; (மலாய்: Kota Kinabalu (KK); ஆங்கிலம்: City of Kota Kinabalu; சீனம்: 亚庇; ஜாவி: کوتا کينابالو) என்பது மலேசியா, சபா, மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டத்தில் அமைந்து உள்ள மாநகரம்; சபா மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரின் பழைய பெயர் ஜெசல்டன் (Jesselton). 1967 டிசம்பர் 22-ஆம் தேதி, கோத்தா கினபாலு என சபா மாநில சட்டமன்றம் மாற்றம் செய்தது.[3]
கோத்தா கினபாலு | |
---|---|
Kota Kinabalu Jesselton | |
சபா தலைநகரம் | |
குறிக்கோளுரை: இயற்கை உல்லாச நகரம் (Nature Resort City) (Bandaraya Peranginan Semula Jadi) | |
ஆள்கூறுகள்: 05°58′30″N 116°04′21″E | |
நாடு | மலேசியா மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | மேற்கு கரை |
புரூணை சுல்தானகம் | 15 –18 நூற்றாண்டு |
வடக்கு போர்னியோ நிறுவனம் | 1882 |
வடக்கு போர்னியோ தலைநகரம் | 1946 |
மாநகர்த் தகுதி | பிப்ரவரி 2, 2000 |
மாவட்டம் | கோத்தா கினபாலு |
அரசு | |
• மேயர் | நூர்லிசா அவாங் அலிப் (Noorliza Awang Alip) |
• மாநகராட்சி | கோத்தா கினபாலு மாநகராட்சி |
• தலைமை இயக்குநர் | டத்தோ இயோ பூன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 351 km2 (136 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 4,52,058 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 88xxx; 89xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 088, 087 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | EJ, EJA, EJB (1967–1980) SA (1980–2018) SY (2018–இன்று வரையில்)[1][2] |
இணையதளம் | dbkk.sabah.gov.my |
1 |
இந்த மாநகரம் போர்னியோ தீவின், வட மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்து உள்ளது. வடக்கே தென் சீனக் கடல் உள்ளது. துங்கு அப்துல் ரகுமான் வனப்பூங்கா (Tunku Abdul Rahman National Park), கோத்தா கினபாலு மாநகரத்திற்கு அருகாமையில் இருக்கிறது. கினபாலு மலையின் (Mount Kinabalu) பெயரைக் கொண்டு இந்த நகரத்திற்கும் ’கோத்தா கினபாலு’ என்று பெயர் வைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் முற்றாக அழிபட்டுப் போன நகரமாக இந்த நகரம் அறியப்படுகிறது. அழிவின் சாம்பல்களில் இருந்து, இப்போது புதிய பரிமாணங்களைப் பதித்து வரும் ஒரு புதிய நகரம். அண்மைய காலங்களில் பார்ப்பவர்களின் கண்களில் இயற்கை அழகையும் இனிதான கலாசாரத்தையும் வழங்கி வருகிறது. கோத்தா கினபாலு இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று அறியப்படுகிறது.
மலேசியாவிலும், அனைத்துலக ரீதியிலும் கோத்தா கினபாலுவை கேகே என்று அழைக்கிறார்கள். சபாவையும் போர்னியோவையும் பார்க்க வரும் சுற்றுப் பயணிகளுக்கு இந்த நகரம் ஒரு சுற்றுலா சொர்க்கபுரியாக விளங்குகிறது. கோத்தா கினபாலுவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் கினபாலு பூங்கா இருக்கிறது.[4]
இந்த நகரத்தைச் சுற்றிலும் பல சுற்றுலா மையங்கள் உள்ளன. இதைத் தவிர, முக்கிய தொழில்துறை, வாணிபத் தளங்களும் கோத்தா கினபாலுவின் புறநகர்ப் பகுதிகளில் உருவாக்கம் பெற்று வருகின்றன. ஆகவே, இந்த நகரம் கிழக்கு மலேசியாவில் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் முக்கியமான நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
1800-களில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (British North Borneo Company) (BNBC) , வட போர்னியோ நிலப்பகுதிகளில் தன்னுடைய காலனிகளை உருவாக்கி வந்தது. 1882-இல், அந்த நிறுவனம் காயா விரிகுடாவில் (Gaya Bay) ஒரு சின்ன குடியிருப்பு பகுதியை உருவாக்கியது. அந்த இடத்தில் ஏற்கனவே பஜாவு மக்கள் குடியிருந்து வந்தனர். அதுதான் இப்போதைய காயா தீவு ஆகும்.
1897-இல், வட போர்னியோ நிறுவனத்தின் அந்தக் குடியிருப்பு பகுதி, பஜாவு பூர்வீகக் குடிமக்களால் தாக்கப்பட்டது. பிரித்தானியர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. அதற்கு மாட் சாலே (Mat Salleh) எனும் பஜாவு இளைஞர் தலைமை தாங்கினார்.[5]
ஜெசல்டன் (Jesselton) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவின் பழைய பெயர். 1890-களில் அது ஒரு மீனவர் கிராமமாக இருந்தது. அதன் அப்போதைய பெயர் அப்பி-அப்பி (Api-Api). நீராவிக் கப்பல்கள் நங்கூரம் இடுவதற்கு பொருத்தமான ஓர் இடத்தைப் பிரித்தானியர்]]கள் தேடி வந்தனர். அந்தக் கட்டத்தில், இந்த மீனவர் கிராமம் பிரித்தானியர்களின் கண்களில் பட்டது.
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் புதிய நிர்வாக மையத்திற்கு ஜெசல்டன் என்று பெயர் வைக்கப்பட்டது.[6] அப்போது பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் துணைத் தலைவராக சர் சார்லசு ஜெசல் (Sir Charles Jessel) என்பவர் இருந்தார். அவருடைய பெயரே அந்த இடத்திற்கும் வைக்கப்பட்டது. காலப்போக்கில் ஜெசல்டன், வடக்கு போர்னியோவின் முக்கிய வணிகத் தளமாக மாறியது.[7]
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் காயா குடியிருப்பு பகுதி அழிக்கப்பட்டதும், 1898-இல், காந்தியான் விரிகுடாவில் (Gantian Bay) தற்காலிகமாக வேறோர் இடம் தேர்வு செய்யப்பட்டது. காந்தியான் விரிகுடா தற்சமயம் செபங்கார் விரிகுடா (Sepanggar Bay) என்று அழைக்கப் படுகிறது. அந்த இடமும் பொருத்தமாக அமையவில்லை. மறு ஆணடு ஹென்றி வால்க்கர் (Henry Walker) எனும் பிரித்தானிய நில ஆணையர். மீண்டும் நல்ல ஓர் இடத்தைத் தேர்வு செய்வதில் தீவிரம் காட்டினார்ர். 30 ஏக்கர்கள் (12 ha) பரப்பைக் கொனண்ட ஓர் இடத்தையும் கண்டுபிடித்தார்.[8]
அது ஒரு மீனவர் கிராமம் ஆகும். அதன் பெயர் அப்பி-அப்பி (Api-Api). நீராவிக் கப்பல்கள் நங்கூரம் இடுவதற்கு பொருத்தமான இடமாகவும், இரயில் பாதைகள் (North Borneo Railway) வந்து துறைமுகத்துடன் இணைவதற்குப் பொருத்தமான இடமாகவும் அமைந்து இருந்தது. தவிர வேகமான காற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பான இடமாகவும் இருந்தது.
அந்தப் புதிய நிர்வாக மையத்திற்கு ஜெசல்டன் (Jesselton) என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் துணைத் தலைவராக (Vice-Chairman of BNBC) சர் சார்லசு ஜெசல் (Sir Charles Jessel) என்பவர் இருந்தார். அவருடைய பெயரே அந்த இடத்திற்கும் வைக்கப்பட்டது.
1899-ஆம் ஆன்டு இறுதி வாக்கில், ஜெசல்டன் நகரம், வடக்கு போர்னியோவின் முக்கிய வணிகத் தளமாக மாறியது. ரப்பர், ரோத்தான்கள், தேன், மெழுகு போன்ற முக்கிய பொருட்களின் பரிமாற்ற இடமாகவும் மாற்றம் கண்டது. புதிய இரயில் பாதையின் (North Borneo Railway) மூலமாகப் பெருநிலப்பகுதிகள் ஜெசல்டன் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டன.[9]
மலாய்க்காரர்கள், பஜாவ் மக்களின் எழுச்சிகளும் புரட்சிகளும் (Malay and Bajau Uprisings) அவ்வப்போது இருக்கவே செய்தன. அவற்றையும் பிரித்தானியர் சமாளித்து வந்தனர். வட போர்னியோ கடல் பகுதிகளில் நீண்ட காலமாக இருந்து வந்த கடல் கொள்ளைச் சம்பவங்களை அடக்குவதற்குப் பிரித்தானியர் தீவிரமான முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றனர்.
இரண்டாம் உலகப் போரில், போர்னியோ தீவின் மீது ஜப்பானியர் படையெடுத்த போது, கோத்தா கினபாலு நகரத்திற்குப் பற்பல சேதங்கள் ஏற்பட்டன. போர்னியோ நிலப் பகுதிகளில் முன்னேறி வரும் ஜப்பானியர்களிடம் இருந்து பிரித்தானியர் பின்வாங்கிய போது கோத்தா கினபாலு நகரம் பகுதியளவு இடித்துத் தள்ளப்பட்டது.
மேலும் 1945-இல் நேச நாடுகள் கோத்தா கினபாலு மீது குண்டுவீசித் தாக்கியபோது, அந்த நகரம் மேலும் பேரழிவைச் சந்தித்தது. போர்னியோவை ஜப்பான் கையகப்படுத்திய பிறகு போர்னியோவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு, கோத்தா கினபாலுவிற்கு மீண்டும் அபி (Api) என மறுபெயரிடப்பட்டது. ஜப்பானிய இராணுவ நிர்வாகத்திற்கு (Imperial Japanese Army) எதிராகக் கோத்தா கினபாலுவில் பல கிளர்ச்சிகள் நடந்தன.[10]
கோத்தா கினபாலு நகரத்தில் 10 அக்டோபர் 1943-இல் ஒரு பெரிய கிளர்ச்சி உருவானது. ஜெசல்டன் கிளர்ச்சி (Jesselton Revolt) என்று அழைக்கப்படும் அந்தக் கிளர்ச்சி, கினாபாலு கெரில்லாக்கள் (Kinabalu Guerrillas) எனும் உள்ளூர் மக்களைக் கொண்ட ஒரு குழுவால் உண்டானது. அதன் தலைவர் ஆல்பர்ட் குவாக் (Albert Kwok) என்பவர் 1944-இல் ஜப்பானியப் படைகளால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப் பட்டார். அதன் பின்னர் ஜெசல்டன் கிளர்ச்சி அடங்கியது.[11]
1942-இல், போர்னியோவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு (Japanese occupation of British Borneo) நடைபெற்றது. அந்தக் கட்டத்தில், போர்னியோ நடவடிக்கையின் (Borneo Campaign) ஒரு பகுதியாக ஆறு மாதங்களுக்கும் மேலாக, இரவும் பகலும் நேச நாடுகளின் வான் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக ஜெசல்டன் எனும் கோத்தா கினபாலு நகரத்தில் எஞ்சியிருந்த பகுதிகள் மீண்டும் அழிக்கப்பட்டன. மூன்று கட்டிடங்கள் மட்டுமே எஞ்சின.
செப்டம்பர் 10, 1945-இல் லபுவானில் ஜப்பானிய இராணுவத்தின் 37-ஆவது பிரிவின் தளபதி பாபா மசாவோ (Lieutenant General Baba Masao) அதிகாரப்பூர்வமாகச் சரண் அடைந்தார். அத்துடன் வடக்கு போர்னியோவில் போர் முடிந்தது.[12][13]
சனவரி 1947-இல் பாபா மசாவோ, போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பப்புவா நியூ கினி; ரபாவுல் (Rabaul) நகருக்கு அழைத்து வரப்பட்டார். 2,200 ஆஸ்திரேலிய போர் கைதிகள் கொல்லப்பட்ட சண்டாக்கான் மரண அணிவகுப்புக்கு, பாபா மசாவோ தான் காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டது.[14][15]
அந்தத் துர்நிகழ்ச்சியின் போது கைதிகளின் பலவீனமான நிலையைப் பாபா மசாவோ அறிந்து இருந்தும், இரண்டாவது அணிவகுப்புக்கு நேரடியாக கட்டளை பிறப்பித்ததற்கான சான்றுகள் விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்டன. விசாரணை 28 மே 1947-இல் தொடங்கியது. எட்டு நாட்களுக்குப் பிறகு 5 சூன் 1947-இல் பாபா மசாவோவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 7 ஆகஸ்து 1947-இல் அவர் தூக்கிலிடப்பட்டார்.[16]
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் ஜெசல்டனை மீண்டும் நிர்வாகம் செய்வதற்கு வடக்கு போர்னியோவிற்குத் திரும்பி வந்தது. ஆனால், திவால் விளிம்பில் இருந்த ஜெசல்டனைப் புனரமைப்பு செய்வதற்கு பெரும் செலவுகள் ஏற்படும் என அறியப்பட்டது. நிதிச் சுமையின் காரணத்தினால் 18 சூலை 1946-இல் பிரித்தானிய முடியாட்சியிடம் வடக்கு போர்னியோவின் நிர்வாகக் கட்டுப்பாடு வழங்கப்பட்டது.[17]
புதிய பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம், போரினால் அழிக்கப்பட்ட சண்டக்கான் (Sandakan) நகருக்குப் பதிலாக ஜெசல்டன் நகரை வடக்கு போர்னியோவின் தலைநகரமாக மீண்டும் கட்டமைக்கத் தேர்ந்தெடுத்தது. வடக்கு போர்னியோவின் உள்கட்டமைப்பை மறுகட்டமைப்பு செய்வதற்காக, பிரித்தானிய அரசாங்கம், 1946-ஆம் ஆண்டு, £ 6,051,939 வழங்கியது.
1963-ஆம் ஆண்டு சரவாக், சிங்கப்பூர் மற்றும் மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) ஆகியவை இணைந்து மலேசியா கூட்டமைப்பு (Federation of Malaysia) எனும் ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் சபா எனும் பிரித்தானியக் குடியேற்ற நாடும் (Crown Colony of North Borneo) இணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜெசல்டன் நகரம், சபாவின் தலைநகரமாகவே இருந்தது.
22 டிசம்பர் 1967 அன்று, சபாவின் முதல்வர் முசுதபா அருண் (Mustapha Harun) என்பவரின் கீழ் இருந்த சபா மாநில சட்டமன்றம், ஜெசல்டன் நகரத்தை கோத்தா கினபாலு என மறுபெயரிடும் மசோதாவை நிறைவேற்றியது. 1967 டிசம்பர் 22-ஆம் தேதி, ஜெசல்டன் என்பது கோத்தா கினபாலு (Jesselton as Kota Kinabalu) என மாற்றம் கண்டது. 2000 பிப்ரவரி 2-ஆம் தேதி கோத்தா கினபாலு நகரம்; மாநகரம் எனும் நிலைக்கும் தகுதி உயர்த்தப்பட்டது.
கோத்தா கினபாலு மாநகரம், சபா மாநிலத்தின் தலைநகரமாக இருப்பதால், மாநிலத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மாநில அரசாங்கத்தின் இருக்கையாக இருக்கும் கோத்தா கினபாலு மாநகரத்தில் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் உள்ளன.
பெரும்பாலான மலேசிய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் கோத்தா கினபாலுவில் அமைந்துள்ளன. சபா மாநில சட்டமன்றம் (Sabah State Legislative Assembly) அருகிலுள்ள லிக்காசு விரிகுடாவில் (Likas Bay) அமைந்துள்ளது.
கோத்தா கினபாலு மாநகரத்திலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
கோத்தா கினபாலு மாநகரத்திலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் ஒன்பது மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
பின்வரும் புள்ளைவிவரங்கள், மலேசிய புள்ளியியல் துறையின் 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் (Department of Statistics Malaysia 2010 Census) அடிப்படையில் அமைந்துள்ளது.[18]
கோத்தா கினபாலுவில் உள்ள இனக்குழுக்கள், 2010 | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
சீனர் | 93,429 | 20.7% |
பஜாவ் | 72,931 | 16.13% |
கடசான் - டூசுன் | 69,993 | 15.5% |
வேறு (பூமிபுத்திரா) | 59,607 | 13.2% |
புரூணை மலாய் மக்கள் | 35,835 | 7.9% |
மூரூட் | 2,518 | 0.6% |
இந்தியர்கள் | 2,207 | 0.5% |
மற்றவர்கள் | 5,482 | 1.21% |
மலேசியர் அல்லாதவர் | 110,556 | 24.5% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.