அனைத்துலக வணிகம், நாடுகளிடை வணிகம் அல்லது பன்னாட்டு வணிகம் (International trade) என்பது நாடுகளின் ஆட்சிப் பகுதிகளை அல்லது அவற்றின் எல்லைகளைக் கடந்து நடைபெறுகின்ற, பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் பரிமாற்றங்களைக் குறிக்கும். பல நாடுகளில் இவ்வணிகம் அவற்றின் மொத்த தேசிய உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றது. உலக வரலாற்றில் பன்னெடுங் காலமாகவே அனைத்துலக வணிகம் நடைபெற்று வரினும், அதன் பொருளாதார, சமூக, அரசியல் முக்கியத்துவம் அண்மைக் காலங்களில் பெரிதும் உயர்ந்து காணப்படுகின்றது. தொழில்மயமாதல், மேம்பட்ட போக்குவரத்து, உலகமயமாதல், பன்னாட்டு நிறுவனங்கள், outsourcing போன்றவை அனைத்துலக வணிகத்தில் பெருந்தாக்கங்களை உண்டாக்கி இருக்கின்றன. அனைத்துலக வணிகத்தின் அதிகரிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் உலகமயமாதலுக்குப் பெரிதும் தேவைப்படுகின்ற ஒன்றாகும். உலக வல்லரசு என்று கருதப்படுகின்ற எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான மூலமாக அனைத்துலக வணிகம் விளங்கி வருகின்றது. அனைத்துலக வணிகம் இல்லையேல் நாடுகள் தங்கள் தேவைகளை உள்நாட்டில் காணப்படும் வளங்களைக் கொண்டே நிறைவு செய்யவேண்டி இருக்கும்.

யூரோசியா பகுதியில் பழைய சில்க் பாதை வர்த்தக தடங்கள்.

தொழில்மயமாக்கம், மேம்பட்ட போக்குவரத்து, உலகமயமாக்கம், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு ஒப்பந்த சேவை கொள்முதல் இவை அனைத்துமே சர்வதேச வர்த்தக அமைப்பில் ஒரு பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பதென்பது உலகமயமாக்கத்தின் தொடர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். சர்வதேச வர்த்தகம் இல்லாமல், நாடுகள் தங்களது சொந்த எல்லைகளுக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்டே சமாளிக்க வேண்டியிருக்கும்.

ஒரு வர்த்தகம் எல்லைக்குள் செய்யப்பட்டாலும் எல்லை கடந்து செய்யப்பட்டாலும் அந்த வர்த்தகத்தில் ஈடுபடும் இரு தரப்பின் நடவடிக்கைகளும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதால் கொள்கையளவில் சர்வதேச வர்த்தகத்திற்கும் உள்நாட்டு வர்த்தகத்திற்கும் வேறுபாடு கிடையாது. பிரதான வித்தியாசம் என்னவென்றால் சர்வதேச வர்த்தகம் உள்நாட்டு வர்த்தகத்தை விட செலவு மிகுந்ததாய் இருக்கும். இதற்குக் காரணம் ஒரு எல்லை என்பது ஏராளமான கூடுதல் செலவுகளைக் கொண்டு வரலாம். வரிகள், எல்லையில் ஏற்படும் தாமதங்களால் ஆகும் நேரச் செலவுகள் மற்றும் மொழி, சட்ட அமைப்பு அல்லது கலாச்சாரம் ஆகிய நாட்டுக்கு நாடு வேறுபடும் அம்சங்களுடன் தொடர்புபட்ட செலவுகள் ஆகியவை இந்த கூடுதல் செலவுகளில் சில.

மூலதனம் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய உற்பத்திக் காரணிகள் உள்நாட்டில் இடம்பெயர்வது என்பது நாடுகளுக்கு இடையே இடம்பெயர்வதைக் காட்டிலும் எளிதாக நடைபெறும் என்பது உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகங்களுக்கு இடையிலான இன்னொரு வித்தியாசம் ஆகும். இதனால் சர்வதேச வர்த்தகம் என்பது பெரும்பாலும் பொருட்கள் மற்றும் சேவைகளிலான வர்த்தகம் என்கிற அளவில் வரம்புபட்டு இருக்கிறது. மூலதனம், தொழிலாளர் அல்லது மற்ற உற்பத்திக் காரணிகளின் பரிவர்த்தனை எல்லாம் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே இருக்கும். அப்போது பொருட்கள் மற்றும் சேவைகளிலான வர்த்தகம் உற்பத்திக் காரணிகளிலான வர்த்தகத்திற்கு ஒரு பதிலீடாக சேவை செய்யலாம். ஒரு உற்பத்தி காரணியை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, ஒரு நாடு அந்த உற்பத்திக் காரணியை திறம்படப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். அமெரிக்கா சீனாவின் உழைப்பு செறிந்த பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். சீன தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, சீன தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்கிறது.

சர்வதேச வர்த்தகம் என்பது பொருளாதாரக் கல்வியின் ஒரு பிரிவு ஆகும். சர்வதேச நிதி உடன் சேர்ந்து இது சர்வதேச பொருளாதாரத்தின் ஒரு பெரும் பிரிவைக் குறிப்பிடுகிறது.

சர்வதேச வர்த்தகத்தில் பல்தரப்பட்ட நாணய வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமான நாணய் வகைகளை பெரும்பாலும் நாடுகள் மற்றும் மத்திய வங்கிகள் தங்களது அந்நிய செலாவணி கையிருப்பாக வைத்துக் கொள்கின்றன. 1995 மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு நாணய வகையிலுமான உலகளாவிய கையிருப்பு பெருக்கத்தை இங்கு காணலாம்: அமெரிக்க டாலர் தான் உலகின் மிகப் பரவலான நாணய வகையாக இருக்கிறது. யூரோவுக்கும் நல்ல கிராக்கி உள்ளது.

மாதிரிகள்

வர்த்தகத்தின் போக்குகளை கணிக்கவும் வரிகள் போன்ற வர்த்தக கொள்கைகளின் விளைவுகளை ஆராயவும் பல்வேறு மாதிரிகள் முன்வைக்கப்படுகின்றன.

ரிகார்டியன் மாதிரி

Thumb
பனாமா கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையிலான சர்வதேச கடல் வர்த்தகத்திற்கு மிக முக்கியமானதாய் விளங்குகிறது.

ரிகார்டியன் மாதிரி ஒப்பீட்டு அனுகூலத்தின் மீது கவனம் வைக்கிறது. சர்வதேச வர்த்தகம் குறித்த தத்துவத்தில் இது மிக முக்கியமான கருத்தாக்கம் ஆகும். ரிகார்டியன் மாதிரியில் நாடுகள் தாங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பொருட்களை சிறப்பாக உற்பத்தி செய்கின்றன. மற்ற மாதிரிகளில் இருந்து வேறுபடும் விதத்தில் ரிகார்டியன் மாதிரியானது, நாடுகள் நிறைய வகை பொருட்களை உற்பத்தி செய்வதை விட குறிப்பான பொருட்களில் தான் நிபுணத்துவத்தை முழுமையாக்க முயற்சிக்கும் என மதிப்பிடுகிறது.

அத்துடன் ஒரு நாட்டிற்குள் இருக்கும் தொழிலாளர் மற்றும் மூலதன அளவு போன்ற காரணி ஆஸ்திகளையும் ரிகார்டியன் மாதிரி நேரடியாய் கருத்தில் கொள்வதில்லை. ரிகார்டியன் மாதிரியின் முக்கியமான சாதகம் என்னவென்றால் இது நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப வேறுபாடுகளை அனுமானிக்கிறது.[சான்று தேவை] ரிகார்டியன் மற்றும் ரிகார்டோ-ஸ்ரஃபா மாதிரிகளில் (அடுத்த துணைப் பிரிவைக் காணவும்) தொழில்நுட்ப இடைவெளி எளிதாக உட்சேர்க்கப்படுகிறது.

ரிகார்டியன் மாதிரி பின்வரும் கருதுகோள்களைக் கொள்கிறது:

  1. உற்பத்தியின் அடிப்படையான உள்ளீடு தொழிலாளர் உழைப்பே. (தொழிலாளர் தான் மதிப்பை உருவாக்குவதில் இறுதிக்கட்ட ஆதாரமாகக் கருதப்படுகிறார்).
  2. நிலையான தொழிலாளர் விளிம்பு உற்பத்தி (MPL) (தொழிலாளர் உற்பத்தித் திறன் மாறிலியாக உள்ளது; நிலையான ஈவுகள், மற்றும் எளிய தொழில்நுட்பம்)
  3. பொருளாதாரத்தில் குறைந்த அளவில் தொழிலாளர் உழைப்பு
  4. துறைகளுக்கு இடையே தொழிலாளர்கள் எளிதில் நகர்வர். ஆனால் சர்வதேசரீதியாக அல்ல.
  5. சிறந்த போட்டி (கொள்முதல் விலை அடிப்படையில்).

ரிகார்டியன் மாதிரி குறைந்த காலத்தில் அளவிடுவதால் தொழில்நுட்பம் சர்வதேசரீதியாய் வித்தியாசப்படுகிறது. நாடுகள் தங்கள் ஒப்பீட்டு அனுகூலத்தை பின்பற்றுகின்றன மற்றும் நிபுணத்துவத்திற்கு அனுமதிக்கின்றன என்கிற உண்மையை இது ஆதரிக்கிறது.

ரிகார்டியன் மாதிரியின் நவீன வளர்ச்சி

ரிகார்டியன் வர்த்தக மாதிரியை கிரஹாம், ஜோன்ஸ், மெக்கென்சி மற்றும் பலர் ஆய்வு செய்தனர். எல்லா தத்துவங்களிலும் இடைநிலை பொருட்கள், அல்லது மூலப்பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் போன்ற வர்த்தக உள்ளீட்டு பொருட்கள் விடுபட்டிருந்தன. இந்த இடைநிலைப் பொருட்களை வர்த்தகத்தில் இருந்து விலக்கினால் குறிப்பிடத்தகுந்த ஆதாயங்கள் தொலைந்து போகும் என்பதை மெக்கென்சி (1954), ஜோன்ஸ் (1961) மற்றும் சாமுவேல்சன் (2001) ஆகியோர் வலியுறுத்தினர். “பருத்தி இங்கிலாந்திலேயே விளைவிக்கப்பட வேண்டியிருந்தால் லங்காஷயர் பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்ய இயன்றிருக்காது என்று ஒரு கணத்தில் யாரும் சொல்லி விடுவர்” என்று மெக்கன்சி தனது புகழ்பெற்ற கருத்துரையில் (1954, ப. 179) ஒருமுறை தெரிவித்தார்.[1]

சமீபத்தில், வர்த்தகம் செய்யப்படும் இடைநிலைப் பொருட்களையும் உட்சேர்த்து இந்த தத்துவம் விரிவாக்கப்பட்டது.[2] இதன்மூலம் “தொழிலாளர்கள் மட்டும்” என்கிற அனுமானம் தத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டது. இவ்வாறாக, புதிய ரிகார்டியன் மாதிரியானது (இது சில சமயங்களில் ரிகார்டோ-ஸ்ராஃபா மாதிரி என்றும் அழைக்கப்படுகிறது) சித்தாந்தரீதியாக நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்யப்படும் எந்திரங்கள், மூலப் பொருட்கள் போன்ற மூலதனப் பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது. உலகளாவிய வர்த்தகத்தின் சமயத்தில், ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியை விடவும் இது மிக மிக யதார்த்தமான ஒன்றாய் அமைந்துள்ளது. ஏனெனில் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரி மூலதனம் ஒரு நாட்டிற்குள் நிலையானதாக இருக்கிறதென்றும் சர்வதேசரீதியாக நகர்வதில்லை என்றும் அனுமானித்துக் கொள்கிறது.[3]

ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரி

1900களின் ஆரம்பத்தில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த எலி ஹெக்ஸ்கெர் மற்றும் பெர்டில் ஓலின் ஆகிய இரண்டு பொருளாதார வல்லுநர்கள் காரணி விகிதாச்சார தத்துவம் என்னும் சர்வதேச வர்த்தகம் குறித்த ஒரு சித்தாந்தத்தை உருவாக்கினர். குறைவில்லாமல் கிடைக்கக் கூடிய ஆதாரவளங்களைக் (காரணிகள்) கொண்டு உருவாக்கப்படும் பொருட்களை நாடுகள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் குறைவாய் கிடைக்கக் கூடிய ஆதாரவளங்கள் கொண்டு உருவாக்கக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரி வலியுறுத்துகிறது. ஒப்பீட்டு அனுகூலம் மற்றும் முற்றுமுதலான அனுகூலம் குறித்த தத்துவங்களில் இருந்து இந்த தத்துவம் வேறுபடுகிறது. ஏனெனில் இந்த தத்துவங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளின் உற்பத்திக்கான உற்பத்தி நிகழ்முறையில் உற்பத்தித் திறன் மீது கவனத்தைக் குவிக்கிறது. ஆனால் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியோ, தாராளமாய் கிடைக்கத்தக்கதாய் இருக்கிற (எனவே மலிவானதாயும் இருக்கும்) காரணிகளைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஒரு நாடு நிபுணத்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அடிப்படை ஒப்பீட்டு அனுகூலம் குறித்த ரிகார்டியன் மாதிரிக்கான ஒரு மாற்றாக ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரி உருவாக்கப்பட்டது. சிக்கலான நிகழ்முறையைக் கொண்டிருந்தாலும், அதன் கணிப்புகளும் கூடுதல் துல்லியமாய் இருந்ததாக நிரூபணம் ஆகவில்லை. எவ்வாறிருந்தாலும், சித்தாந்த பார்வையில் பார்த்தால், நவசெவ்வியல் விலை எந்திரமுறையை சர்வதேச வர்த்தக தத்துவத்திற்குள் சேர்த்து இது ஒரு நேர்த்தியான தீர்வை அளித்திருப்பதைக் காணலாம்.

சர்வதேச வர்த்தகத்தின் போக்கு காரணி ஆஸ்திகளின் வித்தியாசங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று இந்த தத்துவம் வாதிடுகிறது. நாடுகள் உள்நாட்டில் தாராளமாய் கிடைக்கக் கூடிய காரணிகளை செறிந்த முறையில் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்றும், உள்நாட்டில் பற்றாக்குறையாய் கிடைக்கக் கூடிய காரணிகளை செறிந்த முறையில் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் என்றும் இது கணிக்கிறது. ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் அனுபவரீதியான பிரச்சினைகள் வாசிலி லியோண்டிப் செய்த சோதனைகளில் வெளிப்படுத்தப்பட்டன. அமெரிக்கா மூலதனம் தாராளமாய் கொண்டிருந்த போதிலும் தொழிலாளர் உழைப்பு செறிந்திருந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தலைப்பட்டதை அவர் கண்டார். இந்த சிக்கல் லியோண்டிப் புதிர் என்று அழைக்கப்பட்டது.

ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரி பின்வரும் அடிப்படையான கருதுகோள்களைக் கொள்கிறது:

  1. துறைகளுக்கு இடையில் தொழிலாளர்கள் மற்றும் மூலதனத்தின் சுதந்திரமான நகர்வு
  2. காலணி உற்பத்தி என்பது தொழிலாளர் உழைப்பு செறிந்தது. கணினிகளின் உற்பத்தி மூலதனம் செறிந்தது
  3. இரண்டு நாடுகளுக்கு இடையே தொழிலாளர் உழைப்பு மற்றும் மூலதனத்தின் அளவு வேறுபடும் (ஆஸ்தி வித்தியாசம்)
  4. சுதந்திர சந்தை
  5. நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பம் அதே வகையாகத் தான் இருக்கிறது (நெடுங்கால அடிப்படையில்)
  6. சுவைகள் ஒரே மாதிரியானவை.

ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் பிரச்சினை என்னவென்றால் இது மூலதனப் பொருட்களின் (கச்சாப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள்) வர்த்தகத்தை விலக்குகிறது. ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியில், தொழிலாளர்கள் மற்றும் மூலதனம் என்பது ஒவ்வொரு நாட்டின் ஆஸ்தியாக அமைந்தவை; நிலையானவை. நவீன பொருளாதாரத்தில் மூலதனப் பொருட்கள் சர்வதேசரீதியாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இடைநிலைப் பொருட்களின் வர்த்தகத்தில் இருந்து கிடைக்கக் கூடிய ஆதாயங்களும் கணிசமானதாய் இருக்கிறது. இதைத் தான் சாமுவேல்சன் (2001) வலியுறுத்துகிறார்.

ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் யதார்த்த நிலையும் பொருத்தமும்

பல பொருளாதார வல்லுநர்கள் ரிகார்டோ தத்துவத்தை விட ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியையே தேர்ந்தெடுக்கின்றனர். இதற்குக் காரணம் இந்த தத்துவம் எளிமைப்படுத்தும் அனுமானங்களை குறைவான எண்ணிக்கையில் மேற்கொள்கிறது.[சான்று தேவை] 1953 ஆம் ஆண்டில், வாசிலி லியோண்டிப் ஒரு ஆய்வினை வெளியிட்டார். இதில் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின்[4] பொருத்தம் குறித்து அவர் பரிசோதனைகள் செய்திருந்தார். அமெரிக்கா மூலதனத்தை ஏராளமாய் கொண்டிருந்தது, எனவே இத்தத்துவத்தின் படி அமெரிக்கா மூலதனம் செறிந்த பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்யவும் உழைப்பு செறிந்த பொருட்களை இறக்குமதி செய்யவும் வேண்டும். ஆனால் அமெரிக்காவின் ஏற்றுமதி அதன் இறக்குமதிப் பொருட்களை விடவும் குறைந்த அளவிலேயே மூலதனச் செறிவு கொண்டதாய் இருப்பதை லியோண்டிப் கண்டறிந்தார்.

லியோண்டிப் புதிர் வெளிவந்த பிறகு, பல ஆராய்ச்சியாளர்களும் அளவீட்டுக்கான புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியோ அல்லது புதிய பொருள்புரிவுகளை அளித்தோ ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியைக் காப்பாற்ற முற்பட்டனர். லியோண்டிப் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரிக்கு சரியாக பொருள்விளக்கம் அளிக்கவில்லை என்றும், அவ்வாறு அளித்தால் புதிர் எதுவும் தோன்றாது என்றும் லீமர்[5] வலியுறுத்தினார். லீமர் சொல்வது சரியாக இருந்தால் அமெரிக்க தொழிலாளர்களின் சராசரி நுகர்வு உலக தொழிலாளர் சராசரி நுகர்வைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை பிரெசர் மற்றும் சௌத்ரி[6] சுட்டிக் காட்டினர்.

இன்னும் பல சோதனைகள் நடந்தன என்றாலும் அநேகமானவை தோல்வியைத் தழுவின.[7][8] கிரக்மேன் மற்றும் ஓப்ஸ்ட்ஃபெல்டு மற்றும் போவென், ஹாலண்டர் மற்றும் வியானெ உள்ளிட்ட புகழ்மிக்க பாடப் புத்தக எழுத்தாளர்களும் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் நம்பகத்தன்மை குறித்து எதிர்மறையாய் கருத்து தெரிவித்தனர்.[9][10]. அனுபவவாத ஆராய்ச்சியின் நெடிய வரலாற்றை ஆராய்ச்சி செய்த பின் போவென், ஹாலண்டர் மற்றும் வியானெ பின்வருமாறு முடிவுக்கு வந்தனர்: “தாராளமாய் கிடைக்கும் காரணி தத்துவம் [ஹெக்ஸ்கெர்-ஓலின் தத்துவம் மற்றும் அதன் வளர்ச்சியுற்ற பல-பண்டம் மற்றும் பல காரணி வடிவம்] மீதான சமீபத்திய சோதனைகளில் H-O-V சமன்பாடுகளை நேரடியாக ஆராயும் போது அவையே தத்துவத்தை நிராகரிக்கவும் செய்கின்றன.”[10]:321

காரணி விலை சமப்படுத்தல் [ஹெக்ஸ்கெர்-ஓலின் தத்துவத்தின் ஒரு விளைவு] நனவாகும் அறிகுறி அதிகமாய் தென்படவில்லை. நாடுகளுக்கு இடையே ஒரேமாதிரியான உற்பத்தி செயல்படுவதாக ஹெக்ஸ்கெர்-ஓலின் தத்துவம் அனுமானித்துக் கொள்கிறது. இது மிகவும் யதார்த்தமற்றது. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப இடைவெளி ஏழை நாடுகளின்[11] முக்கிய கவலையாக இருக்கிறது.

குறிப்பிட்ட காரணிகள் மாதிரி

Thumb
உலகளாவிய போட்டித்திறன் குறியீடு (2008-2009): சர்வதேச வர்த்தக சூழலில் அரசுகளின் செயல்பாட்டுத் திறத்தைக் கண்டறிவதில் போட்டித்திறன் என்பது முக்கியமான தகுதிவகையாக இருக்கிறது.

இந்த மாதிரியில் குறுகிய காலத்தில் தொழிற்சாலைகளுக்கு இடையில் தொழிலாளர்களின் நகர்வு சாத்தியம். மூலதனத்தின் நகர்வு சாத்தியமில்லை. எனவே, இந்த மாதிரி ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் ‘குறுகிய கால’ வடிவம் என்று குறிப்பிடப்படுவதுண்டு. குறுகிய காலத்தில் உருரீதியான மூலதனம் போன்ற உற்பத்தியின் குறிப்பிட்ட காரணிகள் தொழிற்சாலைகளுக்கு இடையே எளிதாக நகர்த்தப்பட முடியாது என்று கருதுவதே இதன் பெயர்க் காரணமாய் அமைந்தது. பொருளின் விலையில் ஏற்றம் ஏற்படுமானால் அந்த பொருளுக்கான உற்பத்திக் காரணியின் உரிமையாளர்கள் உண்மையான ஆதாயத்தைப் பெறுவார்கள் என இந்த தத்துவம் கூறுகிறது.

இது தவிர, உற்பத்தியின் குறிப்பிட்ட காரணிகளில் எதிரெதிரான இரண்டின் (அதாவது தொழிலாளர்கள் மற்றும் மூலதனம்) உரிமையாளர்கள் தொழிலாளர்கள் குடியேற்றம் செய்யப்படும் விடயத்தில் எதிரெதிரான கருத்துகள் கொண்டிருப்பர். இதற்கு நேர்மாறாய், மூலதன ஆஸ்தி அதிகரித்தால் உண்மையில் மூலதனம் மற்றும் தொழிலாளர் உழைப்பு ஆகிய இரண்டின் உரிமையாளர்களுமே ஆதாயமடைவார்கள். இந்த மாதிரி சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு மிகப் பொருத்தமாய் அமைகிறது. இந்த மாதிரி வருவாய் பகிர்வு குறித்து புரிந்து கொள்வதற்கு மிகச் சிறந்து விளங்கினாலும் வர்த்தகத்தின் போக்கு குறித்த விவாதத்தில் சங்கடத்தைக் கொண்டுவருகிறது.

புதிய வர்த்தக தத்துவம்

மேற்கண்ட இரண்டு மாதிரிகளும் விளக்குவதற்கு சிரமப்படுகிற வர்த்தகம் குறித்த பல்வேறு உண்மைகளை விளக்குவதற்கு புதிய வர்த்தக தத்துவம் முயற்சி செய்கிறது. ஒத்த அளவிலான காரணி ஆஸ்தி அளவு மற்றும் உற்பத்தித் திறன் அளவுகளையும், பெரும் அளவிலான பன்னாட்டு உற்பத்தியையும் (அதாவது அந்நிய நேரடி முதலீடு) கொண்ட நாடுகள் இடையே தான் அநேக வர்த்தகம் நடைபெறுகிறது என்பதும் இந்த உண்மைகளில் ஒன்று. இந்த கட்டமைப்புக்கான ஒரு உதாரணமாக, பொருளாதாரம் ஏகபோக போட்டியையும் முதலீட்டுக்கு ஏற்ப பெருகும் வருவாயையும் வெளிப்படுத்துகிறது.

உலக சந்தையாளர் புரிந்துகொள்ள வேண்டிய மூன்று அடிப்படை தத்துவங்கள் உள்ளன: 1. ஒப்பீட்டு அனுகூலத் தத்துவம் 2. வர்த்தக அல்லது தயாரிப்பு வர்த்தக சுற்று தத்துவம் 3. வர்த்தக நோக்குநிலை தத்துவம்

ஈர்ப்பு மாதிரி

மேலே கண்ட தத்துவார்த்த மாதிரிகளை விட வர்த்தக போக்குகள் குறித்த மிகவும் அனுபவரீதியான பகுப்பாய்வினை இந்த ஈர்ப்பு மாதிரி வழங்குகிறது. ஈர்ப்பு மாதிரியானது தனது அடிப்படையான வடிவத்தில் நாடுகளுக்கு இடையிலான தூரம் மற்றும் நாட்டின் பொருளாதார அளவுகளின் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் வர்த்தகத்தை முன்கணிக்கிறது. இரண்டு பொருட்களின் அளவுகள் மற்றும் தூரத்தை கருத்தில் கொண்டு கூறப்படும் நியூட்டனின் ஈர்ப்பு விதியை ஒத்ததாய் இந்த மாதிரி உள்ளது. அனுபவரீதியாக இந்த மாதிரி வலிமையானதாக இருப்பதை பொருளாதார அளவீடுகள் மூலமான ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. வருவாய் அளவு, நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள், மற்றும் வர்த்தக கொள்கைகள் ஆகியவையும் இந்த மாதிரியின் விரிவாக்கப்பட்ட வடிவங்களில் சேர்க்கப்படுகின்றன.

முன்னணி வர்த்தக நாடுகள்

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நாடு ...
தரவரிசை நாடு ஏற்றுமதி + இறக்குமதி விபர நிலவர
தேதி
1  ஐக்கிய அமெரிக்கா $2,439,700,000,000 2009 est.
-  ஐரோப்பிய ஒன்றியம் (கூடுதல்-EU27) $2,286,000,000,000 2009 [12]
2  செருமனி $2,209,000,000,000 2009 மதிப்பீடு.
3  சீனா $2,115,500,000,000 2009 மதிப்பீடு.
4  சப்பான் $1,006,900,000,000 2009 மதிப்பீடு.
5  பிரான்சு $989,000,000,000 2009 மதிப்பீடு.
6  இங்கிலாந்து $824,900,000,000 2009 மதிப்பீடு.
7  நெதர்லாந்து $756,500,000,000 2009 மதிப்பீடு.
8  இத்தாலி $727,700,000,000 2009 மதிப்பீடு.
-  ஆங்காங் $672,600,000,000 2009 மதிப்பீடு.
9  தென் கொரியா $668,500,000,000 2009 மதிப்பீடு.
10  பெல்ஜியம் $611,100,000,000 2009 மதிப்பீடு.
11  கனடா $603,700,000,000 2009 மதிப்பீடு.
12  எசுப்பானியா $508,900,000,000 2009 மதிப்பீடு.
13  உருசியா $492,400,000,000 2009 மதிப்பீடு.
14  மெக்சிக்கோ $458,200,000,000 2009 மதிப்பீடு.
15  சிங்கப்பூர் $454,800,000,000 2009 மதிப்பீடு.
16  இந்தியா $387,300,000,000 2009 மதிப்பீடு.
17  தாய்வான் $371,400,000,000 2009 மதிப்பீடு.
18  சுவிட்சர்லாந்து $367,300,000,000 2009 மதிப்பீடு.
19  ஆத்திரேலியா $322,400,000,000 2009 மதிப்பீடு.
20  ஐக்கிய அரபு அமீரகம் $315,000,000,000 2009 மதிப்பீடு.
மூடு

ஆதாரம் : ஏற்றுமதி பரணிடப்பட்டது 2008-10-04 at the வந்தவழி இயந்திரம். இறக்குமதி பரணிடப்பட்டது 2008-10-04 at the வந்தவழி இயந்திரம். உலக உண்மைகள் புத்தகம்.

சர்வதேச வர்த்தக வரன்முறைகள்

மரபுரீதியாக வர்த்தகம் இரண்டு நாடுகள் இடையேயான இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. நூற்றாண்டுகாலமாக பல நாடுகள் சர்வதேச வர்த்தகத்திற்கு மிக உயர்ந்த வரிவிதிப்புகளையும் ஏராளமான கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக இங்கிலாந்தில், சுதந்திர சந்தை மீதான நம்பிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.[சான்று தேவை] அதன்பின் மேற்கு நாடுகளில் இந்த சிந்தனை ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இரண்டாம் உலகப் போர் காலம் துவங்கி வரிவிதிப்புகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது உடன்பாடு (GATT) மற்றும் உலக வணிக அமைப்பு ஆகிய சர்ச்சைக்குரிய பல்தரப்பு ஒப்பந்தங்கள் எல்லாம் சுதந்திர சந்தையை ஊக்குவித்து ஒரு உலகளாவிய வரன்முறைக்குட்பட்ட வர்த்தக கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்தன. இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் எல்லாம் பல சமயங்களில் வளரும் நாடுகளுக்கு அனுகூலம் இல்லாதவை என அதிருப்தி மற்றும் எதிர்ப்பையே சம்பாதித்துள்ளன.

பொதுவாக பொருளாதாரரீதியாக மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் சுதந்திர சந்தையை வலிமையுடன் ஆதரிக்கின்றன. என்றாலும் தேர்ந்தெடுத்த துறைகளில் அவை சுயகாப்புவாதத்தில் ஈடுபடுகின்றன. உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விவசாயப் பொருட்கள் இறக்குமதியில் சுயகாப்பு வரிவிதிப்புகளை விதிக்கின்றன.[சான்று தேவை] நெதர்லாந்தும் இங்கிலாந்தும் தான் தாங்கள் பொருளாதார ஆதிக்கம் செலுத்திய காலங்களில் முதலில் சுதந்திர சந்தைக்கு வலிமையான ஆதரவாளர்களாய் திகழ்ந்தனர். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை இதன் ஆதரவு நாடுகளாய் உள்ளன. இப்போது பொருளாதாரரீதியாக வலிமை பெற்று வரும் இன்னும் பல நாடுகளும் (இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள்) சுதந்திர சந்தைக்கான ஆதரவு நாடுகளாக உருவாகியுள்ளன. வரியமைப்பு விகிதங்கள் வீழ்ச்சி காண்பதால் அந்நிய நேரடி முதலீடு, கொள்முதல், மற்றும் வர்த்தக வசதி உள்ளிட்ட வரி அல்லாத நடவடிக்கைகளிலும் பேச்சுவார்த்தைக்கான விருப்பம் பெருகிவருகிறது.[சான்று தேவை] வர்த்தக மற்றும் சுங்க நடைமுறைகளுக்கு ஆகும் பரிவர்த்தனை செலவை கருத்தில் கொண்டு இந்த சிந்தனை எழுகிறது.

மரபுரீதியாக விவசாய நலன்கள் சுதந்திர சந்தைக்கு ஆதரவாய் இருப்பதையும் உற்பத்தி துறைகள் பெரும்பாலும் சுயகாப்புவாதத்தை ஆதரிப்பதையும் காண முடியும். [சான்று தேவை]ஆயினும் சமீப வருடங்களில் இந்த போக்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் விவசாய நலன்கள் தான் முக்கிய சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளை விட விவசாயப் பொருட்களுக்கு கூடுதலான சுயகாப்பு நடவடிக்கைகளை அனுமதிக்க பொறுப்பாக செயல்பட்டுள்ளன.

மந்தநிலை சமயங்களில் உள்நாட்டு தொழிற்சாலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இறக்குமதி வரிவிதிப்புகளை அதிகப்படுத்த வலிமையான உள்நாட்டு நெருக்குதல் பெருகுகிறது. பெருமந்த நிலை சமயத்தில் உலகெங்கும் இந்த போக்கு நிகழ்ந்தது. இந்த வரிவிதிப்புகள் தான் உலக வர்த்தகத்தில் நேர்ந்த வீழ்ச்சிக்கு காரணம் என பல பொருளாதார வல்லுநர்களும் கூறினர். அத்துடன் இது மந்தநிலையை தீவிரமாய் ஆழப்படுத்தியதாகவும் பலர் நம்பினர்.

சர்வதேச வர்த்தக வரன்முறைகளானவை உலக அளவில் உலக வர்த்தக அமைப்பு மூலமாகவும், மற்றும் தென் அமெரிக்காவில் MERCOSUR, வட அமெரிக்க சுதந்திர சந்தை ஒப்பந்தம் (NAFTA - இது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவுக்கும் 27 சுதந்திர அரசுகள் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம்) போன்ற பல பிராந்திய ஒப்பந்தங்கள் மூலமாகவும் அமல்படுத்தப்படுகின்றன. அமெரிக்க சுதந்திர சந்தை பகுதி (FTAA) ஒன்றை நிறுவுவதற்கு 2005 ஆம் ஆண்டு நடந்த புனோஸ் ஏரெஸ் பேச்சுவார்த்தைகள் லத்தீன் அமெரிக்க மக்களின் எதிர்ப்பின் காரணமாக தோல்வியுற்றது. முதலீட்டு மீதான பல்தரப்பு ஒப்பந்தம் (MAI) போன்ற இத்தகைய மற்ற சில ஒப்பந்தங்களும் சமீப வருடங்களில் தோல்வியடைந்திருக்கின்றன.

சர்வதேச வர்த்தகத்தில் உள்ள ஆபத்து

உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வெளிப்படையாய் காணக்கூடிய அதே அபாயங்களை சர்வதேச எல்லைகளைக் கடந்து வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் எதிர்கொள்கின்றன. உதாரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்:

  • வாங்கியவரின் திவால்நிலை (கொள்முதல் செய்தவர் பணம் கொடுக்க முடியவில்லை);
  • ஏற்க மறுப்பு (கோரிய நிர்ணய அளவுகளில் பொருட்கள் இல்லை என்று கூறி வாங்கியவர் பொருட்களை நிராகரிப்பது);
  • கடன் அபாயம் (பணத்தை செலுத்தும் முன்னரே வாங்கியவரின் வசம் பொருட்கள் போய் சேர்ந்து விடுவது);
  • வரன்முறை அபாயம் (உதாரணமாக விதிகளில் ஒரு மாற்றம் நிகழ்ந்து பரிவர்த்தனை தடை செய்யப்படலாம்);
  • குறுக்கீடு (ஒரு பரிவர்த்தனையில் அரசாங்க நடவடிக்கை குறுக்கிடுவது);
  • அரசியல் அபாயம் (தலைமையில் நிகழும் மாற்றம் பரிவர்த்தனைகள் அல்லது விலைகளில் குறுக்கிடலாம்); அத்துடன்
  • போர் மற்றும் கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகள்.

இத்துடன் சேர்த்து செலாவணி பரிவர்த்தனை விலைகள் எதிர்மறையாய் போகும் அபாயத்தையும் சர்வதேச வர்த்தகம் எதிர்கொள்கிறது (அதேபோல் சில சமயங்களில் இது சாதகத்தையும் கொண்டுவர முடியும்).[13]

காட்சிக்கூடம்

அடிக்குறிப்புகள்

வெளிப்புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.