அக்னி தேவன் இந்துக்களால் வணங்கப்படும் தெய்வம். ருக்கு வேதத்தில் இந்திரனுக்கு அடுத்து அதிக பாடல்களில் போற்றப்படுபவர். வேதப்பாடல்களில் இருநூறு வரையான பாடல்கள் அக்கினியைப் போற்றுகின்றன. அரணிக்கட்டைகளே இவனது உறைவிடம் என்றும் பிறந்ததும் தனது தாய் தந்தையரை விட்டு நீங்கி விடுவான் என்றும் கூறப்படுகின்றார். ஆயிரம் நாக்குகள் கொண்டவன் என்றும் செந்நிற மேனி உடையவன் என்றும் வர்ணிக்கப்படுகின்றார். வேள்விகளின் போது இடப்படுகின்ற ஆகுதிப் பொருட்களை தேவர்களிடம் கொண்டு சேர்ப்பிப்பவனாக விளங்குவதால் இவன் புரோகிதன் என்றும் அழைக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் அக்னி தேவன், அதிபதி ...
அக்னி தேவன்
ஆடு வாகனத்தில் அமர்ந்திருக்கும் அக்னி தேவன்
அதிபதிநெருப்பு
தேவநாகரிअग्नि
சமசுகிருதம்Agni
தமிழ் எழுத்து முறைஅக்னி
வகைதேவர்
இடம்அக்னி லோகம்
துணைசுவாகா தேவி
குழந்தைகள்நீலன்,ஸ்வரோசிஷ மனு,அகன்யா
மூடு
ஏழு கைகள் கொண்ட அக்னி தேவன் மனைவியுடன்

பதினெண் புராணங்களில் ஒன்றான அக்கினி புராணம் அக்கினி தெய்வத்திற்கு முதன்மையளிக்கின்றது. அட்டதிக்கு பாலகர்களில் தென்கிழக்குத் திசைக்கு உரியவனாக இடம்பெறுகின்றார். இவர் தேவர்களின் புரோகிதராக ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார். அக்னி தேவனுக்கு மூன்று உருவங்கள் உண்டு: நெருப்பு, மின்னல், சூரியன். சூரியனின் ஆற்றலாக அக்னி தேவன் விளங்குகிறார்.

அக்கினி வேதகாலத்தில் வழிபடப்பட்ட இந்துக் கடவுளர்களுள் ஒருவர். இவர் வேதங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றார். மண்ணுக்குரிய கடவுளாகப் போற்றப்பட்டார். நெருப்பின் அதிபதியான இவர் நெருப்பில் இடப்படும் நிவேதனங்களை ஏற்றுக்கொள்பவராக உள்ளார். வேள்விகளில் இடப்படும் நிவேதனங்களை மற்ற தெய்வங்களுக்கு அக்னி தேவனே எடுத்துச்செல்கிறார். அக்னி மற்ற தேவர்களைப் போல என்றும் இளமை உடையவராக கருதப்படுகிறார். இவர் தானாக பிறந்ததை குறிக்கும் வகையில், குச்சிகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து கடைந்து நெருப்பை உருவாக்கும் அக்னிமத்தனம் சில இந்து சடங்குகளில் மேற்கொள்ளப்படுகிறது.

கதைகள்

இதிகாசங்களிலும், புராணங்களிலும் அக்கினியோடு தொடர்புடைய பல்வேறு கதைகள் இடம்பெறுகின்றன. கந்தப்பெருமானின் தோற்றம், தேவி பாகவதம் கூறும் 'மாயாசீதை' கதை முதலானவை குறிப்பிடத்தக்கன.

சித்தரிப்பு

அக்னி தேவன் பொதுவாக மற்ற தேவர்களை போல் சாதாரணமாக சித்தரிக்கப்பட்டாலும், அவருடைய உண்மையான உருவம் பின்வாறாக இருக்கிறது. அக்னிக்கு ஏழு கைகளும் இரண்டு தலைகளும், மூன்று கால்கள் கொண்டவராக உள்ளார். இவருடைய திருவாயிலிருந்து அவருடைய நாக்கு தீப்பிழம்பாக வெளி வருகிறது. இவருடைய வாகனம் ஆடு.[1] இவருடைய உடலில் இருந்து ஏழு வித ஒளிக்கிரணங்கள் உதிக்கிறது. அக்னியின் நிறம் சிவப்பாகும்.

மற்றொரு வர்ணனை

அக்கினி மூன்று தலை, நான்கு அல்லது ஏழு கை, ஏழு நாக்கு என்பன கொண்டவனாகவும், ஆட்டுக்கடா வாகனம் உடையவனாகவும், தீச்சுவாலையுடன் கூடிய வேலினை கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். பளபளப்பான குதிரைகள் பூட்டிய ஒளிமயமான தேரானது ஏழு காற்றுக்களான ஏழு சக்கரங்களுடன் அமைந்தது. பொன்மயமான கேசமும் சிவந்த உடலுறுப்புக்களையுமுடைய சாரதியால் செலுத்தப்படுகின்றது.[2]

வேதங்களில் அக்னி

ரிக் வேதத்தின் முதல் சுலோகம் அக்னியை குறித்தே உள்ளது. ரிக் வேதத்தின் அந்த சுலோகம் பின் வருமாறு

अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥

அக்னிம் ஈளே புரோஹிதம். யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம். ஹோதாரம் ரத்னதாதமம்

தேவர்களின் புரோகிதனும், நிவேதனங்களை தேவர்களுக்கு அளிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை நான் போற்றுகிறேன்

அக்னி மனிதர்களுக்கு தேவர்களுக்கும் இடையில் தூதுவராக கருதப்படுகிறார். ஏனெனில் இவரே யாக பொருட்களை மற்ற தேவர்களிடம் சேர்க்கின்றார். இவர் சடங்குகளை நடத்துபவராக குறிக்கபெறுகிறார். இவரோடு தொடர்புடைய வேத சடங்குகள் அக்னிசயனம் மற்றும் அக்னி ஹோத்திரம் ஆகும்.

ரிக்வேதத்தில் பல இடங்களில் அக்னி நீரிலிருந்து எழுபவராகவும், நீரில் உறைபவராகவும் கூறப்படுகிறார். தன்ணீரிலிருந்து தீம்பிழம்பாக வெளிவரும் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றை இதை குறிப்பிடலாம் எனக் கருதப்படுகிறது.

ரிக் வேதத்தில் உள்ள 1028 சுலோகங்களில் இந்திரனுக்கு அடுத்து 218 சுலோகங்கள் அக்னியை குறித்து உள்ளன. இவரது துணையாக சுவாகா தேவி கருதப்படுகிறார்.

இவர் தென்கிழக்கு திசையின் திக்பாலராக(திசைக்காவலர்) கருதப்படுகிரார்.

பௌத்தத்தில் அக்னி

அக்னி தேவன் திபெத்தில் பௌத்தத்தில் தென்கிழக்கு திசையினை பாதுகாக்கும் லோகபாலராக கருதப்படுகிறார். பௌத்த ஹோம பூஜைகள் இவர் முக்கிய பங்கு வகிக்கின்றார்.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.