ஆடி (மாதம்)

From Wikipedia, the free encyclopedia

ஆடி (மாதம்)

தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி (ஒலிப்பு) ஆகும். சூரியன் கடக இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 30 அல்லது 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். முற்காலத்தில் தமிழர் ஆடிப்பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுவர். தற்காலத்தில் இவ்வழக்கம் அருகிவிட்டது. இம்மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதிக் கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு ஆகியன கொண்டாடப்படுகின்றன.[1][2] விவசாயத்தில் முதன்மையானது ஆடிப்பட்டம் ஆகும். அதாவது இது ஆடி மாதத்தில் பயிரிடப்படும் பட்டமாகும். ஆடிமாதத்தில் நாட்டார் தெய்வங்கள், குல தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மாரியம்மனுக்கு வழிபாடு நடத்தி கூழ் காய்ச்சி ஊற்றுவர். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில் அம்மனுக்கு ஆடிப் பூரம் கொண்டாடப்படுகிறது. அதேபோல அம்மனுக்கு ஆடி வெள்ளி அன்றும் சிறப்பானதாகும். ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடும் வழக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை மணமகள் வீட்டுக்கு அழைத்து மணமகனை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு மணமகளை தங்கள் வீட்டிலேயே இந்த மாதம் வைத்துக் கொள்ளுவர்.

Thumb
ஆடி மாதத்தில் சூரியனின் நிலை.

ஆடியின் பெயரால் பல சொற்கள் பழக்கத்தில் உள்ளன. அவை ஆடிச் சொல் அத்தோடு போச்சு என்று உறுதியற்ற சொல்லை ஆடியோடு ஒப்பிடுவர். ஆடி மாத மேகத்துக்கு ஆடிக்கரு என்று பெயருண்டு. ஆடிக்கரு ஏமாற்றாது என்ற சொல் வழக்கு உண்டு.[3]

இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்:

  • ஆடிப்பட்டம் தேடிவிதை
  • ஆடி மாதத்தில் குத்திய குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு எடுத்ததாம்
  • ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
  • ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்
  • ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடி
  • ஆடிக்காற்றில் இலவம்பஞ்சு பறந்தாற்போல
  • ஆடிக்காற்றிலே அம்மி பறக்கையிலே இலவும் பஞ்சு எம்மாத்திரம்
  • ஆடியிலே காத்தடித்தால் ஐப்பசியில் மழைவரும்
  • ஆடிக்கு கூழும் அமுதம்

ஆடி மாதம் தட்சிணாயனம் (தென்திசையேகல்) ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாக (கதிர் நகர்வு) பிரிப்பர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) ஆகும். காலை வேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு தென்கிழக்கு திசை ஏகுவான். இந்து தொன்மவியலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக குறிப்பிடப்படுகிறது.

ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.