காவ்ரீலோ பிரின்சிப்

From Wikipedia, the free encyclopedia

காவ்ரீலோ பிரின்சிப்

காவ்ரீலோ பிரின்சிப் (Gavrilo Princip) (செர்பிய மொழி: Гаврило Принцип; (1894-07-25)25 சூலை 1894 [1](1918-04-28)28 ஏப்ரல் 1918) ஓர் போசுனிய செர்பியர். இளம் போசுனியா எனப் பொருள்படும் இம்லாடா போசுனியா என்ற யூகோசுலாவிய தேசிய இயக்கத்தில் உறுப்பினர்.[2] சாரயேவோவில் 28 சூன், 1914ஆம் ஆண்டு ஆத்திரிய நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவி சோபியும் காரில் சென்ற போது தமது கூட்டாளி சுடத்தவறுகையில் பிரின்சிப் சுட்டுக் கொன்றார்.[3] பிரின்சிப்பும் அவன் கூட்டாளியும் கைது செய்யப்பட்டபோது இச்சதியில் பல செர்பிய இராணுவ அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டு ஆஸ்திரிய-அங்கேரி இராச்சியம் சூலை இறுதி எச்சரிக்கை எனப்படும் எதிர்ப்பை வெளியிட்டது.[4] இதனைத் தொடர்ந்தே முதல் உலகப் போருக்கான நிகழ்வுகள் ஏற்படலாயின.[5]

விரைவான உண்மைகள் காவ்ரீலோ பிரின்சிப், பிறப்பு ...
காவ்ரீலோ பிரின்சிப்
Thumb
டெரெசின் சிறையில் காவ்ரீலோ பிரின்சிப்
பிறப்பு(1894-07-25)25 சூலை 1894
ஓப்லயாய், போசுனியா எர்சகோவினா (1878-1918), ஆஸ்திரியா-அங்கேரி
இறப்பு28 ஏப்ரல் 1918(1918-04-28) (அகவை 23)
டெரெசின், பொஃகீமியா, ஆஸ்திரியா-அங்கேரி
தேசியம்யூகோசுலாவியர்
இனம்செர்பியர்
மூடு

குற்ற விசாரணையின்போது பிரின்செப் "நான் யூகோசுலாவிய தேசியவாதி, யூகோசுலாவியர்களை ஒருங்கிணைத்தலே என் நோக்கம்; எந்தவிதமான அரசாக அமைந்தாலும் எனக்குக் கவலையில்லை, ஆனால் ஆத்திரியாவிலிருந்து விடுதலை பெற வேண்டும்" என்று முழக்கமிட்டார்.[6]

இளமைக் காலம்

காவ்ரீலோ பிரின்சிப் அப்போது சட்டப்படி உதுமானியப் பேரரசின் அங்கமாக இருந்த பொசாங்கோ கிரகோவோவில் ஓப்லயாய் என்ற கண்காணா சிற்றூரில் பிறந்தார். ஆனால் இந்த மாநிலம் 1878ஆம் ஆண்டிலிருந்தே ஆத்திரிய-அங்கேரியால் ஆக்கிரமிக்கப்பட்டு நடைமுறைப்படி அதன் கூட்டாட்சி மாநிலமாக ஆளப்பட்டு வந்தது. பிரின்சிப்பின் தந்தை, பேட்டர், அஞ்சல்துறையில் பணி புரிந்து வந்தார். இவருக்கும் மனைவி மாரியாவிற்கும் ஒன்பது பிள்ளைகள்; இவர்களில் அறுவர் பிறக்கையிலேயே இறந்தனர். பிரின்சிப்பை கவனிக்க இயலாத பெற்றோர் அவரை பொசுனியா எர்செகோவினாவின் தலைநகரான சாரயேவோவிலுள்ள அண்ணன் வீட்டிற்கு அனுப்பினர்.

அக்டோபர் 6, 1908 இல் பொசுனியா-எர்செகோவினா, 1878இல் ஏற்பட்ட பெர்லின் உடன்பாட்டிற்கு எதிராக, ஆஸ்த்திரோ-அங்கேரிய பேரரசின் அங்கமாக மன்னர் பிரான்சு யோசஃப்பால் அறிவிக்கப்பட்டது. இது செர்பியர்களிடையேயும் தெற்கு ஐரோப்பாவிலிருந்த பிற இசுலாவிய மக்களிடையேயும் எதிர்ப்பை உண்டாக்கியது; உருசிய சார் மன்னரும் இதனை எதிர்த்தார்.

இதற்கு எதிராக சாரயோவோவில் பெப்ரவரி 1912இல் நடந்த எதிர்ப்பு போராட்டங்களில் பிரின்சிப் கலந்து கொண்டார். இதனால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை யடுத்து செர்பியத் தலைநகரான பெல்கிறேட்டிற்கு சென்றார். 1912 - 1913 காலத்தில் பெல்கிறேட்டில் இருந்தபோது பின்னாளில் புகழ்பெற்ற கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் விளங்கிய மோம்சிலோ நஸ்டாசியெவிச்சுடன் மட்டுமே நட்பு கொண்டிருந்தார்.

1912இல் பல செர்பியர்கள் முதலாம் பால்கன் போருக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ஒற்றுமை அல்லது சாவு (Ujedinjenje ili Smrt)என்ற கருப்புக் கை இரகசிய இயக்கத்தின் செர்பிய கரந்தடிப் படையான கோமைட்டில் சேர பிரின்சிப் திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரின்சிப்பை அவரது சிறு உருவத்தைக் காரணமாக்கி கோமைட் சேர்த்துக் கொள்ளவில்லை. தெற்கு செர்பியாவில் பிரோகுப்ல்யே என்றவிடத்தில் அதன் தலைவருடன் நேர்முகம் வேண்டினார். ஆனால் அவரும் பிரின்சிப்பை ஏற்கவில்லை. இந்த ஏமாற்றமே பின்னாளில் செயற்கரிய செயல் செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு தான் எவ்விதத்திலும் தாழ்ந்தவனில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்ற வேட்கையை உண்டாக்கியதாக விளாடிமிர் டெட்யெர் என்பார் கூறுகிறார்.

இளவரசர் பிரான்சு பெர்டினண்டு கொலை

Thumb
கொலை செய்யப்பட்ட வழியைக் காட்டும் வரைபடம்.
Thumb
இலத்தீன் பாலம்
Thumb
கொலையை அடுத்து பிரின்சிப் கைது செய்யப்படுதல்.

சூன் 28, 1914இல், காவ்ரீலோ பிரின்சிப் சாரயோவோயில் நடந்த ஆத்திரிய ஆர்ச்டியூக் (இளவரசர்) கொலையில் பங்கேற்றார். ஆத்திரிய மாநிலமான பொசுனியா எர்செகோவினா மாநிலத்தின் ஆளுநர் தளபதி ஆசுகர் போடியோரெக் ஆத்திரிய இளவரசர் பிரான்சு பெர்டினண்டையும் அவரது மனைவி, ஹோகென்பெர்க் சீமாட்டி சோபியாவையும் மருத்துவமனை ஒன்றினைத் திறக்க அழைத்திருந்தார். 1911இல் இவரது மாமன் பேரரசர் பிரான்சு யாசஃப் வருகை தந்தபோது அவர் மீது கறுப்புக்கை இயக்கத்தினர் நடத்திய கொலை முயற்சி தோல்வியடைந்த நிலையில் இளவரசரின் வருகை ஆபத்தானது என்பது அறியப்பட்டிருந்தது.[7]

ஞாயிறு காலை 10  மணிக்கு முன்னதாக, தொடர்வண்டி மூலமாக அரசத் தம்பதியினர் சாரயேவோவை வந்தடைந்தனர். முதல் தானுந்தில் நகரத் தந்தை பெகிம் கர்சிச்சும் நகரக் காவல்துறை ஆணையர் கெர்டேயும் இருந்தனர். இரண்டாவது தானுந்தில் அரசத் தம்பதிகளுடன் ஆசுகர் போடியோரெக்கும் துணைத் தளபதி பிரான்சு வோன் அர்ராச்சும் இருந்தனர். பொதுமக்கள் சிறப்பு விருந்தினர்களை காணும் வகையில் தானுந்தின் மேற்பகுதி மடிக்கப்பட்டிருந்தது.

தானுந்து சென்ற வழியில் ஆறு சூழ்ச்சியாளர்கள் இடைவெளி விட்டு விட்டு நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் பிரான்சு பெர்டினண்டு அவர்களருகில் வரும்போது கொலை செய்யுமாறு திட்டமிட்டிருந்தனர். அரசத் தானுந்தை முதலில் கண்ட சதியாளர் முகமது மெமெத்பாசிக் ஆத்திரிய அங்கேரி வங்கி அருகில் நின்றிருந்தார். தானுந்து தன்னைக் கடக்கையில் தன்னம்பிக்கை இழந்து செயல்படாதிருந்தார். பின்னதாக தமக்குப் பின்னால் காவலர் ஒருவர் நின்றுகொண்டிருந்ததால் தாம் குண்டை எறிவதற்கு முன்பே கைது செய்யப்படலாம் என அஞ்சியதாக மெமெத்பாசிக் கூறினார்.[7]

10:15க்கு ஆறு தானுந்துகள் அடங்கிய ஊர்வலம் மத்திய காவல் நிலையத்தை அடைந்தபோது பத்தொன்பது அகவையுடைய மாணவர் நெடல்யோ காப்ரினோவிச் கைக்குண்டை இளவரசர் தானுந்து மீது வீசினார். தன்னை நோக்கி கைக்குண்டு வருவதை கண்ட ஓட்டுநர் வண்டியை விரைவாக ஓட்டினார்; கைக்குண்டு 10 வினாடி தாமதமாக நான்காவது தானுந்தின் அடியில் வெடித்தது. அதில் பயணித்த எரிக் வோன் மெரிசியும் லுட்விக் ஜோசப் வோன் பூசு-வால்டெக்கும் பலத்த காயமடைந்தனர். குண்டின் சிதறல்களால் சில பார்வையாளர்களும் காயமடைந்தனர்.

காப்ரினோவிச்சின் குண்டு தவறியதால் பெரும் கூட்டம் கூடியதோடு இளவரசரின் தானுந்தும் மிக விரைவாக ஓட்டப்பட்டதால் பிரின்சிப் உள்ளிட்ட மற்ற நான்கு சூழ்ச்சியாளர்களுக்கு வாய்ப்பில்லாது போயிற்று. தான் பிடிபடாதிருக்க காப்ரினோவிச் சயனைடு குப்பியை விழுங்கியதோடன்றி மில்யாக்கா ஆற்றில் குதித்தார். ஆனால் சயனைடு நாள்ப்பட்டிருந்ததாலும் ஆற்றின் ஆழம் 10 சென்டிமீட்டர்கள் (4 அங்) மட்டுமே இருந்ததாலும் அவர் காவல்துறையால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பிரான்சு பெர்டினண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குண்டு வெடிப்பால் காயமடைந்தவர்களைக் காண விழைந்தார். மருத்துவமனைக்கு நகர மையத்தை தவிர்த்து அப்பெல் குவாய் வழியாகச் செல்ல ஆளுநர் தீர்மானித்திருந்தார். இருப்பினும் இதனை ஓட்டுநருக்குத் தெரிவிக்க மறந்ததால் ஓட்டுராக இருந்த லியோபோல்டு லோயக் பிரான்சு ஜோசப் சாலையில் நுழைந்தார்.

பிரின்சிப் பிரான்சு பெர்டினண்டின் தானுந்து தவறான திருப்பத்தில் தன்னைக் கடந்து செல்வதை மோரிட்சு சில்லரின் உணவகத்தருகே கண்டார். தன் தவறை உணர்ந்த ஓட்டுநர் தானுந்தை பின்திசையில் செலுத்த முயன்றார். இச்சமயத்தில் தானுந்துப் பொறி நின்றதுடன் பற்சக்கரங்களும் சிக்கிக் கொண்டன. இது பிரின்சிப்பிற்கு வாய்ப்பு தந்தது. முன்னேறிய பிரின்சிப் தனது கைத்துப்பாக்கியை உருவி [8]), இடையில் வந்த பாதசாரியை கைத்துப்பாக்கியாலேயே விலக்கி,கிட்டத்தட்ட 1.5 மீ (ஐந்து அடி) தொலைவிலிருந்து தானுந்தினுள் இருமுறை சுட்டார். பிரான்சு பெர்டினண்டுக்கு கழுத்திலும் சோபியாவிற்கு (முதல் சுடுதலை அடுத்து உள்ளுணர்வால் பெர்டினண்டை தனது உடலால் மறைத்ததால்) வயிற்றிலும் துப்பாக்கி இரவை பாய்ந்தது. இருவரும் 11:00 மணிக்கு முன்னரே இறந்தனர்.

கைதும் சிறைவாசமும்

Thumb
திசம்பர் 5, 1914 அன்று நடந்த குற்ற விசாரணையின்போது - முதல் வரிசையில் நடுவில் காவ்ரீலோ பிரின்சிப் அமர்ந்துள்ளார்

கொலை செய்த உடனேயே பிரின்சிப் சயனைடு குப்பியை விழுங்கியும் தம்மைத் தானே சுட்டுக் கொண்டும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.ஆனால் காப்ரினொவிச்சைப் போலவே காலம் கடந்த சயனைடை வாந்தி எடுத்தார்; மேலும் தன்னை மற்றுமொருமுறை சுட்டுக்கொள்ளும் முன்பே துப்பாக்கியை கைமறித்து காவலர்கள் அவரை பிடித்தனர்.

பிரின்சிப் குற்றம் நடந்த நாளில் இருபது அகவைக்கு 27 நாட்கள் இளையவராக இருந்ததால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை; மாறாக 20 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனைப் பெற்றார். போர்க்காலத்தில் சிறையில் கடுமையான சூழல் நிலவியது. மேலும் சிறையில் அவருக்கு காச நோய் கண்டது.[3] ஆத்திரிய அதிகாரிகள் அவருக்கு தக்க மருந்துகள் கொடுக்காததாலும் கைப்பற்றப்பட்ட போது உடைந்த எலும்புக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததாலும் 1917இல் ஒரு கையை இழந்தார்.[9] ஏப்ரல் 28, அன்று 1918 டெரெசின் சிறையில் உயிரிழந்தார். தமது மரணத்தின்போது ஊக்கச்சத்தின்மை, குருதி இழப்பு மற்றும் நோய்களால் 40 கிலோ எடையே இருந்தார்.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.