பறவை துணை இனம் From Wikipedia, the free encyclopedia
இந்தியப் பச்சைக்கிளி ( Indian ringneck parrot) (உயிரியல் பெயர்: Psittacula krameri manillensis) என்பது பச்சைக்கிளியின் துணை இனமாகும்.[1][2] இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்டதாகும்.
மைனாவை விட சற்று பெரியதான இப்பறவை நீண்ட கூரிய வாலுடன் சுமார் 42 செ. மீ. நீளம் கொண்டது. மேல் அலகு செர்ரி சிவப்பாக முனை கருத்துக் காணப்படும். கீழ் அலகு சாம்பல் நிறமான பழுப்பு நிறத்தில் இருக்கும். விழிப்படலம் மஞ்சள் தோய்ந்த வெண்மை நிறத்தில் இருக்கும். கால்கள் பசுமை தோய்ந்த சிலேட் நிறத்தில் இருக்கும். இப்பறவை இலங்கை பெரிய பச்சைக்கிளியைவிட சற்று மெலிந்த தோற்றம் கொண்டது. ஆண் பறவைக்கு கழுத்தில் கருப்பும் உரோசா நிறமும் இணைந்த நிறத்தில் கோடு காணப்படும். பெண்ணுக்கு அத்தகைய கோட்டுக்குப் பதிலாக நல்ல மரகத பச்சை நிறக்கோடு காணப்படும். தோள் பட்டையில் சிவப்பு திட்டு இல்லாததைக் கொண்டு இதை பெரிய பச்சைக்கிளியிலிருந்து வேறுபடுத்தி அறியலாம்.[3]
இந்தியப் பச்சைக்கிளி இந்தியத் துணைக்கண்டத்தின் தென்னிந்தியாவில் உருவானது. ஆனால் உலகளவில் ஆத்திரேலியா, பெரிய பிரித்தானியா (முதன்மையாக இலண்டனைச் சுற்றியுள்ள பகுதிகள்), அமெரிக்க ஐக்கிய நாடுகள், மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் காட்டுப் பறவையாகவும் இயற்கையான பறவையாகவும் பறவியுள்ளது. தென்னிந்தியா முழுவதும் மிகுதியாக காணப்படும் கிளி இதுதான். இப்பறவை இலையுதிர் காடுகளைச் சார்ந்த விளை நிலங்களை அடுத்தும், மக்கள் வாழ்விடங்களை அடுத்தும் காணப்படுகிறது.
இது இலங்கை பெரிய பச்சைக்கிளியைப் போன்ற பழக்கவழக்கங்களைக் கொண்டது. தானியங்கள், மிளகாய், வேர்க்கடலை, மரங்களில் உள்ள மலர்களில் காணப்படும் தேன், பழங்கள், கொட்டைகள் ஆகியன இதன் உணவாகும். இது பழங்களையும், தானியங்களையும் தின்பது மட்டுமல்லாமல் அவற்றை கொத்தி வீணாக்கக் கூடியன. இது 'கியாக்' 'கியாக்' என உரத்தக் குரலில் கத்தும்.
இதன் இனப்பெருக்க காலம் சனவரி முதல் ஏப்ரல் வரை ஆகும். இனப்பெருக்க காலத்தில், காதலூட்டத்தின்போது ஆண் பறவை தன் அலகை பெண் பறவையின் அலகோடு பிணைத்துக் கொள்ளும், பெண்ணுக்கு பழங்களைக் கொண்டுவந்து தரும், இறக்கையால் பெண்ணை அணைத்ததுக் கொள்ளும், சற்று தொலைவில் அமர்ந்து தலையை சாய்த்துப் பெண்ணை இரசிப்பதுபோல பார்க்கும்.[3]
மரங்களில் மூன்று முதல் 10 மீட்டர் உயரத்தில் பொந்துகளிலும், சுவர், பாறை, பாழடைந்த கோபுரம், கோட்டை ஆகிய இடங்களில் காணப்படும் பொந்துகளில் முட்டை இடும். பல பறவைகள் அருகருகே முட்டை இட்டிருப்பதைக் காண இயலும். இவை பொதுவாக மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடக்கூடியன. ஆனால் அரிதாக சிலசமயங்களில் ஐந்து அல்லது ஆறு முட்டைகள் வரை இடுவதும் உண்டு. முட்டை வெண்மையாக இருக்கும். ஆணும், பெண்ணும் அடைகாத்து குஞ்சுகளைப் பேணும். முட்டைகளைக் கவர வரும் பாம்பு அல்லது பிற பறவைகளை பல பறவைகள் சேர்ந்து ஆரவாரம் செய்து விரட்டும்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.