கேரளத்திலுள்ள அய்யப்பன் கோயில் From Wikipedia, the free encyclopedia
குளத்துப்புழை ஐயப்பன் கோவில்[1] (அ) குளத்துப்புழா ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இங்கு ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் பால சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவிற்கே உள்ளது. இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இக்கோவில் அமைந்துள்ள குளத்துப்புழா எனும் சிற்றூர், செங்கோட்டை-திருவனந்தபுரம் சாலையில்[2] செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - கொல்லம் இருப்புப் பாதை வழியாகவும் இக்கோவிலை அடையலாம். மேலும் இவ்வூர் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
குளத்துப்புழா கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். நடுவில் கருவறையும் சுற்றி மரத்தாலான கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம். இங்கு ஐயப்பன் பாலகனாகக் கருவறையுள் காட்சி தருகிறார்.
பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.
கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும் அவருடைய ஆட்களும் காட்டில் கல்லடையாற்றின் கரையில் ஒருமுறை தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர். உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது என்பது மரபுவழிச் செய்தி.
சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன.
கோவிலை ஒட்டி கல்லடையாறு ஓடுகிறது. குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி அவரைத் திருமணம் செய்ய விழைய ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம்.
மச்சக் கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக ஒரு நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இக்கோவிலில் ஐயப்பன் பாலகனாக அமைந்துள்ளதால், சிறுவர்களின் கல்விக்கு உகந்த இடமான இங்கு விஜய தசமி மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் இங்கு நடைபெறும் வித்யாரம்பம் சிறப்பானது. ஏப்ரல்/மே மாதத்தில் நடைபெறும் விஷு மகோத்சவம் இங்கு நடைபெறும் முக்கியமான திருவிழா ஆகும்[2]. பரவலாக அறியப்பட்ட ஐயப்பனின் கோவில்களில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம்.திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள குறிப்பன்குளம் சிற்றூரில் குளத்து புழை தர்ம சாஸ்தா கோவில் மற்றும் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள குளத்தூர் ஐயன் கோவில் இந்தக் கோவிலில் இருந்து பிடிமண் மற்றும் நீர் எடுத்துவந்து கட்டப்பட்டது.இன்றைக்கும் இந்தக் கோவில் திருவிழாவின் போது குளத்துபுழா சென்று நீர் எடுத்து திரும்புவது வழக்கம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.