From Wikipedia, the free encyclopedia
உலகம்பரவுநோய் அல்லது பெருந்தொற்று (pandemic) என்பது கொள்ளைநோய் ஒன்று தொற்றுநோயாக இருந்து, அந்த நோய்த்தொற்று விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய அளவில் மக்களைத் தாக்குவதாகும்[1]:55. இது உலகம் முழுமைக்கும்கூட பரவக்கூடும். அதாவது கண்டம், உலகம் போன்ற பெரும் பகுதியில் உள்ள மக்களைத் தாக்கும் கொள்ளை நோய் தொற்றைக் குறிக்கும்.
பெரியம்மை[2], காசநோய்[3][4][5] போன்ற நோய்கள் இவ்வாறு பரவிய நோய்களாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. எச்.ஐ.வி[6][7], பறவைக் காய்ச்சல்[8], எச்1.என்1 சளிக்காய்ச்சல்,[9]கொரானா போன்றன அண்மையில் பரவிய உலகம்பரவுநோய்கள் ஆகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணப்படி, "உலகப் பரவற் தொற்று" என்பதற்குப் பின்வரும் நிலைமைகள் தேவை.
பரந்த பகுதியில் இருப்பதாலோ, பெருமளவில் மக்கள் கொல்லப்படுவதாலோ மட்டும் ஒரு நோய் உலகம்பரவுநோய் ஆவதில்லை. இது ஒரு தொற்றுநோயாக இருத்தலும் வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமளவில் மக்கள் இறப்பதற்குக் காரணமாகும் புற்றுநோய் உலகம்பரவுநோய் அல்ல.
எச்.ஐ.வி முதன்முதலாக ஆப்பிரிக்காவில் தோன்றி ஹைட்டி தீவின் வழியாக 1966 மற்றும் 1972 ஆம் ஆண்டிற்கு இடையில் ஐக்கிய அமெரிக்காவிற்கு பரவியது.[10] எயிட்சு தற்போதைய நிலையில் பரவும் தன்மை நோயாகும். தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் இதன் தொற்று வீதம் அதிகளவாக 25 % அளவிற்கு உள்ளது. 2006 இல் தென் ஆப்பிரிக்காவில் கர்ப்பினி பெண்களில் 29.1% என்ற அளவில் உள்ளது. பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் மற்றும் குருதி வழித் தொற்று முன்னெச்சரிக்கை பயிற்சிகள் போன்ற பயனுள்ள தேசிய கல்வித் திட்டங்களுக்கான நிதியுதவிகள் பல ஆப்பிரிக்க நாடுகளில் எச்.ஐ.வி தொற்று விகிதங்களை சீராக குறைக்க உதவியது. எச்.ஐ.வி தொற்று விகிதங்கள் ஆசியாவிலும், அமெரிக்காவிலும் மீண்டும் உயரும் வாய்ப்புகள் உள்ளன. ஆப்பிரிக்காவில் எய்ட்சு நோய் தாக்குதாலால் இறப்பு எண்ணிக்கை 2025 ஆண்டு வாக்கில் 90-100 மில்லியன் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பானது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு உலகம்பரவு நோயாக அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபற்றிய சரியான விழிப்புணர்வின்மையால், இது தொடர்ந்து இடர்தரும் காரணியாகவே இருந்து வருகிறது[11][12]. இது கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் இத்தீவிர வைரசு தொற்றினால் இறந்துள்ளனர்[13] இந்த வைரசானது உலக மக்கள் தொகையின் 0.6% இனரில் தொற்றை ஏற்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது[13] 2005 ஆம் ஆண்டில் மட்டும் 2.4–3.3 மில்லியன் மக்கள் இறப்பு இந்நோயால் ஏற்பட்டதாகவும், அதில் 570,000 க்கு மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் அறியப்படுகிறது. இதில் மூன்றில் ஒருபகுதி பொருளாதார வீழ்ச்சி, வறுமை நிலை காரணமாக ஆப்பிரிக்காவில் sub-sahara, பகுதியில் நிகழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன[14] தற்போதைய நிலமையின்படி ஆப்பிரிக்காவில் 90 மில்லியன் மக்கள் இந்த வைரசு தாக்குதலுக்கு ஆட்படவிருப்பதாகவும், இதனால் கிட்டத்தட்ட 18 மில்லியன் அநாதைக் குழந்தைகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன [15].
காலரா அல்லது வாந்திபேதி 19 ஆம் நூற்றாண்டில் மிக அதிகமாக பரவிய நோயாகும் இது பல மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது.[16]
1854 முதல் 55 ஆம் ஆண்டு வாக்கில் எசுப்பானியத்தில் மட்டும் கலாரா நோயால் 2,36,000 மக்கள் இறந்தனர். மெக்சிக்கோவில் 200,000 மக்கள் இந்நோயால் இறந்தனர்.
பெரியம்மை (Smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது.[23] இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். V. minor கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர். 1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய் பீடிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் அண்டு கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.
தட்டம்மை அல்லது சின்னமுத்து, மணல்வாரி அம்மை, (Measles,morbilli ) என்றெல்லாம் அறியப்படும் இந்த நோய் பாராமைக்சோவைரசு குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி தீநுண்மத்தால் ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும். மோர்பி தீநுண்மங்கள் உறையுடைய, ஓரிழை எதிர்-உணர்வு ரைபோநியூக்ளிக் அமில தீநுண்மங்களாகும். நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூக்கொழுகல், சிவந்த கண்கள் ஏற்படுவதுடன் பொதுவான நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும்.
தட்டம்மை நோய்த்தொற்று உள்ளவரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் நீருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொற்றும்போது இந்நோய் பரவுகிறது. தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும் நோய் வடிந்த பிறகு நான்கு நாட்கள் வரையும் நோயுற்றவரிடமிருந்த பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது.[24] விரைவாகப் பரவக்கூடிய இந்த தீநுண்மம் நோயுற்றவருடன் வாழும் இடத்தை பகிரும் 90% நபர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. தட்டம்மை தொற்றியவருக்கு முதல் தொடர்பிலிருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அறிகுறியில்லா அடைவுக்காலமாக இருக்கிறது.[25]
சாதாரண தடுமனைப் போன்றே காசநோயும் காற்றினால் தொற்றுதலை ஏற்படுத்தி, பரவுகின்றது. நுரையீரல் காசநோய்த் தொற்றுக்குட்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது, பேசும்போது அல்லது துப்பும்போது வெளியேற்றும் 05-5 µm விட்டமுள்ள காற்றுத் துளிகள் காசநோய்த் தொற்றை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஒரு தனியான தும்மலின்போது நோயை உருவாக்கும் திறன்கொண்ட 40,000 துளிகள்வரை வெளியேறும் வாய்ப்பு உள்ளது[26]. தொற்றை ஏற்படுத்த தேவையான நோய்க்காரணியின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தனி காற்றுத் துளியே வேறு ஒருவரில் ஒரு புதிய தொற்றை ஏற்படுத்த முடியும்[27]
நோயுள்ள ஒருவருடன் தொடர்ந்த, அடிக்கடியான, அதிகமான தொடர்பில் இருப்பவருக்கு இந்நோய் உருவாவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். நோயுள்ள, ஆனால் சிகிச்சைக்குட்படாத நபர் ஒருவர், வருடமொன்றுக்கு மேலும் 10-15 பேர்வரை தொற்றுக்குட்பட்த்துவதற்கான சாத்தியம் உள்ளது[4]. காசநோய் அதிகமிருக்கும் இடத்தில் வசிப்பவர்கள், சரியான முறையில் தொற்றுநீக்கம் செய்யப்படாத ஊசிகளை போட்டுக் கொள்பவர்கள், தொற்றுக்குட்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் குழந்தைகள், மனித உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் தன்மை கொண்ட மருந்துகளை உட்கொள்பவர்கள், எய்ட்சு நோய்த் தாக்கத்திற்குட்பட்ட நோயாளிகள், மற்றும் காசநோய் நோயாளிகளுக்கு உதவும், மருத்துவ உதவிகளைச் செய்யும் பணியாளர்கள் என்போர் இந்நோய்த் தாக்கத்திற்குட்படுவதற்கான நிகழ்தகவு மிகவும் அதிகமாக இருக்கும்[28]
நோய்க்காரணியினால் தொற்றுக்குட்பட்ட பலரில், நோயானது வெளித்தெரியாமல் ஒரு மறைநிலையில் (Latent TB) காணப்படும். இப்படி நோயானது மறைநிலையில் காணப்படும் ஒருவரால் புதிய தொற்று ஏற்படமாட்டாது. நோயானது செயல்நிலையிலுள்ள (active TB) ஒருவரிலிருந்து மட்டுமே நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியமுள்ளது. நோய்த்தொற்று ஏற்படுவதற்கான நிகழ்தகவானது நோய்க்காவியாக (carrier) செயற்படும் ஒருவரினால் வெளியேற்றப்படும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல நீர்த் துளிகளின் எண்ணிக்கை, அவர் இருக்கும் இடத்தில் காற்றோட்டத்தின் தன்மை, நோய்க்காரணியை எதிர்கொள்ளும் நேரத்தின் அளவு, M.tuberculosis வகையின் நோயேற்படுத்தும் தன்மையின் அளவு (virulence) போன்ற காரணிகளில் தங்கியிருக்கும்
புதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி நோயின் செயற்படு நிலையில் உள்ள ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு அவருக்கு தொற்று ஏற்பட்ட நேரத்திலிருந்து 3- 4 கிழமைகள் எடுக்கும்[29]. காசநோய்த் தொற்றுள்ள இறைச்சியை உண்பதனாலும் இந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு[30]. Mycobacterium bovis ஆனது கால்நடைகளில் காசநோயை உருவாக்கும் திறனுள்ளது[31].
மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.[32] அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள். இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர்.[33] மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும்[34] பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.
தொழு நோய் (ஆங்கிலம்-Leprosy or Hansen's disease (HD)) என்பது, மைக்கோபாக்டீரியம் இலெப்ரே[35] என்னும் நோய்க்காரணி/நோயுயிரியால் வரும், உயிர்க்கொல்லி நோயாகும். இதன் வரலாறு மிகவும் பிந்தையதாகும். இந்நோயைப் பற்றி, பல வரலாற்று நூல்களும், கிறித்துவ மதநூலான விவிலியத்திலும் இதன் குறிப்பு உள்ளது. இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை, முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதற்கு ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்த்து போலக்காட்சித் தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயை குட்டம், குச்டநோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.
மஞ்சள் காய்ச்சல் அல்லது மஞ்சட் காய்ச்சல் (Yellow fever), தீநுண்மத்தால் ஏற்படும் ஒரு கடிய குருதிப்போக்குக் காய்ச்சல் ஆகும்.[1] மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் சார்ந்த ஆர்.என்.ஏ வைரசு இக்காய்ச்சலை உண்டாக்கும் தீநுண்மம் ஆகும். இந்நோய் ஆபிரிக்காவில் முதன்முதல் தோன்றியது என நம்பப்படுகின்றது. தற்பொழுது இந்நோய் அயனமண்டல அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது, ஆனால் ஆசியாவில் தோன்றுவதில்லை.[2]
டெங்கு காய்ச்சல் போன்று மஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் இரு காவி வட்டத்தைக் கொண்டுள்ளது: வனப்பகுதி, மக்கள் வசிக்கும் பகுதி. மஞ்சட் காய்ச்சல் வைரசை கொசுக்கள் காவுகின்றன, குறிப்பாக ஏடிசு எகிப்தி எனும் கொசு இனத்தின் பெண் கொசுவால், அது கடிக்கும் போது உமிழ்நீரை மனித உடலில் செலுத்துகையில் பரப்பப்படுகிறது. வனப்பகுதியில் வேறு கொசு இனங்கள் காவிகளாகவும் குரங்குகள் வழங்கிகளாகவும் உள்ளன, மக்கள் வசிக்கும் பகுதியில் முதன்மைக் காவியாக ஏடிசு எகிப்திக் கொசுவும் வழங்கியாக மனிதரும் உள்ளனர்.[3]
இக்காய்ச்சலில் உடல்வெப்பநிலை மிகையாகுவதுடன் குமட்டுதல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்ற அறிகுறிகளும் தென்படும்.[3] சில நோயாளிகளில் இதன் விளைவு பாரதூரமாக இருக்கும், அவர்களில் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் இழைய இறப்பு ஏற்படும், இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும், இதுவே இந்நோய்க்குரிய பெயர்க்காரணம். இந்நோயில் கடுமையாக குருதிப்போக்கு ஏற்படுவதால் குருதிப்போக்குக் காய்ச்சல் வகைக்குள் இந்நோய் அடங்குகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.