இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.[1][2][3]
நிறுத்தக்குறிகளுள் ஒன்று கேள்விக்குறி ஆகும். இதை வினாக்குறி என்றும் கூறுவர்.
ஒரு பொருள் குறித்து மேலும் அறியவோ ஐயம், வியப்பு போன்ற உணர்வுகளைத் தயக்கத்தோடு வெளிப்படுத்தவோ கேள்விக்குறி பயன்படுகிறது.
கேள்விக்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
1) வினா வாக்கியத்தின் முடிவில் கேள்விக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
மதுரைக்குப் போய் வந்துவிட்டீர்களா?
2) ஐயம், நம்பிக்கையின்மை தொனிக்கும் வாக்கிய முடிவில் கேள்விக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
இன்னும் இரு நாட்களில் பருவமழை பெய்யும்?
கடையில் பற்றிய தீ அருகிலிருந்த வீட்டிலும் பரவியது. எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். படுக்கையாய்க் கிடந்த கண்ணன் கதி?
3) ஒரு செய்தி உறுதியாகத் தெரியாத நிலையில் ஐயப்பாடு எழுப்ப கேள்விக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
கலிங்கத்துப் போர் (கி.மு. 265?) அசோகரின் வாழ்க்கையை வேரோடு மாற்றியமைத்தது.
4) வியப்போடு ஒன்றை வினவும்போது கேள்விக்குறியையும் உணர்ச்சிக்குறியையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு:
உங்களால் இவ்வளவு சீக்கிரம் எப்படி வர முடிந்தது?!
1) அடுக்கி வரும் வினாக்களுக்கு இடையில் கேள்விக்குறி இடுவதில்லை. இறுதி வினாவில் மட்டும் இட்டால் போதும்.