பின்லாந்து நாட்டு காவியப் பாடல் From Wikipedia, the free encyclopedia
கலேவலா (Kalevala) உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். இக்காவியம் 1849 ஆம் ஆண்டிலேயே ஒழுங்கான வடிவத்தைப் பெற்றது. எனினும், இவற்றுக்கு நேரடியான அடிப்படைகளாக அமைந்த வாய்மொழிப் பாடல்கள் கிபி 1ம் நூற்றாண்டு காலப் பகுதியிலேயே உருவாகிவிட்டன.[1]
கலேவலா, பின்லாந்தின் தேசியக் காவியம், முதல் பதிப்பு, 1835. | |
நூலாசிரியர் | எலியாசு உலொன்ரொத் |
---|---|
உண்மையான தலைப்பு | Kalevela (or Kalewala, first edition, 1835) |
நாடு | பின்லாந்து |
மொழி | பின்னிய மொழி |
வகை | இதிகாசம், தேசியக் காவியம் |
வெளியீட்டாளர் | ஜே. சி. பிரெங்கெல் ஜா பொய்க்கா |
வெளியிடப்பட்ட நாள் | 1835: பழைய கலேவலா 1849: புதிய கலேவலா |
ஆங்கில வெளியீடு | 1888, 1907, 1963, 1989 |
பக்கங்கள் | பழைய கலேவலா: பாகம் 1, 208பக்.; பாகம் 2, 334பக். புதிய கலேவலா: ~500பக். |
சிறந்த மொழிநூல் வல்லுநரான எலியாஸ் லொண்ரொத் (1802-1884) என்பாரே இக் காவியத்தைத் தொகுத்தவராவார். இவராலும் மற்றும் பின்லாந்தின் நாட்டார் இலக்கியத்தின் முன்னோடிகளாலும் பின்லாந்தின் கரேலியாவின் நாட்டுப் புறங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட, சிறந்த தொன்மையான நாட்டுப் பாடல்களே இத் தொகுப்பின் மூலங்களாகும்.
கரேலியா என்னும் பிரதேசத்தின் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரை, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. புரட்டஸ்தாந்தம், லூத்தரன் கிறித்தவ இயக்கம் ஆகியன ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த பழமைவாதக் கிறித்தவம் பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த ரோமன் கத்தோலிக்க இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே இதற்குக் காரணமாகும். கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனை கதைகளையும் பிரதிபலித்தது, எனினும் இந்நாட்டை வெற்றிக்கொண்ட சுவீடிஷ்க்காரர் கி.பி. 1155 இல் பலவந்தமாகக் கொண்டுவந்த கிறித்துவத்தின் வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று.[2][3][4]
கலேவலா என்னும் பெயர் பின்னிஷ் மொழியில் 'இடம்' என்பதைக் குறிப்பிடும் -லா என்னும் பெயர் விகுதியில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் முதல் அடி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. இவருக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தனர். கலேவலாவின் நாயகர்களான வைனாமொயினனும் இல்மரினனும் இவர்களில் அடங்குவர். பின்னிஷ் மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது.
கலேவலா பாடல்கள் இற்றைவரை தமிழ் உட்பட 50க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் 1994இல் ஆர். சிவலிங்கம் (உதயணன்) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது.[5][6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.