தமிழ்நாட்டிலுள்ள சைவ, வைணவ, நாட்டார் கோயில்களை மேலாண்மை செய்யும் தமிழ்நாட்டு அரசின் துறைகளில From Wikipedia, the free encyclopedia
இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை, பழனி என, 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[1][2] அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.
இந்து சமய அறநிலையத் துறை | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1960 |
ஆட்சி எல்லை | தமிழ்நாடு |
தலைமையகம் | சென்னை |
அமைச்சர் | |
வலைத்தளம் | https://hrce.tn.gov.in/ |
தமிழக அரசின் நிதிநிலையறிக்கை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை 47ல் 2019-2020 கொள்கை விளக்ககுறிப்பில் குறிப்பிட்டுள்ள விபரங்களின் படி, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய மற்றும் சமண சமய நிறுவனங்கள்.[4]
எண் | நிறுவனத்தின் வகை | எண்ணிக்கை |
---|---|---|
1 | திருக்கோயில்கள் | 36,612 |
2 | திருமடங்கள் | 56 |
3 | திருமடத்துடன் இணையாத திருக்கோயில்கள் | 57 |
4 | குறிப்பிட்ட அறக்கட்டளைகள் | 1721 |
5 | அறக்கட்டளைகள் | 189 |
6 | சமணத் திருக்கோயில்கள் | 17 |
கூடுதல் | 38652 |
இவற்றின் பெயர்களில் 2 நூற்று 4 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களும், 2 நூற்று 53 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களும், 21 ஆயிரம் ஏக்கர் மானாவரி நிலங்களும், சேர்த்து நாநூற்று 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டிடங்களும், 33,665 மனைகளும் உள்ளன. இந்த நிலங்கள், கட்டிடங்கள், மனைப்பிரிவுகளில் உள்ளவர்கள் அறநிலையத்துறை தீர்மானித்த வாடகை, குத்தகையை செலுத்தி வருகின்றனர். இதுபோக வரன்முறைப்படுத்தாத மனைகளில் குடியிருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். 33,665 மனைகளில் மட்டும் 5 நூறாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளனர்.
எண். | சமய நிறுவனங்கள் வகைப்பாடு[4] | நிறுவனத்தின் ஆண்டு வருமானம் | நிறுவனங்கள் எண்ணிக்கை | நிறுவனங்களின் சதவீதம் |
---|---|---|---|---|
1 | பட்டியலைச் சாராத நிறுவனங்கள்
சட்டப்பிரிவு-49(1) |
ரூ.10,000/-க்கு குறைவாக | 34,099 | 88.2 |
2 | பட்டியலைச் சார்ந்த நிறுவனங்கள்
சட்டப்பிரிவு-46(i) |
ரூ.10,000/-லிருந்து ரூ.2,00,000/-வரை | 3,550 | 9.2 |
3 | சட்டப்பிரிவு-46(ii) | ரூ.2,00,000/-லிருந்து ரூ.10,00,000/-வரை | 672 | 1.8 |
4 | சட்டப்பிரிவு-46(iii) | ரூ.10,00,000/-மும் அதற்கு மேலும் | 331 | 0.8 |
கூடுதல் | 38652 | 100 |
கிழக்கிந்தியக் கம்பெனி 1810, 1817 ஆம் ஆண்டுகளின் சட்டம் இயற்றி இந்துக் கோயில்களின் நிர்வாகத்தில் நுழைந்தது.[5] பின்னர் கிறித்தவ மிசினரிகளின் எதிர்ப்பால் 1841 முதல் 1862 வரை கோவில் நிர்வாகத்தில் அரசு விலகிக் கொண்டது.[6] அரசின் கண்காணிப்பிலிருந்து கோயில்கள் விடுபட்டதும், நாணயம் இல்லாத அறங்காவலர்கள் கோயில் நிதி, நகைகளை தன் வசப்படுத்தினர். கோயில் நிலங்களை குறைந்த விலைக்கு குத்தகைக்கு விடுதல், விற்றல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.[7] மேலும் நிலையான நிதி ஆதாரமில்லாமல் பல கோயில்களில் பூசைகள் நிறுத்தப்பட்டன. இதன்பிறகு வழிபாட்டிடங்களில் ஊழல் அதிகரித்ததாகக் கூறி, 1863 ஆம் ஆண்டு அறநிலையச் சட்டம் போடப்பட்டு, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் உட்பட இந்து சமயக் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடத் தொடங்கியது.[8] சென்னை மாகாணத்திலிருந்த நீதிக்கட்சி அரசு காலத்தில் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களை மேலாண்மை செய்வதற்காக 1925 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் மதராசு இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1927 உருவானது. இதன்படி ஒரு தலைவரையும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டதாக வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்திய விடுதலைக்குப் பின்னர், ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி பி. வெங்கட்ரமணராவ் நாயுடு தலைமையில் ஆறு நபர்கள் கொண்ட குழுவின் அறிக்கையின்படி மதராசு இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1959 நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அறநிலைய வாரியங்கள் மாற்றப்பட்டு அறநிலையத் துறை உருவானது. இதன்படி, அறங்காவலர்களால் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு அரசால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவார்கள்.[6]
இந்து அறநிலையத்துறை அரசாணையின் (எண்.25 2008) படி தமிழகத்தில் உள்ள திருக்கோயில் நிலங்களை விற்கவோ, நீண்ட கால குத்தகைக்கு விடவோ தடை உள்ளது.ஆனால் இந்தத் தடையை விலக்கி வணிக நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நீண்டகாலக் குத்தகைக்கு விட இந்து அறநிலையத்துறை தமிழக அரசுக்கு 2010 ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. இச்செயல் விமர்சிக்கப்பட்டது.[9]
இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சிப் பணி அலுவலர் உள்ளார். ஆணையருக்கு உதவியாகத் துறையின் தலைமை அலுவலகத்தில் 3 கூடுதல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 2 உதவி ஆணையாளர்கள் செயல்படுகின்றனர். இத்துறை நடத்தும் திருக்கோயில் திங்களிதழை நடத்த ஆசிரியர் ஒருவர் உள்ளார்.
மேலும் இத்துறையில் சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல்பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளடங்கிய 2409 அங்கீகிரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. தற்போது இத்துறையில் 1336 மட்டுமே பணியாளர்கள் உள்ளனர்.
தமிழக அறநிலையத்துறையின் நிர்வாகத்தை மேற்கொள்ள தமிழ்நாட்டில் 11 மண்டல இணை ஆணையர்களும், 28 கோட்ட உதவி ஆணையாளர்களும் உள்ளனர்.
மேலும் கோயில்களின் அன்றாட நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ள செயல் அலுவலர் பதவியில் 11 இணை ஆணையாளர்கள், 9 துணை ஆணையாளர்கள், 27 உதவி ஆணையாளர்கள், மற்றும் செயல் அலுவலர் நிலை-1 பதவியில் 66 பேரும், செயல் அலுவலர் நிலை-2 பதவியில் 112 பேரும், செயல் அலுவலர் நிலை-3 பதவியில் 250 பேரும், செயல் அலுவலர் நிலை-4 பதவியில் 154 பேரும் உள்ளனர்.
தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை மதிப்பீடு செய்வதற்காகச் சென்னை தலைமையிடத்தில் இணை ஆணையர் நிலையில் ஒரு நகை சரிபார்ப்பு அலுவலரும், ஏழு இணை ஆணையர் மண்டலங்களுக்கு ஒரு துணை ஆணையர் நிலையில் 6 நகை சரிபார்ப்பு அலுவலர்களும், நான்கு இணை ஆணையர் மண்டலங்களுக்கு, ஒரு உதவி ஆணையர் நிலையில் 4 நகை சரிபார்ப்பு அலுவலர்களும் உள்ளனர்.
இந்து சமய அறநிலயத்துறையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய தலைமைத் தணிக்கை அலுவலருக்கு உதவியாக இரண்டு துணைத் தலைமைத் தணிக்கை அலுவலர்கள், 18 மண்டலத் தணிக்கை அலுவலர்கள், 28 உதவித் தணிக்கை அலுவலர்கள் பணிபுரிகின்றனர். மேலும் இணை ஆணையர்/செயல் அலுவலர்கள் உள்ள எட்டு திருக்கோயில்களில் 8 மண்டலத் தணிக்கை அலுவலர்கள், முதுநிலை கணக்கு அலுவலர்களாகப் பணிபுரிகின்றனர்.
இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ், இந்து சமயத் திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்திட, பரம்பரை அறங்காவலர்கள் குழு, பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் குழு என்று இரு வழிகளிலான அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தின் கீழான திருக்கோயில்களில், அத்திருக்கோயிலைத் தொடக்கக் காலத்திலிருந்து நிர்வாகம் செய்து வந்த பரம்பரையினர் குடும்பத்தினரிலிருந்து அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அக்குழுவின் வழியாகத் திருக்கோயில் நிர்வாகம் மேலாண்மை செய்யப்படுகிறது. இத்திருக்கோயில்களில் குறிப்பிட்ட திருக்கோயிலின் நிர்வாகத்திலிருந்த பரம்பரையினர் தவிர்த்து, பிறர் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவதில்லை.
பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும், பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்படி அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும், மூன்று அறங்காவலர்களுக்குக் குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு அதிகமில்லாமலும் உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த அறங்காவலர் குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும், இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. [10]
2014 ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் திருக்கோயில்களின் அசையாச் சொத்துக்களின் விவரங்கள் இத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.[11] இந்த இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத் திருக்கோயில்களின் அசையா சொத்து விவரத் தகவலும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைக்குப் [2] பின்னரே இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் சொத்து விவரங்கள் சேர்க்கப்பட்டன. தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களின் சொத்து விவரங்கள் இருப்பினும் அவற்றை தொழில்நுட்பக்கோளாறு காரணமாகப் பார்க்க இயலாது.[11]
யு.டி.ஆர் திட்ட செயலாக்கத்தின் போது, இந்து சமய அறநிலையத் துறைக்குக் கீழுள்ள இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாற்றப்பட்டு பின்னர் அந்த நிலங்களை மீட்க மதுரை, கோவை நகரங்களைத் தலைமையாகக் கொண்டு இரு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கோயில் நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து செயல்படுகின்றது.[2]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
மிகக்குறைவான வாடகையே வசூலிக்கப்படும் திருக்கோயில் சொத்துகளை அனுபவிப்போர் திருக்கோயிலுக்கு வாடகை செலுத்தாமல் இருக்கும் தொகை பல திருக்கோயில்களில் லட்சங்களையும், கோடிகளையும் தாண்டுகின்றது. இவ்வாறு பாக்கி வைப்போரில் முக்கிய பிரமுகர்களும் அடங்குவர்.
கொடைக்கானலைச் சார்ந்த வி.என்.ஏ.எஸ்.சந்திரன் எனும் பக்தர் 2003 மார்ச்சில் தனது ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாகச் சொத்தைப் பழனி முருகன் கோயிலுக்குச் சேருமாறு உயில் எழுதி பதிவு செய்து அதன் பிரதியை அறநிலைய துறை ஆணையருக்கு அனுப்பியும் அந்தச் சொத்துகள் இதுவரை பழனி முருகன் கோயில் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வால்பாறை, மூணாறு ஆகிய இடங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள், வி.என்.ஏ.எஸ் காலணி நிறுவன 90 சதவீத பங்குகள் உட்பட பல சொத்துகள் இதில் அடங்கும்.[18]
நாகர்கோயில் பார்வதிபுரம் கே.பி.சாலையில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்கத் திட்டமிடப்பட்டிருந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 10 சென்ட் நிலம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் தலைமையில் மீட்கப்பட்டு ’கோயில் நிலம்’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.[20]
இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களிலும், 22600 கட்டடங்களிலும், 33665 மனைகளும் உள்ளன. இந்த நிலங்கள், கட்டடங்கள், மனைப்பிரிவுகளில் உள்ளவர்கள் அறநிலையத்துறை தீர்மானித்த வாடகை, குத்தகையைச் செலுத்தி வருகின்றனர். இதுபோக வரன்முறைப்படுத்தாத மனைகளில் குடியிருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். 33665 மனைகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோவில் இடத்தில் நீண்டகாலமான குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அரசு உரிய முயற்சி செய்து வருகிறது. விரைவில் பட்டா வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு குடிமனையும் பட்டாவும் வழங்குவதற்கு பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறப்பு அரசாணை வெளியிடும். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு 30.8.2019 அன்று அரசாணை 318 வெளியிடப்பட்டது. அதன் சாராம்சங்கள்:[21]
அரசாணை வெளிவந்து சில நாட்களிலேயே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் இடத்திற்குப் பட்டா வழங்கும்வகையில் அரசாணை வெளியிட்டது தவறு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது; எனவே அரசாணை 318-ஐ ரத்து செய்யவேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அரசாணைக்கு 22.11.2019 அன்று தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது .கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புச் செய்து குடியிருப்போரிடமிருந்து உரிய தொகை பெற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசு பட்டா வழங்கும் திட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.[22][23] மேலும் தமிழகக் கோவில்களுக்குச் சொந்தமான 5 இலட்சம் ஏக்கர் விளைநிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், குத்தகை பாக்கி 25 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றததில் தெரிவித்துள்ளார்.[24]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசு புறம்போக்கு, கோயில் மடம், வக்ப் போர்ட், கிறிஸ்தவ நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை நிலங்களில் குடியிருப்போருக்குக் குடிமனைப் பட்டாவும், குடிமனை இல்லா தோருக்கு இலவச மனைப் பட்டாவும், சாலையோரம், நீர், நிலை புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்கக்கோரி 26 நவம்பர், 2019 அன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.[25]
தனியார் நிறுவனம் அல்லது தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்ட கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க இந்து சமய அறநிலையத் துறை தவறிவிட்டதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் நவம்பர் 2020 அன்று வழங்கிய தீர்ப்பில் விமர்சித்துள்ளார். 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னைக்கு அருகிலுள்ள நீலங்கரை அருகே உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் நவீன மீன் சந்தை மற்றும் மீன் உணவகத்தை நிறுவுவதற்கு மீன்வளத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்தார். கோவில் நிலங்களைப் பாதுகாக்க வேண்டும், ஆக்கிரமிக்கப்படக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் பண்டைய இந்துக்களின் பண்பாட்டை அடையாளம் காண்பதற்கான ஆதாரமாக மட்டுமல்லாமல் கலை, அறிவியல் மற்றும் சிற்பத் துறையில் உள்ள திறமைகளைப் பற்றிய பெருமை மற்றும் அறிவின் சான்றாகவும், ஆன்மீக நடவடிக்கைகளுக்கான ஒரு வழியாகவும் இருப்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும், இந்து சமய நிறுவனங்களின் சொத்துக்கள், குறிப்பாகக் கோயில்கள், அவற்றின் மேம்பாட்டிற்காக அதிக வருமானத்தை ஈட்டுவதற்காக முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்" என்றும் நீதிபதி கூறினார்.[26]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.