From Wikipedia, the free encyclopedia
இதயக் குழலிய நோய் (Cardiovascular disease) அல்லது இதய நோய் (heart disease) என்றவகை நோய்களில் இதயம் அல்லது குருதிக் கலன்களில் (தமனிகள் மற்றும் சிரைகள்) ஏற்படும் நோய்களாகும்.[1] இந்தச் சொற்றொடர் மருத்துவ இயலில் (MeSH C14 அல்லது நோய்களின் பன்னாட்டு புள்ளிவிவர வகைப்பாடு மற்றும் தொடர்புடைய நலச் சிக்கல்கள் 10வது திருத்தம் (ICD10) களில் பயன்படுத்தப்பட்டுள்ளதுபோல) இதயக் குழலிய அமைப்பில் ஏற்படும் எந்த நோய்களைக் குறிப்பிட்டாலும், பெரும்பாலும் தமனிக்கூழ்மைத் தடிப்பு மற்றும்/அல்லது உயர் இரத்த அழுத்தம் தொடர்புடைய நோய்களையே குறிப்படப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலைமைகளுக்கான காரணங்கள், செயற்பாடுகள் மற்றும் மருத்துவம் பெரும்பாலும் ஒன்றாக உள்ளன.
உலகெங்கும் உயிரிழப்புகளுக்குப் பெரிய காரணமாக இதயக் குழலிய நோய்கள் இருக்கின்றன. இருப்பினும் கடந்த இரு பத்தாண்டுகளாக உயர்வருமானம் உள்ள நாடுகளில் இந்நோயால் இறப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நேரம் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இந்த நோயின் வீச்சும் உயிரிழப்பும் மிக விரைவாக கூடி வருகின்றது. காட்டாக, இதயக் குழலிய நோயால் இறப்பவர் விழுக்காடு உயர் வருமான நாடுகளில் 4%ஆக இருக்க பிறநாடுகளில் 42%ஆக உள்ளது. 2008ஆம் ஆண்டில் மட்டும் 17 மில்லியன் மக்கள் இதயக் குழலிய நோய்களால் மரித்துள்ளனர்.[2] ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் இறப்பவர்களைவிட கூடுதலான அமெரிக்கர்கள் இதய நோய்களால் இறந்துள்ளனர். பெண்களுக்கு இதயநோய் ஏற்படும் வீதமும் கூடி வருகிறது; மார்பகப் புற்றுநோயை விட கூடிய பெண்கள் இந்நோயால் மரித்துள்ளனர். இளமையில் தமனிக் கூழ்மைத் தடிப்புக்கான நோயியல் உயிரியல் காரணிகளைக் குறித்த ஆய்வொன்றில் வளர்சிதை மாற்ற காலத்திலேயே தமனிக் கூழ்மத் தடிப்பு காணப்படுவதாக அறியப்பட்டுள்ளதால் சிறுவயதிலிருந்தே நோய்த்தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளுதல் தேவையாகிறது.[3]
இதய நோய் இருப்பதை உறுதி செய்யும் முன்னரே அதன் அடிப்படையான தமனிக்கூழ்மைத் தடிப்பு பல ஆண்டுகளாக முன்னேறி மோசமாகி இருக்கும். எனவே தமனிக் கூழ்மத் தடிப்பை தடுப்பது குறித்தே அழுத்தம் கொடுக்கப்படுகிறது; இதற்காக நலவாழ்வு உணவு, உடற்பயிற்சி, புகைப்பழக்கம் கைவிடல் போன்ற வாழ்முறை மாற்றங்களை மேற்கொள்ளுதலே நல்லது என வற்புறுத்தப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.