From Wikipedia, the free encyclopedia
மேவாரின் சிசோதியர்கள் (Sisodias of Mewar) இது மேவார் இராச்சியத்தை ஆண்ட பல இராஜ்புத்ர குலங்களில் ஒன்றாகும். இது பின்னர் பிரித்தானிய இராச்சியத்தில் உதய்பூர் இராச்சியம் என்று அழைக்கப்பட்டது.[1] மேவாரின் சிசோதிய குலமானது, "மேவார் இல்லம்" என்றும் அழைக்கப்படுகிறது. குகில மன்னன் இரணசிம்மனின் மகனான இரகாபாவிடம் வம்சம் அதன் வம்சாவளியைக் குறிக்கிறது. குகிலர்களின் இந்த கிளைக் குடும்பத்தின் வாரிசான அம்மிர் சிங், தில்லியின் துக்ளக் சுல்தான்களை தோற்கடித்த பின்னர் மேவார் இராச்சியத்தை மீண்டும் நிறுவினார்.[2][3]
13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தில்லி சுல்தானகத்தின் சித்தோர்கார் படையெடுப்பைத் தொடர்ந்து, ஆளும் குகில வம்சம் மேவாரிலிருந்து இடம்பெயர்ந்தது.[4] குகில வம்சத்தின் ஒரு கிளையின் வாரிசான ஹம்மிர் சிங், பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றார். துக்ளக்கின் படைகளை தோற்கடித்த பின்னர் வம்சத்தை மீண்டும் நிறுவினார். மேலும் தில்லியின் முஸ்லிம் படைகளிடமிருந்து இன்றைய ராஜஸ்தானைக் கைப்பற்றி 'ராவல்' என்பதற்குப் பதிலாக 'ராணா' என்ற அரச பட்டத்தைப் பயன்படுத்திய தனது வம்சத்தில் முதல் அரசனானார். இதன் மூலம் சிசோதிய குலத்தை நிறுவினார்.[5][3][6]
ஹம்மிர் சிங்கைத் தொடர்ந்து ராணா கும்பா, ராணா ரைமல்[4] போன்ற புகழ்பெற்ற மற்றும் துணிச்சலான பல ஆட்சியாளர்கள் பதவியில் இருந்தனர். (முதலாம் உதய் சிங் தவிர).[7] இருப்பினும், முகலாயப் பேரரசர் பாபர் கான்வா போரில் ராணா சங்காவைத் தோற்கடித்ததின் விளைவாக, மேவார் மற்றும் பல ராஜபுத்திர சாம்ராஜ்யங்களின் கௌரவம் வெகுவாகக் குறைந்தது. இரண்டாம் இரத்தன் சிங், விக்ரமாதித்ய சிங், வன்வீர் சிங் போன்ற இவரது பலவீனமான வாரிசுகள் குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்தனர்.[8][9]
பின்னர் ஆட்சிக்கு வந்த வாரிசுகளான இரண்டாம் உதய் சிங், மகாராணா பிரதாப், முதலாம் அமர் சிங் ஆகியோர் நீண்ட காலமாக முகலாயர்களை எதிர்த்தனர்.[10][11][12][13]இறுதியில் அமர் சிங் தனது வளங்கள் மிகவும் தீர்ந்ததால் சரணடைய வேண்டியதாயிற்று. அவர் முகலாயர்களின் அடிமையானார்.[14] அவரது வாரிசான இரண்டாம் கரன் சிங்கின் கீழ் பல கட்டிடத் திட்டங்கள் நடந்தன.[15] முதலாம் ஜகத் சிங்கின்ஆட்சியின் போது, அவருக்கும் பேரரசர் ஷாஜகானுக்கும் இடையே சில பதற்றம் இருந்தது. ஆனால் அவர்கள் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து போரைத் தவிர்த்தனர்.[16]
முதலாம் ராஜ் சிங், பல சந்தர்ப்பங்களில் பேரரசர் ஔரங்கசீப்பிற்கு எதிராகப் போரிட்டு மிகவும் வெற்றிகரமான ஆட்சியாளராக இருந்தார்.[17][18][19] இதை அவரது வாரிசான ஜெய் சிங்கும் தொடர்ந்தார்.[4]
முதலாம் ராஜ் சிங், இரண்டாம் அமர் சிங், இரண்டாம் சங்கிராம் சிங் ஆகியோருக்குப் பிறகு அடுத்த இரண்டு ஆட்சியாளர்கள் தங்கள் பிராந்தியத்தில் அமைதியையும் செழிப்பையும் கொண்டிருந்தன. ஆனால் பின்னர் பலவீனமான மற்றும் முக்கியமற்ற வாரிசுகளின் நீண்ட வரிசை ஏற்பட்டது.[20][21][22] இந்த காலகட்டத்தில் இராஜபுதனத்தின் மீது ஜெய்பூர் இராச்சியமும் பின்னர் மராத்தியர்களும் ஆதிக்கம் செலுத்தினர்.[23] பீம் சிங் மேவார் ஆங்கிலேயர்களின் பாதுகாப்பை ஏற்று அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது.[24][25][26]
1818 வாக்கில், ஓல்கர், சிந்தியா மற்றும் டோங்க் படைகள் மேவாரைக் கொள்ளையடித்து, அதன் ஆட்சியாளரையும் மக்களையும் பாழ்படுத்தியது.[27] 1805ஆம் ஆண்டிலேயே, மேவார் மகாராணா பீம் சிங் உதவிக்காக ஆங்கிலேயர்களை அணுகினார். ஆனால் சிந்தியாவுடனான 1803 ஒப்பந்தம் ஆங்கிலேயர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதைத் தடுத்தது.[27] ஆனால் 1817 வாக்கில், ஆங்கிலேயர்களும் இராஜபுத்திர ஆட்சியாளர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஆர்வமாக இருந்தனர். மேலும் 1818 சனவரி 13 அன்று மேவாருக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் (பிரிட்டன் சார்பாக) இடையே நட்பு, கூட்டணி மற்றும் ஒற்றுமை ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.[27][28]
ஒப்பந்தத்தின் கீழ், பிரித்தானிய அரசாங்கம் மேவார் பிரதேசத்தைப் பாதுகாக்க ஒப்புக்கொண்டது. அதற்கு ஈடாக மேவார் பிரித்தானியர்களின் மேலாதிக்கத்தை ஒப்புக்கொண்டது. மேலும், பிற மாநிலங்களுடனான அரசியல் தொடர்புகளிலிருந்து விலகி, அதன் வருவாயில் நான்கில் ஒரு பங்கை 5 ஆண்டுகளுக்கு திரையாக செலுத்த ஒப்புக்கொண்டனர். நிரந்தரமாக எட்டில் மூன்று பங்கு.[28]
பூபால் சிங் உதய்பூர் இராச்சியத்தின் கடைசி ஆட்சியாளராக இருந்தார்.[29] இவர், 1947இல் பிரித்தானிய இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினைக்குப் பிறகு,[30] ஏப்ரல் 1949இல் இந்திய ஒன்றியத்தில் சேருவதற்கான இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய இளவரசர்களில் முதன்மையானவராக இருந்தார்.[31] 1971இல் இந்திய அரசாங்கம் அனைத்து அரச பட்டங்களையும் ரத்து செய்யும் வரை இவரது மகன் பகவத் சிங் உதய்பூரின் பெயரிடப்பட்ட ஆட்சியாளராக இருந்தார்.[32]
தற்போது மேவார் மாளிகையின் தலைமை யாருக்கு என்பது பிரச்ச்னையாக உள்ளது. பகவத் சிங்கின் இரு மகன்களான மகேந்திர சிங் மேவார் & அரவிந்த் சிங் மேவார் ஆகிய இருவரும் உரிமையைக் கோருகின்றனர். குடும்பத்தின் இரு பிரிவுகளுக்கிடையேயான உறவு பதற்றமாகவே இருந்து வருகிறது.[33][34] சர்வதேச பத்திரிகைகளில், அரவிந்த் சிங் மேவார் குடும்பத்தின் தற்போதைய தலைவர் என்று குறிப்பிடப்பட்டாலும், உதய்பூரின் உள்ளூர் பழைய உன்னத குடும்பங்கள் மகேந்திர சிங் மேவாரை சரியான தலைவராக அங்கீகரிக்கின்றன.[35][36]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.