எஸ். ஏ. டேவிட்
காந்தியவாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்தியவாதி From Wikipedia, the free encyclopedia
எஸ். ஏ. டேவிட் (S. A. David) அல்லது டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட் (ஏப்ரல் 24, 1924 - ஒக்டோபர் 11, 2015) ஒரு கட்டடக் கலைஞர். இலங்கையில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து 1977 ஆம் ஆண்டில் காந்தியம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்.[1][2] புலம் பெயர்ந்து சென்னையில் வாழ்ந்து வந்தவர். வவுனியாவில் 12 நவீன பண்ணைகள், நடமாடும் வைத்தியசாலைகள், பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களிற்கான பால், திரிபோசா மா விநியோகம், சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். மலையகத்திலிருந்த சில தொண்டர் நிறுவனங்களுடாக மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றுவதற்கு இவரது காந்தியம் அமைப்பு முன்னின்று உழைத்தது. ஏறத்தாழ 5000 மலையக மக்கள் வவுனியா, திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்.
எஸ். ஏ. டேவிட் | |
---|---|
1970களில் எஸ். ஏ. டேவிட் | |
பிறப்பு | சொலமன் அருளானந்தம் டேவிட் 24 ஏப்ரல் 1924 கரம்பொன், யாழ்ப்பாண மாவட்டம் |
இறப்பு | அக்டோபர் 11, 2015 91) கிளிநொச்சி, இலங்கை | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | டேவிட் ஐயா, காந்தியம் டேவிட் |
பணி | கட்டிடக் கலைஞர் |
அறியப்படுவது | காந்தியம் அமைப்பூடாக மனித நேயப் பணிகள் |
பெற்றோர் | அருளானந்தம், மரியப்பிள்ளை |
வாழ்க்கைத் துணை | திருமணமாகாதவர் |
டேவிட் இலங்கையின் வடக்கே கரம்பொன் என்ற ஊரில் ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் பிறந்தார்.[3] கரம்பனில் இருந்த கொன்வென்டிலும், பின்னர் இளவாலை புனித என்றி கல்லூரியிலும் கல்வி கற்றார். வரைவாளர் படிப்பை முடித்துக் கட்டடக் கலைஞர் ஆனார். இலங்கைப் பொதுப்பணித் துறையில் கட்டடக் கலைஞராகப் பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து தனது அரசுப் பதவியைத் துறந்து வெளிநாடு சென்றார்.[4] லண்டனிலும் நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் கற்கையை முடித்தார். கென்யாவின் மொம்பாசா நகரத் திட்டமிடலில் முதன்மைக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றினார்.
1972 ஆம் ஆண்டில் சேவை நோக்கோடு இலங்கை திரும்பினார். இலண்டனில் இருந்து திரும்பிய மருத்துவர் ராஜசுந்தரம் என்பவருடன் இணைந்து 'காந்தியம்’ என்ற அமைப்பை 1977 ஆம் ஆண்டில் வவுனியாவில் தொடங்கினார்.[2][4] ஐந்து ஆண்டுகளில் இவர்கள் இலங்கையின் தமிழர் வாழ் மாவட்டங்கள் அனைத்திலும் மாவட்ட மையங்களை அமைத்தனர். கிராமம்தோறும் கிட்டத்தட்ட 450 தொடக்கப் பள்ளிகளை அமைத்தனர். அத்துடன் பண்ணைகள், நடமாடும் மருத்துவமனைகள், பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களுக்கான பால், மா விநியோகம், ஆசிரியர்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.[4] வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பன்னிரண்டு ஒரு-ஏக்கர் மாதிரிப் பண்ணைகளை இவர் அமைத்தார். அத்துடன் மலையகத்தில் இருந்து ஏதிலிகளாக வந்த 4,500 குடும்பங்களை வவுனியாவிலும், 300 குடும்பங்களைத் திருகோணமலை மாவட்டத்திலும், 200 குடும்பங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலும் காந்தியம் அமைப்பின் ஊடாக TRRO, மற்றும் செடெக் ஆகிய அமைப்புகளின் உதவியுடன் குடியமர்த்தினார்.[2][4]
ஈழப் போராளிகளான உமாமகேஸ்வரன், சந்ததியார் ஆகியோரைச் சந்தித்ததற்காகவும், இந்தியாவிற்கு அவர்களைத் தப்ப வைத்ததற்காகவும் டேவிட், மருத்துவர் இராஜசுந்தரம் ஆகியோரை இலங்கை இரகசியப் பொலிஸ் பிரிவினர் 1983 ஏப்பிரல் 7ஆம் திகதி கைது செய்து பனாகொடைத் தடுப்பு முகாமில் தடுத்து வைத்தனர்[5]. இரு மாதங்கள் பனாகொடையில் தங்கியிருந்த டேவிட் பின்னர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். சூலை 1983 இல் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் போது வெலிக்கடைச் சிறையில் சூலை 25, 27 ஆம் திகதிகளில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர். இவருடன் கைது செய்யப்பட்ட மருத்துவர் ராஜசுந்தரம் உட்பட 18 அரசியல் கைதிகள் 1983 சூலை 27 அன்று படுகொலை செய்யப்பட்டனர். டேவிட் உயிர் தப்பினார்.[1]
டேவிட் உட்பட உயிர்தப்பிய தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடையிலிருந்து மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். இரு மாதங்கள் மட்டக்களப்புச் சிறையில் தங்கியிருந்த டேவிட் சிறைச்சாலை உடைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் பலர் தப்ப வைக்கப்பட்டபோது அவர்களுடன் வெளியேறினார். இவர்களுடன் வெளியேறிய இளைஞர்கள் அனைவரும் படகில் தப்பிச் செல்ல, வயதான இவர் மட்டும் தனித்து நின்றதால், கிட்டத்தட்ட 20 நாள்கள் திருகோணமலை, கேரதீவு எனத் தலைமறைவாகத் திரிந்து, இறுதியில் தலைமன்னாரில் இருந்து வேறு 11 பேருடன் தனுக்கோடி வந்தடைந்தார்.[4]
1983 ஆம் ஆண்டில் இருந்து சென்னையில் வாழ்ந்த இவர் சென்னை திருவல்லிக்கேணியில் வே. ஆனைமுத்து அவர்களின் Periyar Era என்ற ஆங்கில இதழுக்கு மாதந்தோறும் இலங்கை நிலவரத்தை எழுதி வந்தார்.[1].
தனது வாழ்வின் இறுதிப் பகுதியை ஈழத்தில் கழிப்பதற்காக 2015 சூன் மாதத்தில் இலங்கை வந்து கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வாழ்ந்து வந்த டேவிட் 2015 அக்டோபர் 11 அன்று தனது 91ஆவது அகவையில் காலமானார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.