From Wikipedia, the free encyclopedia
அலன் ஆபிரகாம் (Allen Abraham, 1865 - 9 சூலை 1922) இலங்கைத் தமிழ்க் கல்விமானும், வானியலாளரும் ஆவார்.[1]
அலன் ஆபிரகாம் Allen Abraham FRAS | |
---|---|
பிறப்பு | சுப்பிரமணியர் அம்பலவாணர் 1865 காரைநகர், இலங்கை |
இறப்பு | சூலை 9, 1922 (அகவை 56–57) |
இனம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
பணி | கல்விமான் |
சுப்பிரமணியர் அம்பலவாணர் என்ற இயற்பெயர் கொண்ட அலன் ஆபிரகாம் 1865 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில்[2][3] கந்தப்பர் சுப்பிரமணியர், பார்வதி ஆகியோருக்குப் பிறந்தார்.[2] பெற்றோர் இருவரும் 1876 இல் யாழ்ப்பாணத்தில் பரவிய வாந்திபேதி நோயழிவில் இறந்து போனதை அடுத்து அம்பலவாணர் அவரது தந்தை வழி சகோதரர் கந்தப்பு சரவணமுத்துவின் ஆதரவில் வளர்ந்தார்.[2] கிராமப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் 1881 டிசம்பரில் தெல்லிப்பழையில் நிதியுதவிப் பயிற்சிப் பாடசாலையில் சேர்ந்து படித்தார்.[2] அங்கு அவர் கிறித்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டு அலன் ஆபிரகாம் என்ற பெயரைப் பெற்றார்.[2] 1883 டிசம்பரில் அங்கு கல்வியை முடித்துக் கொண்ட பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை மேற்கொண்டார்.[2] 1888 இல் முதல் தரத்தில் பட்டம் பெற்றார்.[2] 1889 இல் மெட்ராசு மெட்ரிக்குலேசன் சோதனையில் சித்தி அடைந்தார்.[4]
சுப்பர் சங்கரப்பிள்ளை என்பவரின் மகள் முத்தாச்சி என்பவரை அலன் ஆபிரகாம் திருமணம் புரிந்தார்.[4] இவர்களுக்கு கனகசுந்தரம், அருளையா, ஜேன் நல்லம்மா, ரோஸ் ராசம்மா என நான்கு பிள்ளைகள்.[4] முத்தாச்சியின் இறப்பின் பின்னர் தையமுத்து பொன்னையா என்பவரை மறுமணம் புரிந்தார்[4].
யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்கும் போது அங்கு அவர் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார்.[2] பட்டப் படிப்பின் பின்னர் தெல்லிப்பழை பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[4] 1891 இல் மீண்டும் யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4]
1893 ஆம் ஆண்டில் ஆபிரகாம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் First Arts சோதனை எடுத்துச் சித்தியடைந்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து ஆங்கிலம், மெய்யியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4][5] அதன் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4] அங்கு அவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் எஃப்.ஏ, பி.ஏ சோதனைகளை எடுக்கும் மாணவர்களுக்குக் கணிதமும், வானியலும் படிப்பித்தார்.[4] 1914 இல் கல்லூரி அதிபர் வண. பிரவுண் பதவியில் இருந்து இளைப்பாறியதை அடுத்து ஆபிரகாமும் தனது பதவியைத் துறந்தார்.[6] பின்னர் வண. பின்னெல் என்பவர் அதிபராகப் பதவியேற்ற போது மீண்டும் கல்லூரியில் இணைந்தார்.[6]
ஆபிரகாம் தனது வாழ்நாள் முழுவதும் வானியலில் ஆர்வம் காட்டி வந்தார்.[4] மோர்னிங் ஸ்டார், மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி ரோயல் வானியல் கழக இதழ்களில் வானியல் குறித்துக் கட்டுரைகள் எழுதி வந்தார்.[4] ஏலியின் வால்வெள்ளி 1910 மே 19 காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் பூமிக்குக் கிட்டவாக வரும் என்பதை அவர் முன்கூட்டியே துல்லியமாக கணித்தார். அத்துடன் அது பூமியைத் தாக்காது என்றும், வெள்ளிக் கோளின் சுற்றுப் பாதைக்குள் சென்று விடும் என்றும் கணித்தார்.[4][3][7] அவரது ஆய்வுகளுக்காக ஏ. வி. ஜக்கா ரோவ் என்பவரின் பரிந்துரையின் பேரில் 1912 சனவரி 12 இல் ரோயல் வானியல் கழகத்தின் ஆய்வாளராகத் (Fellow) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][7][8][9] வானியல் கழகத்திற்கு இலங்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஆய்வாளர் இவரே.[5][10]
வானியலைத் தவிர்த்து இசை, தமிழ் இலக்கியம், வேளாண்மை, சமூகப் பணிகளிலும் ஆர்வம் காட்டினார்.[4] இவர் இயற்றிய எட்டுப் பாடல்கள் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணக் கோவில்களில் இன்றும் படிக்கப்படுகின்றன.[4] 1915 முதல் 1922 இல் இறக்கும் வரை தென்னிந்திய திருச்சபைகளின் ஒன்றியத்தின் யாழ்ப்பாணப் பேரவையில் செயலாளராகப் பணியாற்றினார்.[11] 1897 முதல் 1909 வரை உதயதாரகை பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.[11]
ஆபிரகாம் 1922 சூன் மாதத்தில் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 1922 சூலை 9 இல் காலமானார்.[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.