எஸ். செல்வசேகரன்
From Wikipedia, the free encyclopedia
எஸ். செல்வசேகரன் (S. Selvasekaran, இறப்பு: டிசம்பர் 28, 2012, அகவை: 64[1]) கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மேடை, வானொலி, திரைப்பட நடிகர். கோமாளிகள் நாடகத் தொடரில் சிங்கள மொழியில் பேசும் 'உபாலி' பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றதை அடுத்து "உபாலி செல்வசேகரன்" எனவும் அழைக்கப்பட்டார். நகைச்சுவையோடு குணசித்திர பாத்திரங்களிலும் திறமையாக நடித்தவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
செல்வசேகரனின் பெற்றோர் முத்தையா, அந்தோனியம்மா. இலங்கையின் தெற்கே பாணந்துறையில் பிறந்தார். தந்தை பானந்துறையில் ஒரு உடுப்புத் தைக்கும் கடை வைத்திருந்தார். பின்னர் கொட்டாஞ்சேனைக்குக் குடி பெயர்ந்தார்கள். கொழும்பு கொச்சிக்கடை சென் பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயின்றார் செல்வசேகரன்.
வானொலியில்
இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் எஸ். ராம்தாசின் "கோமாளிகள் கும்மாளம்' தொடரிலும், எஸ். எஸ். கணேசபிள்ளையின் 'இரை தேடும் பறவைகள்' தொடரிலும் கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள்' தொடரிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்.
தொலைக்காட்சியில்
ரூபவாகினியில் 'எதிர்பாராதது' முதலிய தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார்.
திரைப்படங்களில்
கோமாளிகள், ஏமாளிகள், நாடு போற்ற வாழ்க போன்ற இலங்கைத் திரைப்படங்களில் நடித்தார். நடிகர் வி. பி. கணேசனுக்கு புதிய காற்று, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க போன்ற படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர் இவரே. இதனால் இவர் நாடு போற்ற வாழ்க படத்தில் நடித்தபோது இவருக்கு எஸ். என். தனரத்தினம் குரல் கொடுக்க நேர்ந்தது. புஞ்சி சுரங்கனாவ, மச்சான், மாபா, சூரியஹரன ஆகிய சிங்களத் திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 'புஞ்சி சுரங்கனாவி’ என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது[1].
மேடை நாடகங்களில்
கே. எம். வாசகரின் 'சுமதி', எஸ். ராம்தாசின் 'காதல் ஜாக்கிரதை', 'கலாட்டாக் காதல்' உட்படப் பல மேடை நாடகங்களில் நடித்திருந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.