From Wikipedia, the free encyclopedia
மெய்யியல் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே மெய்யியல் எனப்படும். மெய்யியலானது இருப்பு, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி தொடர்பான பொதுவானதும், அடிப்படையானதுமான பிரச்சனைகள் பற்றிய படிப்பு என வரையறுக்கப்படுகிறது.[1][2][3]
இயற்கை விஞ்ஞானம் மிக வேகமாய் முன்னேறிச் செல்கிறது. எல்லாத் துறைகளிலும் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாகி வருகிறது. அது தத்துவவியல் (Philosophy) அனுமானங்களின்றி இருக்கலாமென நினைக்க முடியவே முடியாது.[4]
மெய் என்ற உடலில் உணர்வு என்ற உண்மையைப் புத்தியால் தேட அறிவு என்ற ஆற்றல் வெளிப்படும் பொழுது தத்துவம் என்ற உண்மை உணர்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்களின் விளக்கதை உணர்வு பூர்வமாக அறியவைப்பது மெய்யறிவு. - (சுபஸ்ரீ ஸ்வாமிகள்)
மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், எது அழகு, கடவுள் என்று ஏதும் உண்டா, என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை, உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம், விவாதம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.
தற்காலத்தில் அறிவியல் என்று அறியப்படும் துறை சிறப்புற்று வளரும் முன்னர், மெய்யியல் துறைதான் முன்னணியில் இருந்த அறிவுத்துறை ஆகும். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்தியர்களும், சீனர்களும், செருமானியர்களும், கிரேக்கர்களும் பிற உலக மாந்த இனங்களும் பலவாறாக, அடிப்படையாகச் சிந்தித்து தொகுத்து வைத்த கருத்துக்கள்தாம் மெய்யியலின் தொடக்கம். மெய்யியல் என்பது ஆங்கிலத்தில் Philosophy (ஃபிலாசஃபி) என்று கூறப்படுவது. இச்சொல் கிரேக்கச் சொல்லாகிய Φιλοσοφία (philo-sophia) என்பதில் இருந்து பெற்றது. இசொல்லின் பொருள் அறிவின் பால் காதல் (அறிவால் ஈர்க்கபடும் துறை) என்பதாகும்.
மெய்யியல் என்ற துறை சார்ந்த ஆய்வு செருமானியர் தொடக்கம் மேற்குலகிலேயே தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவை காலனித்துவ ஆட்சி செய்த போது அவர்கள் சீன இந்திய சிந்தனைகளில் பலவற்றை மெய்யியல் சிந்தனைகளாக அடையாளப்படுத்தினார்கள். இவ்வாறே பின்னர் ஆப்பிரிக்க, அமெரிக்க முதற்குடிமக்கள் சிந்தனைகளில் இருந்தும் மெய்யியல் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் காலனித்துவத்துக்கு உட்பட்டவர்களும் தமது சிந்தனைகளை இவ்வாறு அடையாளப்படுத்தியும், இத் துறை சார்ந்தும் செயற்படத் தொடங்கினர்.
காலத்தாலும் இடத்தாலும் மெய்யியல் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் வேறுபாடுகள் உண்டு. மாந்த இன வரலாற்றில் ஏறத்தாழ 6,000-7,000 ஆண்டுகளாகத்தான் சற்று விரிவாக அறியத்தக்க நாகரிகங்கள் அறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள், எகிப்தியர்கள், எலாமைட், அக்காடியர்கள், அசிரீயர்கள் போன்று நடுகிழக்கு நாடுகளில் வாழ்ந்த மக்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மெய்யியல் கூறுகள் கொண்டவை.
சீன மெய்யியல் சீன நாகரிகத்தில் தோன்றிய எடுத்தாளப்பட்ட மெய்யியல் சிந்தனைகளைக் குறிக்கின்றது. 3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான சீன மொழியில் எழுதப்பட்ட சிந்தனைகளைச் சீன மெய்யியல் கொண்டிருக்கின்றது. சீன மெய்யியல் இந்திய, இசுலாமிய, மேற்குலக, ஆபிரிக்க மெய்யியல்களில் இருந்து பல முக்கிய வழிகளில் வேறுபடுகிறது. சீன மெய்யியல் இயற்கையை சார்ந்தது, காரியத்தையும் நிர்வாகத்தையும் முக்கியப்படுத்துவது. இந்திய மெய்யியல் போலன்றி அது சமயத்தை அல்லது கடவுள்களை முதன்மைப்படுத்தவில்லை. வாழ்க்கை சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவதை விடுத்து ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தை இவ்வுலகில் உருவாக்குவத்தே சீன மெய்யியலின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. திறமான நிர்வாகம் மூலம் ஒழுக்கத்தையும் (order) ஒத்துழைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தையும் உருவாக்க சீன மெய்யியல் விளைகிறது. அரசின் நிர்வாகத்தில் போரும் ஒரு நிகழ்வாக இருந்ததால், போரியலும் சீன மெய்யிலின் ஒரு முக்கிய அங்கம்.
மெய்யியல் இருவகைப் படுகின்றது. அவையாவன, கிழக்கத்திய மெய்யியல் மற்றும் மேற்கத்திய மெய்யியல் என்பனவாகும். கருத்தளவிலும் விளக்கமுறையிலும் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கின்றது.
கிழக்கத்திய மெய்யியல் (Eastern philosophy) என்பது ஆசியா கண்டத்தில் தோன்றி வளர்ந்த சீன மெய்யியல், ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், இந்திய மெய்யியல், கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் இசுலாமிய மெய்யியலையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை "மேற்கத்திய மெய்யியலாக" கருதப்படுவதும் உண்டு.
கிழக்கத்திய மெய்யியலுக்குள் அரபி மெய்யியல் மற்றும் யூத மெய்யியலையும் சேர்த்துக் கருதுவது உண்டு. இக்கருத்து புவியியல் அடிப்படையை மட்டும் கொண்டிருப்பதில்லை. மாறாக, கருத்தளவிலும் விளக்கமுறையிலும் மேற்கத்திய மரபுக்கும் கிழக்கத்திய மரபுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன என்னும் அடிப்படையிலும் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கிறது.
மேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்திய, சீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட, அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.
அழகியல் மெய்யியலின் ஒரு பிரிவாகத் தொன்றுதொட்டு வளர்ச்சியுற்று வந்துள்ளது. கிரேக்க இலக்கியத்தில் உள்ள மெய்யியல் கோட்பாடுகள் அழகியலுக்கு அடிப்படையாக இருக்கின்றன. மகிழ்ச்சியை ஒரு பொருளிலோ, எழுத்திலோ அல்லது ஒலியிலோ சித்திரிப்பது என்பது கலைஞனின் குறிக்கோளாக உள்ளது. பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் முதலானவற்றை நுட்பமாக உண்மையாகப் படைப்பதற்கு கலை என்று பெயர். இதில் போலச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுமையான மெய்யியல் கலையில் இருத்தல் அவசியம். இக்கருத்தையே அரிஸ்டாட்டில் (பொ.ஊ.மு. 384–322) வலியுறுத்தி வந்துள்ளார்.
காண்ட் (1724-1804) போன்ற மெய்யியல்வாதிகள்,அழகியலானது பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதாகும். அறிவுக்கும் கற்பனைக்கும் பொருந்தவல்ல பொருள்களே அழகுடையனவாகக் கருதப்பட வேண்டும் என்றனர்.
ஹெகல் முதன்முதலில் ‘அழகியல்’ என்ற சொல்லாட்சியைக் கையாளுவதற்கு முன்னர், காண்ட் ‘அழகியல்’ என்ற இச்சொல்லை ‘புலனறிவு’ என்னும் பொருளிலேயே பயன்படுத்தினார். எனினும், ஹெகல் என்பார் அழகியலைக் கோட்பாட்டுத் தொடர்புடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார்.[5]
காண்ட்டின் மெய்யியல் கோட்பாடுகள் பலவும் அழகியல் வரலாற்றில் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன. அவர் தமது ‘தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்’ என்ற புத்தகத்தில் எடுத்துரைக்கும் பல்வேறு கருத்துக்களை மேலும் தெளிவாகவும் ஆழமாகவும் ஹெகல் அதை முன்வைக்கின்றார். உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப்பகுப்பாய்வு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை ஹெகல் பயன்படுத்திக் கொண்டார். காண்ட்டின் அழகியல் கோட்பாடுகள் அகவயப்பட்ட அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படும். இருப்பினும், அறிவியல் அல்லது புலச்சார்பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபாடு காட்டினார். ஹெகலோ அதனை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கியல் கொள்கை அடிப்படையில் வெளிப்படுத்தினார். காண்டின் அகவய புலனனுபவ முறையானது ஹெகலின் இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறவயக் கருத்தியலாக வெளிப்படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளடக்கமாக அழகியல் விளங்குகிறது.
தமிழ் மொழியில் தொல்காப்பியர் உலகின் தோற்றத்தை ஐம்பூதங்களின் உறவு என்று குறிப்பிடுகிறார். திணையியலின் மையமாக விளங்கும் பொருளுக்கும் கருத்துக்கும் இடையேயான உறவுநிலையினைத் தொல்காப்பியம் பல இடங்களிலும் சுட்டிக்காட்டி உள்ளது. நிலமும் பொழுதும் உடைய முதற்பொருள் கருப்பொருள்களுடன் உறவுபூண்டு உரிப் பொருளாக மாற்றம் பெறுகிறது. அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள உறவு வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது எனவும் உயிருக்கும் மெய்க்குமான உறவு இயக்கத்தைத் தீர்மானிக்கிறது எனவும் தொல்காப்பியம் வரையறுத்துள்ளது
‘மெய்யோடு இயையினும் உயிரியல்திரியா’
என்னும் எழுத்ததிகார நூற்பா (10) வில் மெய்யுடன் உயிர் உறவு கொள்வதை நுட்பமாகத் தொல்காப்பியம் வெளிப்படுத்துகிறது.
‘மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே’
என்ற வரி (எழுத்.18) களில் மெய்யின் மூலமாக உயிர் தோன்றுவதை விளக்குகிறது. இவ்வாறு உயிருக்கும் மெய்யுக்குமான திணையியல் சார்ந்த மெய்யியல் உறவைத் தொல்காப்பியம் விளக்கியுரைக்கின்றது.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.