விடுதலைக்குப் பின் அகன்ற தெலுங்கு மாநிலத்தை உருவாக்குவதற்கான இயக்கம் From Wikipedia, the free encyclopedia
விசாலாந்திரா அல்லது விசாலா ஆந்திரா (Visalandhra movement) என்பது இந்திய விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் தெலுங்கு பேசும் அனைத்து பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே மாநிலமாக அதாவது, அகன்ற ஆந்திராவாக ( தெலுங்கு: విశాలాంధ్ర ) உருவக்க வேண்டும் என்று உருவான ஒரு இயக்கம் ஆகும். தெலுங்கு பேசும் பகுதிகள் அனைத்தையும் ஒரே மாநிலமாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆந்திர மகாசபா என்ற பதாகையின் கீழ் இந்த இயக்கம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியால் வழிநடத்தப்பட்டது.[சான்று தேவை] (இந்தியப் பொதுவுடமைக் கட்சி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரியது . ) இந்த இயக்கம் வெற்றியடைந்தது. அதன்படி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக 1956 நவம்பர் முதல் நாளன்று ஆந்திர மாநிலத்துடன் ஐதராபாத் மாநிலத்தின் (தற்போது தெலங்காணா என்று அழைக்கப்படுகிறது) தெலுங்கு பேசும் பகுதிகளை இணைப்பதன் மூலம் ஆந்திரப் பிரதேசம் என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. (ஆந்திரா மாநிலம் முன்பு 1953 அக்டோபர் முதல் நாளன்று மதராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இருப்பினும், 2014 சூன் இரண்டாம் நாளன்று, தெலங்காணா மாநிலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மீண்டும் பிரிக்கப்பட்டது. இதன் வழியாக விசாலாந்திரா என்ற சோதனை முயற்சி முடிவுக்கு வந்தது. 1956 ஆம் ஆண்டின் பழைய ஆந்திர மாநிலத்தின் அதே எல்லைகளை இப்போது எஞ்சியிருக்கும் ஆந்திரப் பிரதேசம் கொண்டுள்ளது.
மாநில எல்லைகளை மறுசீரமைப்பது குறித்து பரிந்துரைக்க 1953 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசால் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. 1955இல், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு, இந்தியாவின் மாநில எல்லைகளுக்கு ஆணையம் பல பரிந்துரைகளை வழங்கியது. தெலுங்கர்கள் பெரும்பான்மையாக உள்ள தெலுங்கானா பகுதி (ஐதராபாத் மாநிலம்) மற்றும் ஆந்திரா மாநிலம் ஆகியவற்றின் இணைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்களுக்கு ஆணைய அறிக்கை தீர்ப்பளித்தது. அறிக்கையின் 386 வது பத்தியில் கூறப்பட்டுள்ளதாவது. ." இந்தக் காரணிகளை எல்லாம் கருத்தில் கொண்டு, தற்போது தெலங்காணா பகுதியை ஹைதராபாத் என அழைக்கப்படும் தனி மாநிலமாக உருவாக்கினால், ஆந்திரா மற்றும் தெலங்காணாவின் நலன்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். 1961 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு வரும் பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு ஆந்திராவுடன் ஒன்றிணைவதற்காக ஐதராபாத் மாநில சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ".
ஐதராபாத் முதல்வர், புர்குலா ராமகிருஷ்ண ராவ், இந்திய தேசிய காங்கிரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில், பொதுவுடமைக் கட்சிகள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மாநில இணைப்பை ஆதரிப்பதாகக் கூறினார். ஐதராபாத் பிரதேச காங்கிரசுக் குழு தலைவர், காங்கிரசிலுள்ள பெரும்பான்மையானவர்கள் இணைப்பை எதிர்த்ததாகவும், விசாலாந்திரா 1951 இல் அரசியல் பிரச்சினையாக இருக்கவில்லை என்றும் ஐதராபாத் சட்டமன்றம் இந்த பிரச்சினையில் மக்களின் பார்வையை பிரதிபலிக்கவில்லை என்றும் கூறினார். 1955 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 80% காங்கிரஸ் பிரதிநிதிகள் இணைப்பை எதிர்த்ததாகவும் அவர் கூறினார். [1]
ஐதராபாத் சட்டப் பேரவையில் உள்ள 174 சட்டமன்ற உறுப்பினர்களில் 147 பேர் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். 103 உறுப்பினர்கள் ( மராத்தி - மற்றும் கன்னடம் பேசும் உறுப்பினர்கள் உட்பட) இணைப்பை ஆதரித்து, தெலங்காணாவை ஐந்து ஆண்டுகளுக்கு தனி மாநிலமாக வைத்திருக்கும் ஆணையத்தின் பரிந்துரையை எதிர்த்தனர். இந்த இணைப்பிற்கு 29 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலங்காணா பகுதி சட்டமன்ற உறுப்பினர்களில் 59 பேர் இணைப்புக்கு உடன்பட்டனர். ஆனால் 25 பேர் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டமன்றத்தில் உள்ள 94 தெலங்காணா பகுதி சட்டமன்ற உறுப்பினர்களில் 36 பேர் பொதுவுடமைக் கட்சியினர், 40 பேர் காங்கிரஸ் கட்சியினர், 11 பேர் சோசலிஸ்டுகள், 9 பேர் சுயேச்சைகள். தெலங்காணா ஆதரவாளர்கள் தீர்மானத்தில் "மக்களின் விருப்பப்படி" என்ற சொற்றொடரை சேர்க்க கோரியதால் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. [2] [3]
தெலங்காணா மற்றும் ஆந்திராவை இணைக்க 1956 பெப்ரவரி 20 அன்று தெலங்காணா தலைவர்களுக்கும் ஆந்திர தலைவர்களுக்கும் இடையே தெலங்காணாவின் நலன்களை பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளுடன் உடன்பாடு ஏற்பட்டது. [4] [5] தெலங்காணாவில் உள்ள பிரபல செய்தித்தாளான கோல்கொண்டா பத்திரிகா, 8 மார்ச் 1956 இன் தலையங்கத்தில், இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவின் இணைப்பு குறித்த பொதுப் பிரகடனத்திற்குப் பிறகு, ஒப்பந்தம் குறித்து சந்தேகம் தெரிவித்து, “ஆந்திரா அண்ணன் இப்போது எத்தனையோ இனிமையான விசயங்களைச் சொல்லலாம். ஆனால் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளில் உறுதியுடன் இருக்க வேண்டும், எதிர்காலத்தில் அவர்கள் தெலங்காணா தம்பியை சுரண்டக் கூடாது. [6]
நனிநாகரீகன் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு 1956 நவம்பர் முதல் நாளன்று ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தை நிறுவியது.[சான்று தேவை]
1969, 1972 மற்றும் 2000 களில் எழுந்த முக்கிய பல இயக்கங்கள் தெலங்காணாவையும், ஆந்திராவையும் இணைத்த நடவடிக்கையை செல்லாததாக்க முயன்றன. தெலங்காணா இயக்கம் பல தசாப்தங்களாக உயிர்பெற்று ஆந்திர பிரதேசத்தின் தெலங்காணா பகுதியை பிரித்து புதிய ஒரு மாநிலத்தை உருவாக்குவதற்கான பரவலான அரசியல் கோரிக்கையாக மாறியது. [7] 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014, இந்திய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் தெலுங்கானா 2014 சூன் இரண்டாம் நாள் இந்தியாவின் 29வது மாநிலமானது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.