இலங்கையில் இயங்கிய/இயங்கும் அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
இலங்கைத் தமிழரசுக் கட்சி (Illankai Tamil Arasu Kachchi, ITAK, முன்னாள் சமஷ்டிக் கட்சி, Federal Party) இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியற் கட்சியாகும். இக்கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த வீ. ஆனந்தசங்கரி பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இக்கட்சி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர் அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது.[1] இக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பின் முக்கிய உறுப்புக் கட்சியாகவும் தற்போது உள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி Illankai Tamil Arasu Kachchi | |
---|---|
தலைவர் | மாவை சேனாதிராஜா |
நிறுவனர் | சா. ஜே. வே. செல்வநாயகம், கு. வன்னியசிங்கம், இ. மு. வி. நாகநாதன் |
பொதுச் செயலாளர் | வைத்தியர் எஸ்.சத்தியலிங்கம் (பதில்) |
மூத்த துணைத் தலைவர்கள் | பொன். செல்வராசா, பேரா. சி. க. சிற்றம்பலம் |
பேச்சாளர் | எம். ஏ. சுமந்திரன் |
தொடக்கம் | 18 திசம்பர் 1949 |
பிரிவு | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் |
தலைமையகம் | 30 மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணம் |
கொள்கை | தமிழ்த் தேசியம் |
தேசியக் கூட்டணி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
நாடாளுமன்றம் | 10 / 225 |
தேர்தல் சின்னம் | |
வீடு | |
கட்சிக்கொடி | |
இலங்கை அரசியல் |
மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறிய அணியினரால், டிசம்பர் 1949ல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும். ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி தமிழரசுக்கட்சி கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது.
1956 தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழ்ப் பகுதிகளில் பெரும்பான்மை இடங்களை வென்று, தமிழர் அரசியலில் முன்னணிக்கு வந்தது. தாய்க்கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தும், மொழிக்கொள்கை முதலான முக்கிய பிரச்சினைகளில் தமிழரின் விருப்பங்களை நிறைவு செய்யும் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டுவரமுடியாமற் போனது தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு வாய்ப்பாக அமைந்தது.
1956ல் இலங்கையின் ஆட்சியைப் பிடித்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தபடி சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகச் அகிம்சை முறையில் தமிழரசுக்கட்சி போராட்டங்களை அறிவித்தது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அரசினால் அடக்கப்பட்டன. 1958ல் தமிழருக்கு எதிராக நடந்த இனக்கலவரமும், பின்னர், தமிழ் மக்களின் குறைகளை ஓரளவு தீர்க்கும் நோக்கில் செல்வநாயகம், பண்டாரநாயக்கா ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சிங்களவரின் கடும் எதிர்ப்புக் காரணமாகக் கிழித்தெறியப்பட்டதும், இலங்கையில் ஒரு இன ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியது. ஒற்றையாட்சிக் கொள்கை மீது நம்பிக்கை வைத்து ஆட்சியிலிருக்கும் சிங்கள அரசாங்கங்களோடு ஒத்துழைக்க விரும்பிய தமிழ்க் காங்கிரசுக்கு எதிராகத் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்துவந்தது. இது 1960 மார்ச், 1960 ஜூன், 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் பிரதிபலித்தது.
1965ல் நடைபெற்ற தேர்தலின்பின் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சி இணைந்து கொண்டு ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. எனினும் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஐ.தே.க அரசாங்கம், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமையினால் தமிழரசுக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டது. 1970ல் நடந்த தேர்தல் சிரிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த ஐக்கிய முன்னணியைப் பதவிக்குக் கொண்டுவந்தது. இந்தப் பதவிக்காலத்தில் புதிய குடியரசு அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஐக்கிய முன்னணி அரசு, முன்னைய அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை நீக்கியதுடன், சிங்கள பௌத்தர்களின் அதிகாரத்தை வலுப்படுத்தியதாகக் கூறித் தமிழரசுக் கட்சியும் எனைய தமிழ்க் கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் பயனற்றுப் போயின.
இந்த நிலையில் தங்களுடைய எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு ஒண்றிணைந்து போராடத் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும் முன்வந்தன. விளைவாகத் திருவாளர்கள் எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோரைக் கூட்டுத் தலைவர்களாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் சகல அரசியல் நடவடிக்கைகளும் மேற்படி கூட்டணியின் சார்பிலேயே நடைபெற்றன. இதனால் தமிழரசுக்கட்சி பெயரளவிலேயே இருந்துவந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.