உஹத் யுத்தம்
முகமது நபியின் முஸ்லிம்கள் மற்றும் இறைமறுப்பாளர்களுக்கு இடையே நடைபெற்ற யுத்தம் From Wikipedia, the free encyclopedia
முகமது நபியின் முஸ்லிம்கள் மற்றும் இறைமறுப்பாளர்களுக்கு இடையே நடைபெற்ற யுத்தம் From Wikipedia, the free encyclopedia
உகத் போர் (Battle of Uhud, அரபு மொழி: غزوة أحد உஹத் யுத்தம்) முகம்மது நபியின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரண்டாவது போர் ஆகும். இது 625 மார்ச் 19 (இசுலாமிய நாட்காட்டியில் சவ்வால் 3) சனிக்கிழமை மதினா நகருக்கு வடக்கே அமைந்திருந்த உஹத் என்னும் மலையடிவாரத்தில் (இன்றைய அராபியாவின் வடமேற்கே),[2] முகம்மது நபியின் தலைமையிலான மதினா முசுலிம்களுக்கும், அபு சுஃபியான் இப்னு ஆர்ப் தலைமையிலான மெக்கா நகர இறைமறுப்பாளர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. முகம்மது நபி பங்குபற்றிய முதல் போர் 624 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பத்ரு போர் ஆகும்.
உகத் போர் Battle of Uhud |
|||||||
---|---|---|---|---|---|---|---|
உகத் நகரில் முகம்மது நபியும் முசுலிம் இராணுவமும்[1] |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மதீனாவின் முஸ்லிம்கள் | மெக்காவின் குரைசியர்கள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
முகம்மது நபி உமறு இப்னு அல்-கத்தாப் அம்சா இப்னு அப்துல்-முத்தலிப் ⱶ முசாப் இப்னு உமைர் ⱶ | அபு சுஃபியான் காலிது இப்னு அல்-வாலித் ஆம்ர் இப்னு அல்-ஆசு |
||||||
பலம் | |||||||
700 காலாட்படை; 50 வில்படை, 4 குதிரைப்படை | 3,000 காலாட்படை, 3,000 ஒட்டகப்படை, 200 குதிரைப்படை | ||||||
இழப்புகள் | |||||||
70-75 இறப்பு | குறைவு (22) |
ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் இறைமறுப்பாளர்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் (பத்ரு யுத்தம்) மிக மோசமான தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள், முகம்மது நபியோடு மதினாவி்ல் வாழ்ந்திருந்தவர்களை பழி தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பத்ருப்போரின் மூலம் செங்கடலை அண்மிய தமது வர்த்தக மார்க்கத்தின் இழப்பீடுகளினால் வருந்திய அவர்கள், வியாபாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு நஜ்த் வழியாக ஈராக்கிற்கு வர்த்தகக் குழுவினரை அனுப்பி வைக்கத் திட்டமிட்டனர். இந்த வர்த்தகத்தில் ஒரு இலட்சம் திர்ஹங்கள் பெறுமதியான வர்த்தகப் பொருள்களை ஏற்றிச்செல்ல அதிகமான ஒட்டகங்களையும், அவற்றோடு செல்ல ஏராளமான கூலியாட்களையும் ஏற்பாடு செய்து அனுப்பினர். இந்த வர்த்தகக்குழு தொடர்பான சகல செய்திகளையும் மதீனாவில் வாழ்ந்த சில யூதர்கள் அறிந்திருந்தனர். இந்த யூதர்களின் உரையாடலைச் செவிமடுத்த மதினாவாசியான ஸைது என்பவரின் நடவடிக்கைகளையும், தலைமைத்துவத் தகைமைகளையும் அவதானித்த நபியவர்கள், அந்த வர்த்தகக்குழுவினரை மடக்க அவரது தலைமையிலேயே நூறு குதிரை வீரர்களைக் கொண்ட படையை அனுப்பி வைத்தார்கள். தண்ணீருக்காக சுராதா என்னுமிடத்தில் தங்கியிருந்த வர்த்தகக்குழுவினரை ஸைது வெற்றிகரமாகத் தாக்கியதனால், சமாளிக்க முடியாத வர்த்தகக்குழுவினர் நாலா பக்கமும் சிதறி ஓடிவிட்டனர். வர்த்தகப் பொருள்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவர்களது ஒட்டகங்களோடு மதீனாவுக்குத் திரும்பினார் ஸைது. இதனாலும் சினமுற்ற மக்கா இறைமறுப்பாளர்கள் பெருஞ் சினம் கொண்டு எப்போது நபியவர்களையும், அவர்களோடு சேர்ந்தவர்களையும் தாக்கியழிக்கலாம் என்று காத்திருந்தார்கள்.
அடுத்த ஆண்டு நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தின் கடைசித் தினங்களுள் ஒன்றில் ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அது நபியவர்களின் மாமனார் அப்பாஸ் அவர்களிடமிருந்து வந்திருந்தது. அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் 700 குதிரைப்படை, அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன் படைவீரர்களை மகிழ்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்து சேர்ந்த வேளை மக்காவிலிருந்து படை நகர ஆரம்பித்திருந்தது.
எதிரிகள் தம்மை வந்து சேர்வதற்கு ஒரு வாரமாகும் என ஊகித்த நபியவர்கள், மதீனா நகருக்கு வெளியே வாழ்ந்த மக்களனைவரையும் நகருக்கு உள்ளே வந்து தங்கியிருப்பதற்கு ஆவன செய்யுமாறு தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். எதிரிகள் கரையோரத்து மேற்குப்பாதை வழியாக வந்து கொண்டிருக்கிறனர் என்றொரு செய்தியும், பின்னர் உஹத் மலையின் அடிவாரத்தில் பாசறை அமைத்துக் கொண்டனர் என்றொரு செய்தியும் நபியவர்களை வந்தடைந்தது. உடனே தமது தோழர்களை அழைத்து ஆலோசனை செய்துவிட்டு யுத்தத்திற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். மறுநாள் பிற்பகல் தொழுகையை முடித்தபின் 1000 வீரர்களைக் கொண்ட படை நபியவர்களின் தலைமையில் உஹதை நோக்கி நகரத் தொடங்கியது.
ஷைகன் என்ற இடத்தை அடைந்தபோது மாலை நேரமாகியது. மாலைநேரத் தொழுகையை முடித்த நபியவர்கள் தமது படையினரைப் பார்வையிடச் சென்றார்கள். அச்சமயம் எதிரிகள் மிக அதிகமாக உள்ளனர் என்ற பொய்க் காரணத்தை முன்வைத்து 300 நயவஞ்சகர்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்று விட்டனர். மிகுதியாக இருந்த 700 வீரர்களில் எட்டுச் சிறுவர்களும் இருந்தனர். அவர்களில் மல்யுத்தம் மற்றும் வாள்வீச்சு தெரிந்த இருவரைத் தவிர ஏனைய அறுவரையும் மதீனாவுக்குத் திருப்பி அனுப்பி வைத்தார்கள் நபிகளார். மிகுதியாக இருந்த வீரர்களில் வில்வித்தை தெரிந்த சிலரை காலையில் ஒரு சிறிய குன்றின் மீது நின்று கண்காணிக்க வேண்டுமெனப் பணித்து, ஏனையோரை ஐம்பது, ஐம்பது பேராக அணிவகுத்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.
மறுநாள் காலை யுத்தம் ஆரம்பித்தது. ஏற்கனவே அணிவகுத்து நின்ற எதிரிப் படைகளைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது நபிகளாரின் படை. சிறிது நேரத்தில் எதிரிப்படைகள் நாலா பக்கமும் சிதறியபோது, அவர்கள் விட்டுச் சென்ற பொருள்களை நபியவர்களின் படைவீரர்கள் எடுப்பதைக் கண்டு, குன்றின் மீது பாதுகாப்பிற்காக நின்ற வில்வீரர்களும் குன்றை விட்டு இறங்கி பொருள்களை எடுக்கத் தொடங்கினார்கள். குன்றின் மீது வீரர்கள் எவருமில்லை என்று தெரிந்த எதிரிகள் பின்புறமாக வந்து நபியவர்களின் படைகளைத் தாக்கத் தொடங்கினார்கள். இதனால் நபியர்களின் படையினருக்கு பெரும் சேதமேற்பட்டது. மாலை மங்கி இருள் சூழ்ந்த வேளையில் எதிரிப்படை வீரர்களில் ஒருவன் எறிந்த கல் நபியவர்களின் வாயில் பட்டு, அவர்களின் பல் ஒன்று உடைந்ததால் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. இரத்தம் கொட்டியதை அறிந்த எதிரிப் படையினர் 'முகம்மது இறந்து விட்டார்' என்று கோசமிட்டனர். இதனால் கலக்கமுற்ற நபிகளாரின் படையினர் மிகவும் மனச் சோர்வுடன் பாசறைக்குத் திரும்பினர். முகம்மது இறந்து விட்டார் என அறிந்த எதிரிப் படையினரும் யுத்தம் முடிந்து விட்டதாவே எண்ணி, மிகுதியாக இருந்த வீரர்கள், குதிரைகள், ஒட்டகங்களோடு மக்காவுக்குத் திரும்பினர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.