கயிலை மலை
From Wikipedia, the free encyclopedia
கயிலாய மலை அல்லது கைலாயம் (Mount Kailash) என்பது இமயமலையில் உள்ள கயிலை மலைதொடரில் உள்ள ஒரு பர்வதம் ஆகும். 6,638 மீ. உயரம் கொண்ட இந்த பர்வதம் சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ளது.
கயிலாய மலை | |
---|---|
கயிலாய மலையின் வடபகுதி | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,638[1][2] m (21,778 அடி) |
புடைப்பு | 1,319 m (4,327 அடி) |
ஆள்கூறு | 31°4′0″N 81°18′45″E |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் |
|
புவியியல் | |
அமைவிடம் | திபெத்து |
நாடு | சீனா |
மூலத் தொடர் | கங்திசே தொடர் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | ஏறபடவில்லை (தடைசெய்யப்பட்டது) |
இதனருகே மானசரோவர் நன்னீர் ஏரியும், இராட்சதலம் எனும் உப்பு நீர் ஏரியும் உள்ளன. சிந்து, சத்லஜ், பிரம்மபுத்திரா மற்றும் கர்னாலி ஆகிய நான்கு நதிகளின் ஆதாரங்கள் இப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளன. கயிலாய மலையானது இந்துக்கள், பௌத்தர்கள், போன் மக்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.
இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பிற நாடுகளில் இருந்து பக்தர்கள் கயிலாய மலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இங்கு வரும் யாத்திரிகர்கள் மானசரோவர் ஏரியில் புனித நீராடிவிட்டு பின்னர் கயிலாய பர்வதத்தின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வருவதை புனித கடமையாகக் கருதுகிறார்கள்.
சொற்பிறப்பியல்
கயிலை மலையானது சமசுகிருதத்தில் கைலாசா என்றழைக்கப்படுகிறது.[3][4] இந்தப் பெயர் "படிகம்" எனப் பொருள் தரும் கைலாசா என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.[5][6] இந்த மலையின் திபெத்திய பெயர் கேங் ரின்போச்சே என்பதாகும். கேங் அல்லது காங் என்பது பனிபடர்ந்த மலை என்பதற்கான திபெத்திய வார்த்தையாகும் மற்றும் ரின்போச்சே என்பது "ஒரு மரியாதைக்குரிய பொருள்" அல்லது "விலைமதிப்பற்ற ஒன்று" எனப் பொருள் படும். எனவே இந்த இணைந்த சொல்லை "பனிகளின் விலைமதிப்பற்ற நகை" என்று மொழிபெயர்க்கலாம். இந்த மலையின் மற்றொரு உள்ளூர் பெயர் டிசே மலை என்பதாகும். இது சாங்-சூங் மொழியில் உள்ள "நீர் சிகரம்" என்று பொருள் தரும் டி ட்சே என்பதிலிருந்து உருவானது.[7][8]
புவியியல் மற்றும் நிலப்பரப்பு

கயிலாய மலை இமயமலையில் உள்ள கயிலை மலைதொடரில் அமைந்துள்ளது.[9] 6,638 மீ. உயரம் கொண்ட இந்த பர்வதம் சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ளது.[10] இப்பகுதியானது சீனா, இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான எல்லையின் வடக்கே அமைந்துள்ளது.[11]
இதனருகே மானசரோவர் நன்னீர் ஏரியும், இராட்சதலம் எனும் உப்பு நீர் ஏரியும் உள்ளன.[12] சிந்து, சத்லஜ், பிரம்மபுத்திரா மற்றும் கர்னாலி ஆகிய நான்கு நதிகளின் ஆதாரங்கள் இப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளன.[10]
புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றம் திபெத்திய பீடபூமியில் பல மடங்கு வேகமாக நடப்பதாக விவரிக்கப்படுகிறது.[13] கயிலாய மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீப ஆண்டுகளில் குளிர்காலங்களில் முன்பை காட்டிலும் பனி குறைவாக உள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.[14] இப்பகுதியில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் படி, பனிப்பாறைகள் மிகுந்த அளவில் உருகி வருவதாக தெரிகின்றது.[15] காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான நிலையான வழிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளில் சீன, இந்திய மற்றும் நேபாள அரசுகள் ஈடுபட்டுள்ளன.[16][17]
மலையேற்றம்
இதுவரை கயிலாய மலையை யாரும் ஏறியது இல்லை.[18] இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது.[19]

1926 ஆம் ஆண்டில், அக் இரட்லெட்சு கயிலாய மலையின் வடக்கு முகத்தை ஆய்வு செய்தார். இந்த பர்வதம் மிகவும் உயரமாக இருப்பதாக மதிப்பிட்டு, முற்றிலும் ஏறமுடியாது என்று முடிவு செய்தார்.[19] இரட்லெட்சுடன் சென்ற கர்னல் வில்சன் கயிலாய மலையின் மறுபக்கத்தில் செட்டன் என்ற ஒரு ஷெர்பாவுடன் இணைத்து மலையின் தென் பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தார். தென்கிழக்கு முகடு வழியாக உச்சியை அடைய சாத்தியமுள்ளது என்று செட்டன் தன்னிடம் கூறியதாக வில்சன் கூறினார்.[19] வில்சன் கயிலாய மலையில் ஏற முயற்சித்தாலும் கடும் பனிப்பொழிவின் காரணமாக அந்த முயற்சியைக் கைவிட்டதாக விளக்கினார்.[20]
1936 ஆம் ஆண்டில், எர்பர்ட் திச்சி கயிலாய மலையை ஏற நினைத்தார். அவர் உள்ளூர் மக்களிடம் இதை ஏற முடியுமா என்று கேட்டபோது, ஒரு உள்ளூர் திபெத்திய மதத் தலைவர் பின்வருமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்: "பாவம் செய்யாத ஒரு மனிதனால் மட்டுமே கயிலாய மலையில் ஏற முடியும். அப்படி இருக்கும் ஒருவன் உண்மையில் பனிக்கட்டி பாறைகளை தாண்ட வேண்டியதில்லை, மாறாக தன்னை ஒரு பறவையாக மாற்றிக்கொண்டு சிகரத்திற்குப் பறக்கலாம்."[19] இத்தாலிய மலையேற்ற நிபுணர் ரெய்ன்கோல்ட் மெசுனருக்கு 1980களின் நடுப்பகுதியில் கயிலாய மலையில் ஏற சீன அரசாங்கம் வாய்ப்பளித்தது. ஆனால் அவர், "நாம் இந்த மலையின் உச்சியை அடைந்தால், மக்களின் உள்ளத்தில் உள்ள ஒரு நம்பிக்கையை அழிப்பதற்குச் சமமாகும். எனவே ஏறுவதற்கு பல மலைகள் இருக்கின்றன, அவற்றில் ஏற முயற்சிக்கலாம்" என்று கூறி அதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.[18][21] 2001 ஆம் ஆண்டில், சீன அரசாங்கம் எசுப்பானிய நாட்டை சேர்ந்த ஒரு குழுவுக்கு கயிலாய மலையில் ஏற அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளிவந்தன. எதிர்ப்புக்கு பிறகு, சீன அதிகாரிகள் இந்த அறிக்கையை மறுத்து, கயிலாய மலையில் ஏறும் நடவடிக்கைகள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறினர்.[22]
சமயவியல்
கயிலாய மலையானது இந்துக்கள், பௌத்தர்கள், போன் மக்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.[23][24][25]
இந்து சமயம்
இந்து சமயத்தில் கயிலாய மலையானது பாரம்பரியமாக சிவபெருமானின் இருப்பிடமாக அறியப்படுகின்றது. சிவபெருமான் தனது துணைவி பார்வதி மற்றும் இவர்களது பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகர் ஆகியோருடன் அங்கு வசிப்பதாக நம்பப்படுகின்றது.[26]இந்துக்கள் கயிலாயத்தை மேரு மலை என்று நம்புகிறார்கள். இது தேவர்கள் வசிக்கும் சொர்கத்திற்கு செல்லும் வழி என்று கருதப்படுகிறது.[27][28]
இந்து இதிகாசமான இராமாயணத்தின் படி, இராவணன் கயிலாய மலையை வேரோடு பிடுங்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமுற்ற சிவபெருமான் தனது வலது பெருவிரலை மலையின் மீது அழுத்தி ராவணனை நசுக்கியதாகக் கூறப்படுகிறது.[29] மகாபாரதத்தின் படி, பாண்டவர்கள் தங்கள் மனைவி திரௌபதியுடன் சொர்க்கத்தை அடைவதற்கான ஒரு முயற்சியாக கயிலாய மலையின் உச்சியை நோக்கிப் பயணித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் தருமர் மட்டுமே சொர்கத்தை சென்றடைய முடிந்ததாக கூறப்படுகிறது.[30][31]
விஷ்ணு புராணம் கயிலாய மலை தாமரை இதழ்களை போல் உள்ள ஆறு மலைத்தொடர்களின் மையத்தில் அமைந்துள்ளது என்றும், இந்த மலையின் நான்கு முகங்களும் தங்கம் மற்றும் விலைமதிப்பில்லாத இரத்தின கற்களால் ஆனது என்றும் கூறுகிறது.[27] இங்கு சிவபெருமான் ஓர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருப்பதைப் பற்றிக் கூறுகிறது.[32]
கயிலாய மலை தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற இத்தலம், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். திருஞான சம்பந்தர் தென் கயிலாயம் எனப்படும் திருக்காளாத்தியைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் இத்தலம் மீது திருக்கயிலாய ஞான உலா பாடியுள்ளார்.
சமணம்
அசுடபாதம் என்ற சமண நூலின் படி, முதல் சமண தீர்த்தங்கரரான ரிசபநாதர் கயிலாய மலையில் மோட்சம் (விடுதலை) அடைந்தார்.[33] சமண பாரம்பரியத்தில், ரிசபநாதர் நிர்வாண நிலையை அடைந்த பிறகு, அவரது மகனான பேரரசர் பரதன் பல சன்னதிகளை இப்பகுதியில் கட்டியதாக நம்பப்படுகிறது.[34] சமண மரபுகளின்படி, 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த சிறிது நேரத்திலேயே இந்திரனால் மேரு மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு விலையுயர்ந்த பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.[35][36]
பௌத்தம்
பௌத்த நூல்களின்படி, கயிலாய மலை புராணங்களில் வரும் மேரு மலை என்று அறியப்படுகிறது. எனவே கயிலாய மலை சில பௌத்த மரபுகளுக்கு ஒரு முக்கிய யாத்திரை தலமாகும்.[37] இப்பகுதியில் உள்ள பல தளங்கள் திபெத்தைச் சுற்றியுள்ள தலங்களில் 7-8 ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தை நிறுவிய பத்மசம்பவருடன் தொடர்புடையவை.[19]
வஜ்ராயனம் பௌத்தத் துறவி மிலரேபா (கி.பி.1052-1135) திபெத்தின் போன் சமயத்தை நிறுவிய நரோ போன்சுங்கிற்கு சவால் விடுவதற்காக திபெத்திற்கு வந்ததாக பௌத்தர்கள் நம்புகின்றனர். இருவரில் கயிலாய மலையின் சிகரத்தை யார் முதலில் அடைகிறார்களோ அவரே சவாலில் வெற்றி பெறுவார் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. நரோ ஒரு மாய உடுக்கையின் மேல் ஏறி சிகரத்தை நோக்கி விரைந்த வேலையில், மிலரேபா அமைதியான தியான நிலையை அடைந்து சூரிய ஒளிக்கதிர்களின் மீது சவாரி செய்து உச்சியை அடைந்தார் எனக் கூறப்படுகின்றது.[19]
கயிலாய யாத்திரை
பல்வேறு சமயங்களுக்கு புனிதமான தலமாக கருதப்படுவதால், இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர் கயிலாய மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். 1951 ஆம் ஆண்டிலிருந்து சீன அரசால் கயிலாய மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சீன-இந்திய உடன்படிக்கையின்படி இந்தியாவில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரைக்குச் செல்ல உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு நடந்த திபெத்திய எழுச்சி மற்றும் 1962 ஆம் ஆண்டு நடந்த சீன-இந்திய போர் ஆகியவற்றின் விளைவாக கயிலாய யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.[9] ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, 1981 ஆம் ஆண்டில் இந்திய மற்றும் சீன அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியாவில் இருந்து புனித யாத்திரை செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட்டது.[38] கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டு முதல் புனித யாத்திரை மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டது.[39]

பொதுவாக இந்த யாத்திரையில் மானசரோவர் ஏரியை நோக்கி மலையேறுதல் மற்றும் கயிலாய மலையை சுற்றி வருவது ஆகியவை அடங்கும். கயிலாய மலையைச் சுற்றியுள்ள பாதை ஏறத்தாழ 53 கிலோ மீட்டர் நீளமானது.[38] யாத்ரீகர்கள் கயிலாய மலையை கால் நடையாக சுற்றி வருவது ஆன்மீக ரீதியில் நன்மையளிக்கும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. இது புண்ணிய சேகரிப்பு, பாவங்களிலிருந்து சுத்தப்படுத்துதல் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துதல் போன்ற நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்களால் இந்த மலை கடிகார திசையில் சுற்றி வரப்படுகின்றது. அதே நேரத்தில் போன் பௌத்தர்கள் எதிர் திசையில் மலையை சுற்றிவருகின்றனர்.[40] இந்த கிரி வலமானது பொதுவாக ஏறத்தாழ 4670 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டார்ச்சேன் எனும் இடத்தில் தொடங்கி முடிவடைகிறது.[41] இந்த புனித யாத்திரைக்கான வழித்தடம் 5650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ட்ரால்மா கணவாய் வழியாக செல்கிறது.[42]
கயிலாய மலையை கால்நடையாகவோ அல்லது ஒரு மட்டக்குதிரை அல்லது யாக்கின் மீது சவாரி செய்தோ சுற்றி வரலாம். இந்த கிரி வலத்திற்கு சராசரியாக மூன்று நாட்கள் தேவைப்படுகிறது.[42] திபெத்திய பௌத்தத்தில் "கோரா" என அழைக்கப்படும் தீவிரமான கிரி வள முறையானது நடைமுறையில் உள்ளது. இது மலையை அங்கபிரதட்சிணம் போல் சுற்றி வருவதாகும். இதில் பக்தர்கள் கீழே குனிந்து, மண்டியிட்டு, முழுநீளமாக நமசுகரித்து, தன் விரல்களால் ஒரு அடையாளத்தைச் செய்து, பின்னர் எழுந்து, பிரார்த்தனை செய்கிறார். பின்னர் இந்த செயல்முறையை மீண்டும் செய்வதற்கு முன் தனது விரல்களால் செய்யப்பட்ட குறிக்கு கைகள் மற்றும் முழங்கால்களில் முன்னோக்கி ஊர்ந்து செல்கிறார். இந்த முறையில் யாத்திரையை முடிக்க சராசரியாக மூன்று வாரங்கள் ஆகும்.[43][44] இமயமலையின் தொலைதூரப் பகுதியில் கயிலாய மலை அமைந்திருப்பதால், யாத்திரையின் போது உதவுவதற்கு மிகக் குறைவான வசதிகளே உள்ளன. மலையைப் போற்றும் பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் காரணங்களுக்காக, மலையின் சரிவுகளில் கால் வைப்பது அல்லது ஏற முயற்சிப்பது சட்ட ரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.[19]

1981 இல் யாத்திரை மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, வருடாந்திர யாத்திரைக்கு செல்லும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.[45] 2020 ஆம் ஆண்டு மூடப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து பல ஆயிரம் யாத்ரீகர்கள் இந்த யாத்திரைக்குச் சென்றுகொண்டிருந்தனர்.[46] 2015 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் இருந்து செல்ல ஆர்வமுள்ள பக்தர்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.[47] இந்த யாத்திரை இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, சூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் அனுமதிக்கப்படுகிறது.[48] இந்தியாவிலிருந்து செல்லும் யாத்ரீகர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக் கணவாய் அல்லது சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதூ லா கணவாய் வழியாக சீன நாட்டு எல்லைக்குள் சென்று, பின்னர் கயிலாய மலையை நோக்கி பயணிக்கின்றனர்.[49][50][51] 2015 ஆம் ஆண்டு முதல், நேபாளத்தில் இருந்து புனித யாத்திரை பொதுவாக வடமேற்கு நேபாளத்தில் உள்ள ஹம்லா மாவட்டத்தின் வழியாக மேற்கொள்ளப்படுகின்றது.[43] நேபாளத்தில் உள்ள லிமி பள்ளத்தாக்கிற்கு மேலே உள்ள லாப்சா லா கணவாயில் இருந்து கயிலாய மலையை காண இயலும்.[52][53] சீனாவில், பொதுவாக மானசரோவர் ஏரிக்குப் பயணம் செய்யும் யாத்திரை திபெத்திய தலைநகரான லாசாவிலிருந்து தொடங்குகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.